வெளிநாட்டு வேலைவாய்ப்பினை மனித வியாபாரமாகவே முகவர்கள் நடத்துகின்றனர் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி சுட்டிக்காட்டு!

வெளிநாட்டு வேலை பெற்றுச் செல்வோர் தொடர்பிலான தொழில் பாதுகாப்பு தொடர்பில் இருக்கின்ற சந்தேகங்கள் இன்னும் தீர்ந்த நிலையில் இல்லை என்றே தெரிய வருகின்றது.
வெளிநாட்டு வேலைவாய்ப்பினை மக்களுக்கான ஒரு வேலைவாய்ப்பாகக் கருதாமல், அதனை மனித வியாபாரமாகக் கருதி, அதில் ஈடுபடுகின்ற முகவர் நிலையங்கள் தொடர்பில் அமைச்சு கடுமையான நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும், இந்த நாட்டுக்கு மிக அதிகளவில் அந்நியச் செலாவணியை ஈட்டித் தருகின்ற இத்துறை தொடர்பில் மேலும் அதிக அவதானங்களைச் செலுத்த வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
இவ்வாண்டுக்கான வரவுசெலவு திட்டத்தின் காணி மற்றும் நாடாளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சு, தொலைத் தொடர்புகள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு, தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் பற்றிய அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சு ஆகியன தொடர்பிலான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்;
குவைத் நாட்டில் 2 வருடங்களுக்கு மேலாகப் பணிபுரிந்திருந்த 6 பெண்களும், ஒரு வருடத்திற்குக் குறைவான காலமாகப் பணிபுரிந்திருந்த 46 பெண்களுமாக வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த 52 பெண்கள், அவர்கள் பணியாற்றியிருந்த குவைத் நாட்டு வீடுகளில் இழைக்கப்பட்ட கொடுமைகள் தாங்காது அண்மையில் குவைத் நாட்டிலுள்ள இலங்கைத் தூதரகத்தினால் கடந்த மாதம் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர் எனத் தெரிய வருகின்றது. இவர்களில் 35 பெண்கள் தங்களது சொந்த செலவிலும், 44 பெண்கள் தற்காலிகக் கடவுச் சீட்டுகளிலுமே இலங்கை வர நேர்ந்துள்ளது.
அதேபோன்று கடந்த வருடம் ஏப்ரல் மாதம் 18ஆம் திகதி சவூதி அரேபியாவுக்கு பணிப் பெண் தொழிலுக்காகச் சென்றுள்ள வவுனியா, மாறம்பைக்குளத்தைச் சேர்ந்த 54 வயதுடைய ஒரு பெண், அங்கு தொல்லைகள் தாளாது, கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 12ஆம் திகதி அங்கேயே தற்கொலை செய்துகொண்ட நிலையில் அவரது சடலம் நான்கு மாதங்கள் கழித்து – அதாவது கடந்த வருடம் டிசெம்பர் மாதம் 29ஆம் திகதியே இலங்கைக்கு கொண்டுவரப்பட்டிருந்தது.
இந்தப் பெண் தொழிலுக்குச் சென்று தற்கொலை செய்து கொண்டு இறந்து, சில மாதங்கள் கடந்திருந்த நிலையிலும் அவர் பற்றிய தகவல்களை வெளியிடவோ, அவரைப்பற்றி ஆராய்ந்து பார்க்கவோ குறிப்பிட்ட முகவர் நிலையம் தவறிவிட்டுள்ளதாகவே கூறப்படுகின்றது.
எனவே, இத்தகைய நிலைமைகள் இனியும் ஏற்படாத வகையில் வெளிநாட்டுத் தொழிற்துறையானது எமது மக்கள் நலன்சார்ந்து பேணப்படக்கூடிய தொழிற்துறையாக மேம்படுத்த வேண்டியத் தேவை இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.
Related posts:
|
|