வெடுக்குநாறி விவகாரம் – அமைச்சரவையில் உணர்வுகளை வெளிப்படுத்தினார் அமைச்சர் டக்ளஸ் !

Tuesday, April 4th, 2023

வெடுக்குநாறி விவகாரத்தில் சிலைகள் உடைக்கப்பட்டபோது ஏற்பட்ட உணர்வுகளைவிட, கடந்த சில தினங்களில் வெளிப்படுத்தப்பட்ட சில தரப்புக்களின் வியாக்கியானங்கள் எமக்கு ஏற்படுத்திய உணர்வுகள் ஆழமானவை என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் அதிருப்தி வெளியிடப்பட்ட நிலையில்,

குறுக்கிட்ட ஜனாதிபதி எதிர்வரும் வாரங்களில் விரிவாக கலந்துரையாடி சரியான தீர்மானம் மேற்கொள்ளப்படும் என்று உறுதியளித்துள்ளார்.

வெடுக்குநாறி விவகாரம் தொடர்பாக நேற்று(03.04.2024) இடம்பெற்ற அமைச்சரவையில் பிரஸ்தாபிக்கப்பட்ட நிலையிலேயே குறித்த விடயங்கள் தெரிவிக்கப்பட்டன.

குறித்த அமைச்சரவை கூட்டத்தில் தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,

“வெடுக்குநாறி மலையை 2018 ஆம் ஆண்டு தொல்லியல் திணைக்களம் பாதுகாக்கப்பட வேண்டிய பிரதேசமாக அடையாளப்படுத்தியிருந்தது. (ஆனாலும் இதுவரை அதுதொடர்பான வர்த்தமாணி அறிவித்தல் வெளியிடப்படவில்லை)

தொடர்ச்சியாக, 2019 ஆண்டிலிருந்து வெடுக்குநாறி மலையில் அமைந்திருக்கும் புராதன ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் பூஜை வழிபாடுகளுக்கு தொல்லியல் திணைக்களத்தினால் இடையூறு ஏற்படுத்தப்பட்டு வருகின்றது.

இந்நிலையிலேயே 2020 ஆம் ஆண்டு நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. குறித்த வழக்கினை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிமன்றம் பொது மக்கள் பூஜை வழிபாடுகளில் ஈடுபடுவதற்கு எந்தவிதமான தடை உத்தரவுகளையும் பிறப்பிக்காத நிலையில் சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அனுப்பி வைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இதுதொடர்பாக சட்டமா அதிபர் தரப்புக்களுடன் கலந்துரையாடிய போது, குறித்த வழக்கு கோவை இன்னும் தமக்கு கிடைக்கவில்லை எனவும், கிடைத்தவுடன் உரிய ஆலோசனைகள் வழங்கப்படும் என்று தெரிவித்திருக்கிறார்கள்.

ஆக, வெடுக்குநாறி விவகாரத்தில் நீதிமன்றம் எந்தவிதமான தடை உத்தரவுகளையும் வழங்காத போதிலும், வழக்கு நிலுவையில் இருப்பதை காரணம் காட்டி, உடைக்கப்பட்ட சிலைகளை மீளப் பிரதிஸ்டை செய்வதற்கு இடையூறுகள் ஏற்படுத்தப்படுகின்றன.

அதேவேளை, குருந்தூர் மலையில் விகாரை அமைப்பதற்கு இடைக்கால தடையை நீதிமன்றம் விதித்திருக்கின்ற நிலையிலும் விகாரை கட்டி முடிக்கப்பட்டிருப்பதை ஊடகங்கள் வெளிப்படுத்தியிருக்கின்றன.

இவ்வாறான சம்பவங்கள் தமிழ் மக்களை மாத்திரமல்ல, நியாயமாகவும் நடுநிலையாகவும் சிந்திக்கும் அனைவருக்கும் வேதனையை ஏற்படுத்தும்.

இன்றைய அமைச்சரவையில்கூட உண்மை மற்றும் தேசிய நல்லிணக்கம் தொடர்பான அமைச்சரவை பத்திரம் விவாதத்திற்கு வந்திருக்கிறது. இவையெல்லாம் அர்த்தபூர்வமானவையா என்ற எண்ணத்தினை நடக்கின்ற சம்பவங்கள் தோற்றுவிக்கின்றன” என்று தெரிவித்தார்

இந்நிலையில் குறுக்கிட்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இந்த விடயம் தொடர்பாக தமிழ் மக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கின்ற அதிருப்திகளையும் அதில் இருக்கின்ற நியாயத்தினையும் புரிந்து கொள்வதாகவும் எதிர்வரும் வாரங்களில் சம்மந்தப்பட்ட அனைவருடனும் கலந்துரையாடி சரியான தீர்மானத்தினை மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதே தன்னுடைய நிலைப்பாடு எனவும் தெரிவித்தார். – 04.03.2023

Related posts:


கூட்டமைப்பின் ஏமாற்றுவித்தை மக்கள் மத்தியில் அம்பலப்பட்டுவருகின்றது - டக்ளஸ் தேவானந்தா
காங்கேசன்துறை ஜனாதிபதி மாளிகையை வடக்கு மாகாண சபையிடம் ஒப்படைக்கவும் - ஜனாதிபதியிடம் டக்ளஸ் தேவானந்தா...
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை முருகண்டி பிள்ளையார் ஆலய நிர்வாகிகள் சந்தித்து கோரிக்கை முன்வைப்பு...