வீதிச் சோதனைச் சாவடிகள் மட்டும் தேசிய பாதுகாப்புக்கு உதவாது – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி தெரிவிப்பு!

Friday, June 21st, 2019

அண்மையில் நடத்தப்பட்டிருந்த உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதலுக்குப் பின்னர், அத் தாக்குதல் தொடர்பில் பல்வேறு தரப்பினரும் பல்வேறு கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

இதில் குறிப்பாக, முஸ்லிம் தரப்பினரில் பெரும்;பாலானவர்கள் தெரிவிக்கின்ற ஒரு விடயம், குறித்த முஸ்லிம் அடிப்படைவாதக் குழு பற்றித் தாங்கள் ஏற்கனவே பாதுகாப்பு அமைச்சு உள்ளடங்கலாக பொறுப்பு கூற வேண்டியவர்களுக்கு அறிவித்திருந்தோம் என்பது.

இதில் ஓர் உச்ச கட்டமாக, மாவனல்லை, தனாகம பகுதியில் வாழ்ந்து வருகின்ற மொஹமட் ராசிக் மொஹமட் தஸ்லிம் என்பவர் மீதான முஸ்லிம் அடிப்படைவாதிகளது கொலை முயற்சியை எடுத்துக் கொள்ள முடியும். அடிப்படைவாதிகளின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அந்தச் செயற்பாடுகள் தொடர்பில் பாதுகாப்புத் தரப்பினரக்கு அறிவித்திருந்த நிலையிலேயே இவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இந்தச் சம்பவம் கடந்த மார்ச் மாதம் 09ஆம் திகதி அதிகாலை 4.30 மணிக்கு இடம்பெற்றிருந்தது. ஆனால் இந்தச் சம்பவம் தொடர்பில் உரிய அவதானங்கள் செலுத்தப்பட்டிருக்கவில்லை.

கடந்த வருடம் யூன் மாதம் 19ஆம் திகதி, மனித உரிமைகள் ஊடாக சுதந்திரத்தைக் காப்பதற்கான இலங்கை முஸ்லிம்களின் அமைப்பினர் ஓர் ஊடக மாநாட்டை நடத்தி, முஸ்லிம் அடிப்படைவாத அமைப்புகள் குறித்து எச்சரித்து, அந்த அமைப்புகள் தடை செய்யப்பட வேண்டும் எனவும், அத்தகைய அமைப்புகளின் செயற்பாடுகள் நாட்டிலுள்ள ஏனைய முஸ்லிம் மக்களுக்கும், இனங்களுக்கும் இடையில் பாரிய சிக்கல்களைத் தூண்டி வருவதாகவும் குறிப்பிட்டிருந்தனர். அது தொடர்பிலும் உரிய அவதானங்கள் மேற்கொள்ளப்படவில்லை.

மேலும், இத் தாக்குதல் தொடர்பில் இந்த வருடம் ஏப்ரல் மாதம் 4ஆம் திகதியும், 20ஆம் திகதியும் இந்திய புலனாய்வுப் பிரிவினரால் இலங்கை புலனாய்வுப் பிரிவினருக்கு அறிவிக்கப்பட்டதாகக் கூறப்படுகின்றது. அது தொடர்பிலும் உரிய அவதானங்கள் எடுக்கப்படவில்லை.

தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்டு, பல உயிர்கள் காவு கொள்ளப்பட்டதன் பின்னர், இப்போது இத்தகைய முயற்சிகளை எடுத்து வருகின்றீர்கள்.

தேசிய பாதுகாப்பினை கருத்தில் கொண்டு, கத்தி, வாள், அரிவாள், கோடரி, குண்டுகள், துப்பாக்கிகள் என ஆயுதங்களைக் கண்டு பிடித்தும், படையிரையும், பொலிஸாரையும் அதிகளவில் குவித்து, சோதனைகளை நடத்தியும், வீதிச் சோதனைகளைப் போட்டும் மாத்திரம் தேசிய பாதுகாப்பினை உறுதி செய்து கொள்ள முடியாது என்பதை இந்த இடத்தில் மீண்டும் வலியுறுத்த விரும்புகின்றேன்.

ஆகவே, எல்லாவற்றையும் கண்டு பிடித்தோம், அடிப்படைவாத அமைப்புகளுடன் தொடர்புடைய எல்லோரையம், கைது செய்தோம், அடிப்படைவாத அமைப்புகளைத் தடை செய்தோம் என்பதோடு மட்டும் நின்று விடக்கூடாது. இத்தகைய அமைப்புகளோ, குழுக்களோ, தனி நபர்களோ அத்தகைய நிலைமைக்குத் தள்ளப்பட்டு விடுகின்ற சூழ்நிலைகள் கண்டறியப்பட்டு, அவற்றையும் முதலில் இல்லாது ஒழிக்க வேண்டும். என்பதையே நான் வலியுறுத்துகின்றேன் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நடைபெற்ற 1979ஆம் ஆண்டின் 48ஆம் இலக்க பயங்கரவாதத் தடுப்பு தற்காலிக ஏற்பாடுகள் சட்டத்தின் கீழான கட்டளை தொடர்பில் இடம்பெறுகின்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

Related posts:

வடக்கின் ரயில் கடவைகளின் விபத்துகளைக்  கட்டுப்படுத்த  நடவடிக்கை அவசியம்- டக்ளஸ் தேவானந்தா!
ஆணைக்குழுக்களின் உருவாக்கம் என்பது நாட்டின் முன்னேற்றம் கருதியதானதாக அமைய வேண்டும் - டக்ளஸ் தேவானந்த...
அரசாங்கத்தின் திட்டங்களை பயனபடு்த்திக் கொள்ளத் தவற வேண்டாம் - இடையூறுகள் இருப்பின் அறியத்தாருங்கள் -...

யாழில் அதிகரிக்கும் குற்றச் செயல்களின் பின்னணிகள் கண்டறிதல் அவசியம் -   டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து
பாலியாற்றை பாதிப்புகளுக்கு உட்படுத்தாமல் பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்கவும் - சபையில் டக்ளஸ் தேவானந...
தேசிய நல்லிணக்கத்தின் ஊடாக  மக்களுக்காய் பெரும்பணி செய்தவர்கள் நாம் - பூநகரியில் டக்ளஸ் எம்.பி சுட்ட...