வீட்டுத் திட்டத்திலும் விரும்பாத சர்வதேச சர்ச்சை – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா எம்.பி தெரிவிப்பு!

பொருத்து வீடு வருகின்றது என்ற ஒரு காலத்தில் ‘பொருத்து வீடு எமது மக்களுக்கு பொருத்தமாகாது’ எனக் கூக்குரலிட்டு, அதைத் தடுத்தவர்கள், கல் வீடு வரும் எனக் கூறிக் கூறியே இன்று கல்வீடும் கானல் நீராகிப் போய்விட்டது. சுயலாப அரசியல்வாதிகள், எமது மக்களின் எல்லா பிரச்சினைகளையும் தீர்ப்பதற்குத் திராணியற்று, இறுதியில் அந்த பிரச்சினைகளைத் தீர்க்கும் அனைத்துப் பொறுப்புகளையும் விதியே என்று சர்வதேசத்தின் தலையில் சுமத்திவிடுவதுபோல், இப்போது இந்த வீட்டுப் பிரச்சினையும் சர்வதேசத்திடம் மாட்டிக் கொண்டு இந்தியாவா? சீனாவா? என இழுபட்டுக் கொண்டிருக்கின்றது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் நடைபெற்ற இணை மனை சொத்தாண்மை விசேட ஏற்பாடு சட்டமூலம் நிர்மாணத் தொழில் அபிவிருத்திச் சட்டத்தின் கீழான கட்டளைகள் விவாதத்தில் கலந்துகொண்டபின்னர் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில் –
கிட்டத்தட்ட ஆறு அமைச்சுக்கள் இந்த நாட்டில் வீடமைப்புத் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றன. இதில் மலையக புதிய கிராமங்கள் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சு மலையகத் தோட்டப் பகுதிகள் சார்ந்த வீடமைப்புத் திட்டங்களை மேற்கொண்டு வருகின்றது. அது தவிர, வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சு, மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு, மீள்குடியேற்ற, புனர்வாழ்வு அமைச்சு, தேசிய நல்லிணக்க அமைச்சு, கடற்றொழில் நீரியல்வளத்துறை அமைச்சு என இந்த அமைச்சுகள் ஏதோவொரு வகையில் வீடமைப்புத் திட்டங்களை மேற்கொள்வதில் பங்களிப்பினை வழங்குகின்றன.
ஆனால், வடக்கு மாகாணத்தைப் பொறுத்த வரையில், இந்த அமைச்சுக்களின்; மூலமான வீடமைப்பு பங்களிப்புகள் தற்போதைய நிலையில் பூச்சியமாகவே இருக்கின்றது. வீடமைப்புத் திட்டங்கள் வருவதாகக் கூறப்படுகின்ற போதிலும், ‘வரும்! ஆனால் வராது!’ என்ற நிலைமையே அங்கு தொடர்கின்றது.
Related posts:
|
|