வீட்டுத் திட்டங்கள் மக்களை கடனாளிகளாக்கிவிட்டது – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்பி சுட்டிக்காட்டு!

Saturday, March 16th, 2019

2015ஆண்டிலிருந்து இதுவரையில் 1,273 மாதிரிக் கிராமங்கள் அமைப்பதற்கானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், இதுவரையில் 170ற்கும் மேற்பட்ட மாதிரிக் கிராமங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது.

அந்த வகையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும் வீடமைப்புத் திட்டங்கள் தொடர்பில் அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்கள் அவதானம் செலுத்தி வருவது வரவேற்கத்தக்கது.

இருப்பினும், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மிகுந்த பொருளாதாரப் பாதிப்புகளுக்கு உட்பட்டு வாழ்கின்ற மக்களுக்கு கடன் உதவித் திட்டங்கள் இன்னமும் ஜீரணித்துக் கொள்ள இயலாத நிலையிலேயே இருக்கின்றன. அந்த வகையில் ஏனைய வீடமைப்பு உதவித் திட்டங்களே அவர்களுக்குத் தற்போதைய நிலையில் பொருத்தமானவையாக இருக்கின்றன.

மேலும், ஏற்கனவே கடன் பெற்று வீடமைப்பு நடவடிக்கைகளை முடித்துக் கொள்ள இயலாத நிலையில் இருக்கின்ற வடக்கு, கிழக்கு மக்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டிய ஒரு நிலை காணப்படுகின்றது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இவ்வாண்டுக்கான வரவுசெலவுத்திட்ட விவாதத்தின், புத்தசாசன மற்றும் வடமேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு – வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு என்பன தொடர்பான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

இது தொடர்பில் நான் ஏற்கனவே கௌரவ அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்களிடம் கோரிக்கை விடுத்திருந்தேன். ஆனாலும், அவர்களது நிர்வாக சட்டதிட்டங்களுக்கு அமைவாக அதனை மேற்கொள்ள இயலாது என்ற பதிலே முன்வைக்கப்பட்டிருந்தது.

வடக்கு, கிழக்கு மாகாணங்களைப் பொறுத்தவரையில் பல்வேறு பாதிப்புகளை அடைந்துள்ள மக்கள் என்பதால், அமைச்சரவை ரீதியிலான முடிவுகளையாவது எடுத்து, வீடமைப்புக் கடன்களை திருப்பிச் செலுத்த இயலாத நிலையிலுள்ள மக்களுக்கு ஒரு நிவாரணத்தை வழங்க அவர் நடவடிக்கை எடுத்தால், அது எமது மக்களுக்கு பெரும் நன்மையாக அமையும்.

அதேநேரம், வீடமைப்பு அதிகார சபையின் கீழ் வீடுகளை அமைப்பதற்கு கடந்த ஆண்டு 5 இலட்சம் ரூபா வீதமாக வழங்கப்பட்டு வந்திருந்த நிலையில், இவ்வாண்டு கட்டடப் பொருட்களின் விலை அதிகரிப்பையடுத்து அது ஏழு இலட்சத்து ஐம்பதினாயிரம் ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது எனத் தெரிய வருகின்றது. ஆனால், கடந்த வருடம் டிசெம்பர்  மாதம் 28ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டுள்ள 150 வீடுகளுக்கு மேற்பட்ட வீடுகளைக் கொண்ட வீடமைப்புத் திட்டத்திற்கு ஐந்து இலட்சம் ரூபா வீதமே வழங்கப்பட்டுள்ளது. எனவே, தற்போதைய கட்டடப் பொருட்களின் விலையேற்றத்திற்கு அமைவாக அத் தொகையினை ஏழு இலட்சத்து ஐம்பதினாயிரமாக அதிகரித்து வழங்குவதற்கு கௌரவ அமைச்சர் அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதேநேரம், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் யுத்தம் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளைக் கொண்ட எமது மக்களுக்கு இந்த ஏழு இலட்சத்து 50 ஆயிரம் ரூபா தொகையானது போதுமானதாக இல்லை. தற்போது மீள்குடியேற்ற அமைச்சின் மூலமான வீடமைப்புக்;கென 10 இலட்சம் ரூபா வழங்கப்பட்டு வருகின்றது. எனவே, வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கென இந்நிதித் தொகையினை அதிகரிப்பதற்கும் அமைச்சர் அவர்கள் ஒரு விசேட திட்டத்தை முன்னெடுத்தால் அது எமது மக்களுக்கு பெரும் உதவியாக அமையும் என்பதையும் இங்கு தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.

அத்துடன், பல்வேறு புள்ளியிடல் திட்டங்களில் உள்ள முரண்பாடுகள் காரணமாக மீள்குடியேற்ற அமைச்சின் 10 இலட்சம் ரூபா பெறுமதியான வீடுகளை பெற்றுக் கொள்ள இயலாதுள்ள மக்களை எந்தவொரு வீட்டுத் திட்டத்திலும் இணைத்துக் கொள்ளப்படாத நிலையே காணப்படுகின்றது.  எனவே, இம்மக்களுக்கு வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தேசிய வீடமைப்பு அதிகார சபையால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற வீடமைப்புத் திட்டங்களில் முன்னுரிமை அடிப்படையில் மானிய விலையில் வீடுகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்துகின்றேன்.


தமிழ் அரசியல் கைதிகள் மற்றும் காணிகள் விடுவிப்பு - ஜனாதிபதிக்கு டக்ளஸ் தேவானந்தா அவசர கடிதம்!
இரத்தம் சிந்த அழைக்கவில்லை!... வியர்வை சிந்தி முன்னேறவே அழைக்கிறேன்!.. - டக்ளஸ் தேவானந்தா!
வட பிரந்தியத்திற்கான பிரதான பிராந்திய முகாமையாளர் தொடர்பில் சுமகமாக தீர்வுகள் எட்டப்பட வேண்டும்!
மக்கள் தீர்ப்பு இம்முறை திருத்தி எழுதப்படும் - டக்ளஸ் தேவானந்தா நம்பிக்கை!
மக்கள் தமது தொழில் துறைகளை நிம்மதியாக முன்னெடுக்க என்றும் நாம் துணையிருப்போம் - செயலாளர் நாயகம் டக்ள...