விவசாயிகளின் நலன் கருதி விவசாய நிலங்களுக்கான காப்புறுதி திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும் – டக்ளஸ் M.P. வலியுறுத்து!

Wednesday, November 22nd, 2017

விவசாயத்துறைக்கு அதிக பயன் தருகின்ற குளங்களை இனங்கண்டு தூர்வாருவதற்கும், இத்திட்டத்தை இதனுடன் நிறுத்தி விடாமல் தொடர்ந்து இரண்டாம், மூன்றாம் கட்டங்களாக முன்னெடுத்து ஏனைய அனைத்துக் குளங்களையும் படிப்படியாக தூர்வாருவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் — என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்றைய தினம் விவசாயம், மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல், நீர்ப்பாசனம் மற்றும் நீர் வழங்கல், ஆரம்பக் கைத்தொழில் ஆகிய அமைச்சுக்கள் தொடர்பில் நாடாளுமன்றில் நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் –

அந்த வகையில், நிலைபேறான விவசாயம் தொடர்பில் இம்முறை வரவு – செலவுத் திட்டத்தில் 08 விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. அதில், குறிப்பாக சிறிய மற்றும் நடுத்தர குளங்கள் தூர்வாரப்படுதல் திட்டத்தில் வடக்கு மாகாணமும் உள்ளடக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. அந்த வகையில் முதன்மை அடிப்படையில் முக்கியத்துவம் வழங்கப்பட்டு, விவசாயத்துறைக்கு அதிக பயன் தருகின்ற குளங்களை இனங்கண்டு தூர்வாருவதற்கும், இத்திட்டத்தை இதனுடன் நிறுத்தி விடாமல் தொடர்ந்து இரண்டாம், மூன்றாம் கட்டங்களாக முன்னெடுத்து ஏனைய அனைத்துக் குளங்களையும் படிப்படியாக தூர்வாருவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

அத்துடன், தற்போதும் கூட ஒருசில குளங்கள் புனரமைப்புச் செய்கின்றபோது, மேலோட்டமான புனரமைப்பு நடவடிக்கைகளே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அணைக்கட்டுகள் புனரமைக்கப்பட்டால் குளத்தினடி, கால்வாய்கள் போன்றவை கைவிடப்படுகின்றன. வாய்க்கால்கால்கள், குளத்தினடி என்பன புனரமைக்கப்பட்டால், அணைகள் கைவிடப்படுகின்றன. இந்த நிலை மாற்றம் பெற்று, குளங்கள் அனைத்தும் முழுமையாகவே புனரமைக்கப்படுதல் வேண்டும்.

குளங்களின் நீர் ஆவியாதலைக் கட்டுப்படுத்தும் வகையில், அதனைச் சுற்றி மரங்களை நடுவதற்கும், புற்தரைகளை உருவாக்குவதற்குமான ஏற்பாடுகளும் அவசியம் தேவையாகும் என்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

அந்தவகையில், வடக்கு மாகாணத்தைப் பொறுத்த வரையில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறிய குளங்களும், சுமார் 54 பெரிய குளங்களும் இருக்கின்றன. இவற்றில் சுமார் 1000க்கும் மேற்பட்ட குளங்கள் புனரமைப்பிற்கு உட்படுத்த வேண்டியுள்ளன.

விவசாய செய்கைகளுக்கு காலநிலை மாற்றங்களால் ஏற்படுகின்ற பாதிப்புகளிலிருந்து விவசாய மக்களைக் காப்பாற்றுகின்ற நோக்கில,; விவசாய நிலங்களுக்கான காப்புறுதி ஏற்பாடுகள் தொடர்பில் நான் ஏற்கனவே இந்தச் சபையின் ஊடாக கௌரவ விவசாய அமைச்சர் அவர்களின் அவதானத்திற்குக் கொண்டு வந்திருந்தேன். அந்த வகையில், நெல் அடங்களாக, சோளம், சோயா, பெரிய வெங்காயம், உருளைக்கிழங்கு, மிளகாய் ஆகிய 06 பயிர்களுக்கு ஒரு ஏக்கருக்கு குறைந்தது 40 ஆயிரம் ரூபா வழங்கக்கூடியதாக அமையவுள்ள காப்புறுதித் திட்டமும் எமது விவசாய மக்களுக்கு பயனுள்ளதாகவே அமையும். – என்றார்.

Related posts: