விளைவிக்கக் கூடிய பொருட்களை இறக்குமதி செய்வது தேசிய அவமானம் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி தெரிவிப்பு !

Thursday, July 5th, 2018

இந்த நாடு வரலாற்று ரீதியாகவே ஒரு விவசாய நாடாகவே இருந்து வந்துள்ளது. ஆங்கிலேயர்கள் இந்த நாட்டின் விவசாயத்தை சிதைக்க முற்பட்டனர் எனக் கூறப்பட்டு, இலங்கை சுதந்திரம் அடைந்ததன் பின்னரான காலத்திலிருந்து இன்று வரையில் விவசாயத் துறை சார்ந்து பல்வேறு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இருந்தும், நாம் இன்றுகூட அரிசி முதற் கொண்டு, மரக்கறிகள் வரை இறக்குமதி செய்து கொண்டிருக்கிறோம். இது ஒரு தேசிய அவமானமாக இல்லையா? எனக் கேட்க விரும்புகின்றேன் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நடைபெற்ற விசேட வியாபாரப் பண்டங்கள் அறவீட்டுச் சட்டத்தின் கீழான கட்டளைகள், சுங்கக் கட்டளைச் சட்டத்தின் கீழான  பிரேரணைகள், துறைமுக மற்றும் விமான நிலைய அபிவிருத்தி அறவீட்டுச் சட்டத்தின் கீழான கட்டளைகள், உற்பத்தி வரி விசேட ஏற்பாடுகள் சட்டத்தின் கீழான கட்டளைகள் தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் –

இந்த வருடத்தின் முதல் காலாண்டின் ஏற்றுமதிகள் தொடர்பில் பார்க்கின்றபோது, விவசாயப் பொருட்களின் ஏற்றுமதியானது 5.6 வீதமான வீழ்ச்சியினைப் பதிவு செய்திருக்கின்றது. அதே நேரம் இதே காலாண்டுப் பகுதிக்குள் 15,560 மில்லியன் ரூபாவுக்கு மரக்கறிகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிய வருகின்றது. கடந்த வருடம் ஜனவரி மாதம் முதற்கொண்டு நவம்பர் மாதம் வரையிலான காலப்பகுதிக்குள் சுமார் 49,000 மில்லியன் ரூபாவுக்கு மரக்கறி வகைகள் இறக்குமதிp செய்யப்பட்டுள்ளதாகத் தெரிய வருகின்றது.

இந்த நாட்டின் மரக்கறி செய்கையாளர்கள் தங்களது உற்பத்திகளை சந்தைப்படுத்த முடியாமல், அவற்றை காட்டு யானைகளுக்கு போட்டும், பூசனிக்காய் தானங்களைக் கொடுத்தும் தங்களது பாதிப்புகளை வெளிக்காட்டி வருகின்ற நிலையில்,  அவர்களது வாழ்வாதாரங்களுக்கு உரிய வழிகளை எற்படுத்திக் கொடுக்காமல், மரக்கறி வகைகளைக்கூட நீங்கள் இறக்குமதி செய்து கொண்டிருக்கின்றீர்கள்.

இத்தகையதொரு நிலையில் இன்று எமது மக்கள் மிக அதிக விலை கொடுத்து மரக்;கறி வகைகளை கொள்வனவு செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

விவசாய மக்களிடம் நேரடி சந்தைப்படுதல் வசதிகள் கிடையாது. உற்பத்திகளை கொண்டு செல்லக்கூடிய போக்குவரத்து வசதிகள், களஞ்சியப்படுத்தும் வசதிகள் கிடையாது. தங்களது உற்பத்திகள் தொடர்பிலான சந்தை விலை விபரங்கள் மற்றும் சந்தையின் உற்பத்திக் கேள்விகள் போன்றவற்றினை அறியக்கூடிய வாய்ப்புகள் அரிதாக இருப்பதால், இடைத்தரகர்களின் ஆதிக்கங்களே இதில் மேலோங்குகின்றன. அதே நேரம், மேற்படி உற்பத்திகளின் விலைகள் தொடர்பில் அரசின் கண்காணிப்பு போதியளவு இல்லாதிருப்பதால் ஒரே பொருள் பல்வேறு விலைகள் விற்கப்படுகின்ற நிலைமைகள் ஏற்படுகின்றன. இவை போன்ற பல்வேறு காரணிகள் எமது விவசாயத் துறையின் பாதிப்பில் ஆதிக்கம் செலுத்துகின்றன.

Related posts: