மாகாண மட்டத்தில் விளையா ட்டுக் கல்லூரிகள் உருவாக்கப்பட வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா!

Wednesday, August 23rd, 2017

விளையாட்டுத் துறையை முன்னேற்றுவதற்கு மாகாண மட்டத்தில் விளையாட்டுக் கல்லூரிகளை உருவாக்க வேண்டும். விளையாட்டுக் கல்லூரிகளை பொதுத் துறை, தனியார் துறை தன்னார்வ அமைப்புக்களின் பங்களிப்புடன் உருவாக்க வேண்டும். இக் கல்லூரிகள் விளையாட்டுகள், விளையாட்டு முகாமைத்துவம் நாட்டின் சட்ட திட்டங்களுக்கு இணங்க கழகங்களுக்கான கணக்குகளைச் சரிவரப் பேணி சமர்ப்பித்தல் தொடர்பாகவும் கற்பிக்கப்படல் வேண்டும்.

இவ்வாறு செய்தால் காலப்போக்கில் தேசிய விளையாட்டுப் பல்கலைக் கழகம் ஒன்றையும் இலங்கையில் உருவாக்க முடியும் விளையாட்டுக் கல்லூரிகளின் மூலமாக புதிய விளையாட்டுக் கலாச்சாரம், விளையாட்டினூடாக சமாதானத்தையும் அபிவிருத்தியையும் ஏற்படுத்தும், நம்பிக்கையுள்ள இளைஞர் சமுதாயத்தை உருவாக்குதல் போன்ற நல்நோக்கங்களை அடைய முடியும் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

விளையாட்டுத்துறை அமைச்சரினால் ஆக்கப்பட்ட ஒழுங்கு விதிகள் தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் –

தேசிய விளையாட்டுக் கழகங்களைப் பதிவு செய்தல், தேசிய விளையாட்டுக் கழகங்களின் அமைப்பு விதி, தேசிய விளையாட்டுக் கழகங்களின் கடமைகள், அதிகாரங்கள் மற்றும் பணிகள் அத்தகைய தேசிய விளையாட்டுக் கழகத்தின் தீர்மானங்கள் மற்றும் நடவடிக்கைகளுக்கு எதிராக மேன் முறையீடு செய்யும் முறைகள் தொடர்பான ஒழுங்கு விதிகளை தற்பொழுது இச்சட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்டுள்ள 61 வகையான விளையாட்டுக்களையும், அவ்விளையாட்டுக்களுக்காக இயங்குகின்ற கழகங்களையும் சட்டத்திற்கு அமைவாக இயங்கவைக்க, ஒழுங்கு விதிகளை அமைத்துச் சமர்ப்பித்த அமைச்சர் பாராட்டப்பட வேண்டியவர்.

விளையாட்டுக் கழகங்களின் தலைவர், மற்றும் பொருளாளர்களின் பதவிக் காலங்கள் வரையறை செய்யப்பட்டுள்ளதையும், நிதி மோசடி, முறைகேடு, ஊழல் பழக்கம், ஒழுக்காற்று மீறல்கள் தொடர்பான குற்றமிளைத்தவர்களை, முறையான விசாரணைகளுக்கு உட்படுத்தி மேல் நடவடிக்கை எடுப்பது தொடர்பான விதிகளும் முன்னைய விதிகளில் இருந்த ஓட்டைகளை அடைக்க வழிவகை செய்துள்ளன.

விளையாட்டுக் கழகங்களின் நிதிக் கூற்றுக்களை உரியவாறு கணக்காய்வு செய்வதும், உரிய காலப் பகுதியில் சமர்ப்பிப்பதும் முக்கியமானதாகும். வடக்குக் கிழக்கைப் பொறுத்த வரையில் 30 ஆண்டுகால யுத்த சூழலில், கெடுபிடிகள் காரணமாக விளையாட்டுக் கழகங்கள் சிறப்பாகத் தொழிற்படுவதற்கான சூழல் மட்டுப்படுத்தப்பட்டதாகவே இருந்தது. எனவே இவ் விதிகள் தொடர்பாக விளையாட்டுச் சமூகத்தவர்களுக்கு விழிப்பூட்டுவதற்கு அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.தேசிய விளையாட்டுக் கொள்கைகளின் நோக்கங்களையும், இலக்குகளையும் அடைவதற்கு விளையாட்டுச் சட்டத்தின் கீழான ஒழுங்கு விதிகளை இறுக்கமாகக் கடைப்பிடிப்பதன் மூலமே ஒழுக்கமுள்ள கட்டுப்பாடான விளையாட்டுச் சமூகத்தை உருவாக்க முடியும்.

யுத்தகாலத்தில் காயமடைந்து கைகால்கள், இழந்தவர்களையும், வலது குறைந்தவர்களையும் விளையாட்டில் ஈடுபடுத்துவதற்கு பாடசாலைகள் மட்டுமல்லாது விளையாட்டுக் கல்விக் கல்லூரிகள் மூலமாக முன்னெடுப்பது சாலச் சிறந்தது என்பது எனது அபிப்பிராயம். இதற்கான விளையாட்டுக் கல்லூரி ஒன்றை கிளிநொச்சியில் நிறுவித்தருமாறு கேட்டுக்கொள்கின்றேன். நான் முன்னொரு தினத்தில் இச்சபையில் பேசும் பொழுது கிளிநொச்சியில் கட்டி முடிக்கப்படாதிருக்கும் சர்வதேச தரத்திலான விளையாட்டரங்கை விரைவாகக் கட்டிக் கொடுத்து மக்களுக்குக் கையளிக்குமாறும் மீண்டும் ஒரு முறை நினைவுபடுத்த விரும்புகின்றேன்.

எனவே வடமாகாணத்தில் விளையாட்டுக் கல்விக் கல்லூரி ஒன்றை நிறுவுவதற்கு விளையாட்டு அமைச்சர் தனது செல்வாக்கினையும் அதிகாரத்தையும் பயன்படுத்தி உருவாக்கித் தருமாறு கேட்டுக் கொள்கின்றேன். தற்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஒழுங்கு விதிகள் இலங்கையின் தேசிய விளையாட்டுக் கொள்கையின் நோக்கங்களையும் இலக்குகளையும் அடைவதற்கு உந்து சக்தியாக அமைந்துள்ளதனால் அமைச்சர் அவர்களைப் பாராட்டுகின்றோம்.

Related posts: