விளப்பமில்லா ஆட்சியை மக்களால் விளங்க முடியவில்லை? – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Wednesday, July 18th, 2018

இரவு 12 மணிக்கு எரிபொருளின் விலையைக் கூட்டுகிறீர்கள். மறுநாள் பகல் 12 மணிக்கு குறைக்கிறீர்கள். பின்னர் சில நாட்கள் சென்று மீண்டும் இரவு 12 மணிக்கு கூட்டுகிறீர்கள். இந்த வகையில் உங்களுக்கே விளப்பமில்லாத ஆட்சி முறையினை நீங்கள் மேற்கொண்டு வரும்போது, பொது மக்களுக்கு என்ன விளங்கப்போகிறது? என்ன நடக்கப் போகின்றது? என்ற கேள்வியே எழுகின்றது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நடைபெற்ற இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசிற்கும், சிங்கப்பூர் குடியரசிற்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்தம் பற்றிய சபை ஒத்திவைப்பின் போதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

இலங்கை – சிங்கப்பூர் வர்த்தக ஒப்பந்தம் தொடர்பிலும் பல்வேறு கேள்விகள் எமது மக்கள் மத்தியில் இருக்கின்றன. மேற்படி ஒப்பந்தம் காரணமாக சிங்கப்பூருக்கு வருடமொன்றுக்கு 10 அமெரிக்க டொலர் பில்லியன் நிதி மீதமாக்கப்படும் என சிங்கப்பூர் வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சின் பிரசுரமொன்றில் கூறப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.

அதாவது, சிங்கப்பூர் பொருட்களுக்கான இறக்குமதி வரியாக இலங்கைக்குக் கிடைக்கின்ற நிதியில் குறைந்தபட்சமாக 150 கோடி ரூபா வரி வருமானத்தை மேற்படி ஒப்பந்தம் காரணமாக இலங்கை இழக்கின்ற நிலையே ஏற்படும் எனக் கூறப்படுகின்றது. இதற்குப் பதிலாக இலங்கையிலிருந்து சிங்கப்பூருக்கான ஏற்றுமதிக்கென என்ன கிடைத்துள்ளது? என்ற கேள்விக்கு என்ன பதில் உங்களிடம் இருக்கின்றது என்ற கேள்வியே எழுகின்றது.

சிங்கப்பூர் நாட்டைப் பொறுத்த வரையில் அந்நாடானது, பொதுவாகவே இறக்குமதிகளின் வரிகளை ஒருதலைப்பட்சமாக மிகவும் குறைந்த மட்டத்தில் வைத்துக் கொள்கின்ற நாடு என்றே கூறப்படுகின்றது. இந்த நிலையில், சிங்கப்பூரானது இதற்கு முன்பிருந்தே உலகின் அனைத்து நாடுகளுக்குமாக இறக்குமதி வரி விலக்களித்துள்ள பொருட்களுக்கே இலங்கைக்கு வரிச் சலுகை வழங்கியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

அதே நேரம், மேற்படி ஒப்பந்தத்தில் உள்ளடக்கப்பட்டிருக்கும்,  ஒரு பொருளின் பெறுமதிக்கு சிங்கப்பூரில் வைத்து சேர்க்கப்படுகின்ற பெறுமதியினை அளவையிடுவதற்கான நிபந்தனையானது மிகவும் பலஹீனமான நிலையில் இருப்பதாகவும் கூறப்படுகின்றது. இந்த வகையில் பார்க்கின்றபோது உலகின் ஏனைய நாடுகளில் உற்பத்தி செய்யப்படுகின்ற பொருட்களும் சிங்கப்பூர் ஊடாக இலங்கைகக்கு வரி விலக்களிப்புடன் நுழையப் போகின்றனவா? எனக் கேட்க விரும்புகின்றேன்.

Related posts:

பனை மரத்திலிருந்து கள் இறக்கத்தடை உடனடியாக நீக்கப்படும் : டக்ளஸ் எம்.பி. யிடம்உறுதியளித்தார் ஜனாதிபத...
ஆட்சியில் பங்கெடுத்தால் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுக்கொடுக்க முன்னரைவிடவும் கடும...
துப்பாக்கியால் எமது மக்கள் பட்டபாடு போதும் மாற்று வழியை சிந்தியுங்கள்: அதிகாரிகளுக்கு அமைச்சர் டக்ளஸ...