வியாபார நிறுவனங்கள் இனவாதத்தைக் கையாள்வதை நிறுத்த வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி தெரிவிப்பு!

Wednesday, July 24th, 2019

கடந்த ஏப்ரல் மாத உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பிலான விசாரணைகளின்போது அந்தத் தாக்குதல்களில் ஈடுபட்டிருந்த பயங்கரவாதிகளுக்கு பல்வேறு நிறுவனங்கள் நிதி உதவிகளை மேற்கொண்டிருந்ததாகவும் தகவல்கள் வெளிவந்திருந்தன.

இந்த நாட்டைப் பொறுத்தவரையில் பல்வேறு நிறுவனங்கள் தங்களது பிரச்சார உத்தியாக இனவாதத்தைக் கையாண்டு வருவதையும் இங்கே காலத்திற்குக் காலம் காணக்கூடியதாக இருக்கின்றது.

குறிப்பாக தமிழ் – சிங்களப் புத்தாண்டு காலங்களில் முஸ்லிம் கடைகளைத் தவிர்க்கவும் எனத் தென்பகுதியிலே சிங்கள மக்களிடையே துண்டுப் பிரசுரங்கள் பகிரப்படுகின்ற சம்பவங்களும் இல்லாமல் இல்லை. அதுமட்டுமல்லாது முகநூல் ஊடாகவும் இத்தகைய விளம்பரங்கள் பல வடிவங்களில் வெளிவந்து கொண்டிருப்பதையும் நாம் கண்டிருக்கின்றோம்.

தற்போது கடந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னர் இந்த விளம்பரமானது ஒரு தேசிய தொனிப்பொருள் போல பகிரங்கமாகவே பலரால் கூறப்பட்டு வருகின்றதையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

இத்தகைய செயற்பாடுகளின் பின்னால் இருக்கின்ற நிறுவனங்கள் தங்களது சுயலாபங்கள் கருதி இத்தகைய மோசமான விளம்பரங்களை மேற்கொள்வதற்காக சில சக்திகளுக்கு அல்லது நபர்களுக்கு நிதி வழங்காமல் இருக்க முடியாது.

இத்தகைய இனவாத விளம்பரங்களை மேற்கொள்கின்றவர்கள் ஆரம்பத்தில் பொதுவாகவே முஸ்லிம் வர்த்தக நிலையங்களைத் தவிர்க்கவும் என விளம்பரங்களை மேற்கொண்டாலும் காலப்போக்கில் முஸ்லிம் வர்த்தகர்களது நிறுவனங்களின் பெயர்களையும் பகிரப்படுத்த ஆரம்பித்து விட்டனர்.

இவ்வாறு வர்த்தக நிறுவனங்களின் பெயர்களை விளம்பரப்படுத்துகின்றபோது முஸ்லிம் அல்லாத வர்த்தக நிறுவனத்தின் ஊதுவர்த்தி வர்க்கம் ஒன்றையும் முஸ்லிம் வர்த்தகத் தயாரிப்பு என விளம்பரப்படுத்திய நிலையில் அந்த ஊதுவர்த்தி தயாரிப்பு நிறுவனம் தற்போது அது தங்களது தயாரிப்பு எனத் தெரிவித்து தொடர்ந்தும் தொலைக்காட்சி சேவைகளில் விளம்பரப்படுத்துகின்ற நிலையும் ஏற்பட்டிருப்பதை இங்கு அவதானத்திற்குக் கொண்டு வர விரும்புகின்றேன்.

அந்த வகையில் பார்க்கின்றபோது இன்று இந்த நாட்டில் ஒரு சில அரசியல்வாதிகளையும் விஞ்சிய நிலையில் சில வர்த்தக நிறுவனங்கள் மக்கள் மத்தியில் இனவாதத்தைத் தூண்டுகின்ற செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதையும் இங்கே சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.

இந்த வகையில் ஓர் இனம் சார்ந்த நிறுவனங்கள் செயற்படுகின்ற நிலையில் இதனால் பாதிக்கப்படுகின்ற மறு தரப்பு நிறுவனங்களும் அவர்களது இனம் சார்ந்த – மதம் சார்ந்த அடிப்படைவாதக் குழுக்களுக்கு உதவுகின்ற நிலைமையைத் தோற்றுவிக்கின்ற வாய்ப்புகளும் இல்லாமல் இல்லை.

எனவே வரையறுக்கப்பட்ட பொது நிறுவனம் தவிர்ந்த ஏனைய அனைத்து நிறுவனங்களும் தமது உரித்தில் 25 வீதமோ அல்லது அதற்கு மேற்பட்ட வீதமான பங்ககுளைக் கொண்டுள்ள நபர்களதோ அத்தகைய நிறுவனங்களை முன்னெடுப்பது தொடர்பில் செயற்பாட்டு நிர்வாக உரித்துள்ள அரை இலாப நபர்கள் தொடர்பிலான தகவல்கள் அடங்கிய ஆவணங்களைச் செயற்படுத்த வேண்டியதன் அவசியம் என்பது மட்டும் இங்கு போதாது.

அத்தகைய பங்குதாரர்களால் அல்லது அரை இலாபங்கள் பெறுகின்ற நபர்கள் வாயிலாக மட்டுன்றி பயங்கரவாத அடிப்படைவாத  செயற்பாடுகளுக்கு இத்தகைய சுயலாப – இனவாதத் தூண்டுதல்களைக் கொண்ட விளம்பர முறைமைகள் காரணமாகவும் நிதி செலுத்துகைகள் மேற்கொள்ளப்படக்கூடிய வாய்ப்புகள் இன்று உருவாகியுள்ளன என்பதையும் அவதானத்தில் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்திக் கூற விரும்புகின்றேன் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நடைபெற்ற கம்பனிகள் திருத்தச் சட்டத்தைத் திருத்துவதற்கான சட்டமூலம் தொடர்பிலான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related posts:

கிடைக்கப்பெறும் சந்தர்ப்பத்தை மக்கள் இனியும் தவறவிடக் கூடாது - செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரி...
தீர்வு கிடைக்கும்வரை தொடர்ந்தும் காரைநகர் கோட்டத்தில் பணியை தொடர்வதற்கு அனுமதி பெற்றுத்தந்த டக்ளஸ் எ...
அரசியல் கைதிகளின் உணர்வுகளை அனுபவ ரீதியாக உணர்ந்தவன் நான் - விடுதலைக்கு துரித நடவடிக்கை மேற்கொள்வேன்...