வாள் வெட்டும், கல்வியில் பின்னடைவும் எமது அடையாளமல்ல – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Thursday, January 3rd, 2019

யாழ்ப்பாணத்தில் தமிழ் இளைஞர்களை வாள்வெட்டுக் குழுவினராகவும், வன்முறையாளர்களாகவும் அடையாளப்படுத்தும் சதி நாடகம் ஒன்று அரங்கேற்றப்படுகின்றது. இந்த நிலையை மாற்றியமைக்க வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

எமது இளைஞர், யுவதிகளுக்கு அவரவர் தகமைகளுக்கு ஏற்ப பொருத்தமான தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும்.

எல்லோருக்கும் அரச தொழில் கிடைக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. எனவே எமது இளைஞர், யுவதிகளின் தகமைக்கும், ஆற்றலுக்கும் ஏற்ற புதிய தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுப்பதுடன், அவர்களுக்கான விளையாட்டு, பொழுதுபோக்கு போன்ற வசதிகளையும் தேவைக்கு ஏற்ப ஏற்படுத்திக்கொடுக்கவேண்டும்.

எமது மக்களுக்கு அரசியல் தீர்வும், நிலையான அபிவிருத்தியும் அவசியமானதுதான். அதேவேளை எமது இளைஞர், யுவதிகளுக்கு நல்வழியைக் காட்டுவதும், அவர்களை சமூக அக்கறையும், குடும்பப் பொறுப்புமிக்க நற்பிரஜைகளாகவும் வாழ வழிவகை செய்வதும் அவசியமாகும்.

எமது சமூகத்தினரிடையே ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு இப்போது தேசிய நீரோட்டத்தில் இணைந்தவர்களும், தகமை இருந்தும் வேலைவாயப்பைப் பெறமுடியாதவர்களும், நாட்டின் சூழல் மற்றும் குடும்ப வறுமை காரணமாக கல்வியைத் தொடரமுடியாதவர்களுமாக பல்வேறுபட்ட பிரிவினராக இளைஞர், யுவதிகள் இருக்கின்றார்கள்.

அவர்களுக்கு நம்பிக்கையைக் கொடுக்கவும், சரியான வழியைக் காட்டவும் அரசியல் தலைமைகள் முன்வரவேண்டும். தமது அரசியல் மற்றும் சுயலாபங்களுக்காக அரசுகளிடம் நெருக்கமான உறவுகளை கொண்டிருக்கும் தமிழ் அரசியல் தலைமைகள், எமது இளைஞர், யுவதிகளின் வளமான எதிர்காலத்திற்காகவும் அரசுடனான உறவைப் பயன்படுத்த வேண்டும்.

இல்லாவிட்டால் வாள்வெட்டுக் கலாசாரமும், போதைப்பொருட்களின் ஆக்கிரமிப்பும், கல்வியில் பின்னடைவுமாக எமது சமூகம் மீளமுடியாத பின்னடைவுக்குள் சென்றுவிடும் ஆபத்தை எதிர்கொள்ள நேரிடும் என்பதை உணர்ந்து இன மற்றும் சமூக அக்கறையுடன் அரசியல் தலைமைகள் எனக்கூறுவோர் செயற்பட முன்வரவேண்டும்.

Related posts: