வாக்குகளை அபகரிப்பவர்களால் மக்களுக்கு கிடைத்த பயன் என்ன? – டக்ளஸ் தேவானந்தா கேள்வி!

Tuesday, April 25th, 2017

தேர்தல்களில் மக்களின் வாக்குகளை அபகரித்துக் கொண்டு வெற்றி பெற்றவர்கள் தங்களது பதவிகளையும் சொகுசு வாழ்க்கையையுமே தக்க வைத்துக்கொள்ளும் கூட்டமைப்பினர் இதுவரையில் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளில் எவற்றுக்காவது உரிய தீர்வுகளை பெற்றுத் தந்திருக்கின்றார்களா? என  ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கேள்வி எழுப்பியுள்ளார்.

பருத்தித்துரை சுப்பர்மடம் பொது நோக்கு மண்டபத்தில் இன்றையதினம் மக்களின் பிரச்சினைகள் மற்றும் தேவைப்பாடுகள் தொடர்பில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.

கிடைக்கும் சந்தர்ப்பங்களை மக்கள் தமக்கு சேவை செய்யக்கூடியவர்களை இனங்கண்டு அவர்களுக்கு தமது வாக்குப் பலத்தை வழங்கவதினூடாகவே மக்கள் முழுமையான அனுகூலங்களை பெறமுடியும். தவிர உணர்ச்சிப் பேச்சுக்களுக்கும் உசுப்பேற்றல்களுக்கும் நடைமுறைப்படுத்தப்பட முடியாத வெற்றுக் கோஷங்களுக்கும் மக்கள் எதிர்காலத்திலும் ஏமாந்து விடக்கூடாது.

கடந்த காலங்களில் நாட்டில் யுத்தம் இடம்பெற்ற போதிலும் எமது மாணவர்களின் கல்விநிலை தற்போதைய நிலையிலும் பார்க்க மேம்பாடு கண்டுள்ளதாகவே இருந்துள்ளது. ஆனால் யுத்தம் முடிவுக்கு வந்துள்ள இன்றைய காலப்பகுதியில் வடமாகாணம் கல்வியில் 8ஆவது நிலையில் காணப்படுகின்றது. இவ்வாறு கல்வியின் வீழ்ச்சிக்கு வடக்கு மாகாண சபையின் செயற்திறனற்றதும் அக்கறையற்றதுமான செயற்பாடுகளே முக்கிய காரணமாக விளங்குகின்றன.

ஆனாலும் எதிர்காலங்களில் எமது பகுதி மாணவர்கள் கல்வியில் மென்மேலும் வளர்ச்சியையும் உயர்ச்சியையும் காணும் பொருட்டு விடாமுயற்சியுடன் தமது கற்றல் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.

இதனிடையே இப் பகுதி விளையாட்டு வீரர்களினதும் மக்களினதும் கோரிக்கைக்கு அமைவாக இங்கு விளையாட்டு மைதானமொன்றின் அவசியம் நன்குணரப்பட்டுள்ளது. அதனடிப்படையில் இங்குள்ள சித்தி விநாயகர் விளையாட்டுக் கழகத்திற்கான மைதானத்தை விளையாட்டு வீரர்களினதும் மக்களினதும் பயன்பாட்டுக்காக நிரந்தரமாக பெற்றுக்கொடுக்க வேண்டியது அவசியமானதாகும்.

அதனடிப்படையில் குறித்த விடயம் தொடர்பில் உரிய கவனம் செலுத்தி அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்திருந்த அதேவேளை மைதானத்தை நேரில் சென்று பார்வையிட்டு நிலமைகளை ஆராய்ந்தறிந்துகொண்டார்.

சித்தி விநாயகர்  விளையாட்டு கழகம் பதிவு செய்யப்பட்டு நாற்பது வருடங்களை கடந்துள்ளதாகவும் மைதான புனரமைப்பிற்காக இதுவரையில் நாற்பது இலட்சத்திற்கும் அதிகமான நிதியை செலவிட்டுள்ளதாகவும் விளையாட்டுகழக நிர்வாகத்தினர் தெரிவித்திருந்தனர்.

இதனிடையே அப்பகுதி மக்களின் ஏனைய பிரச்சினைகள் தொடர்பாகவும் டக்ளஸ் தேவானந்தா கேட்டறிந்து கொண்டார். இதன்போது பருத்தித்துறை நகர நிர்வாக செயலாளர் பிரான்சிஸ் ரட்ணகுமார், பருத்தித்துறை பிரதேச நிர்வாக செயலாளர் விசிந்தன் ஆகியோருடன் கடற்றொழிலாளர்கள் பலரும் கலந்தகொண்டிருந்தனர்.

Related posts:

குடிநீரைப் பெற்றுத் தருவதற்குக் கூட ஆளுமையற்றவர்கள் கூட்டமைப்பினர் - பூநகரி பள்ளிக்குடா மக்கள் டக்ளஸ...
நாம் ஒருபோதும் அரசுகளை நம்புங்கள் என தமிழ் மக்களிடம் கூறியது கிடையாது - டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!
மக்களுக்கு நன்மை பயக்கின்ற விடயங்களே நடைமுறைப்படுத்தப்படும் - பேசாலை பகுதி மக்களிடம் அமைச்சர் டக்ளஸ்...