வாக்குகளால் அதிகாரத்தைப் பெற்றவர்கள் வாக்களித்த மக்களுக்கு என்ன செய்தார்கள்?-டக்ளஸ் தேவானந்தா கேள்வி!

Saturday, October 8th, 2016

புலமைப் பரிசில் பரீட்சையில் பங்குபற்றி சித்தியடைந்த அனைத்து மாணவச் செல்வங்களுக்கும் தனது மனமார்ந்த பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்வதுடன் புலமைப் பரிசில் பரிட்சையில் சிறந்த பெறுபேற்றைப் பெற்றுக் கொள்வதற்காக மாணவர்கள் கடுமையான போராட்டத்தை நடத்தியதைப்போல், பெற்றோர்களும் மிகுந்த சிரத்தையுடன் பாடுபட்டு பிள்ளைகளுக்கு உற்சாகத்தை வழங்கியிருப்பீர்கள்.

உங்கள் முயற்சி வெற்றியடைந்திருக்கின்றது. அந்தவகையில் பிள்ளைகளின் வெற்றிக்காக முழுமையாக தம்மை அர்ப்பணித்த அனைத்துப் பெற்றோர்களுக்கும் எனது பாராட்டுக்கள் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயவலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தனது முகநூலில் பதிவிட்டுள்ள டக்ளஸ் தேவானந்தா மேலும் –

இந்த வெற்றியைத் தக்கவைத்துக் கொண்டு தொடர்ந்தும் எமது மாணவச் செல்வங்கள் தமது கல்விச் செயற்பாடுகளை சிறப்பாக தொடர வேண்டும். நடந்து முடிந்த புலமைப் பரிசில் முடிவுகள் வெளியாகியதிலிருந்து அதை அவதானித்துக் கொண்டிருக்கின்றேன். தேசிய மாவட்ட மட்டத்தில் சிறந்த பெறுபேற்றைப் பெற்ற இரண்டாம் மாவட்டமாக யாழ்ப்பாணம் இருப்பதை மகிழ்ச்சியுடன் கவனிக்கின்றேன்.

அதிலும் யுத்தத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்ட விஸ்வமடு விஸ்வநாதர் ஆரம்ப பாடசாலை மாணவர்கள் பெற்றுக்கொண்டிருக்கும் வெற்றியானது முக்கியமானதாகும். அந்தப் பாடசாலையில் மாவட்ட மட்டத்தில் முதல் மூன்று இடத்தை மூன்று மாணவர்கள் பெற்றுக்கொண்டிருப்பதுடன், 34 மாணவர்கள் சித்தியடைந்திருப்பதும் பெருமைக்குரியதாகும்.

யுத்தத்தில் முற்றாக சிதைந்திருந்த வட மாகாணத்தில் பாடசாலைகளை புனரமைக்கவும், முடியுமானவரை பாடசாலைகளுக்கு ஆசிரியர்களை நியமிப்பதிலும், கற்றல் உபகரணங்களையும், ஏனைய கல்விசார் வளங்களையும் பெற்றுக் கொடுப்பதிலும் நாம் கணிசமான பங்களிப்புக்களைச் செய்திருக்கின்றோம்.

ஆனால் மாறி வந்த அரசியல் சூழலும், மாகாணசபையை பொறுப்பேற்றவர்களின் அசமந்தமான போக்கும் எமது மாணவச் செல்வங்களின் கல்வியை மேம்படுத்துவதில் எதிர்பார்த்த ஆக்கபூர்வமான பங்களிப்பைச் செய்யவில்லை.

இப்போதும் வட மாகாணத்தில் கணிசமான பாடசாலைகளில் பாடவிதானங்களுக்கான ஆசிரியர்கள் நியமிக்கப்படாமலும், தேவையான கற்றல் உபகரணங்கள் பெற்றுக் கொடுக்கப்படாமலும், மாகாணசபையைப் பொறுப்பேற்றவர்களின் சகாக்களான மாகாணசபை அமைச்சல்களின் முறைகேடுகள்,

அதிகார துஸ்பிரயோகங்கள் காரணமாகவும், சில அதிகாரிகளின் நிர்வாக முறைகேடுகள் காரணமாகவும் எமது பிள்ளைகள் ஒரு இயல்புச் சூழலில் கல்வியைத் தொடர்வதில் பெரும் சிரமங்களை எதிர் கொண்டிருக்கின்றார்கள்.

பாடசாலைகளின் தேவைகளை தீர்க்க வேண்டியவர்கள், பிள்ளைகள் எதிர்கொள்ளும் சவால்களை முறியடிக்க உதவவேண்டியவர்கள், வடக்கு மாகாணசபையில் அர்த்தமற்ற தீர்மாணங்களையே நிறைவேற்றிக் கொண்டும், அரசியல் முரண்பாடுகளை வளர்த்துக் கொண்டும் இருக்கின்றார்கள்.

எமது மக்களின் வாக்குகளை பொய் வாக்குறுதிகளை வழங்கி அபகரித்தவர்களும், மக்களின் வாக்குளால் பதவிகளைப் பெற்றுக் கொண்டவர்களும், சமூக உணர்வோடும், கல்வியே எமது சமூகத்தின் எதிர்கால பலம் என்பதை உணர்ந்தும் சமூக சேவை செய்வார்களாக இருந்தால் எமது பிள்ளைச் செல்வங்கள் மேலும் பல வெற்றிகளை ஈட்டிக்கொள்வதுடன்.

மாகாணத்திற்கும் பெருமை சேர்ப்பார்கள். எனவே யுத்தத்தில் பாதிப்புக்குள்ளான வட மாகாணத்தில் பிள்ளைகளுக்கு போசாக்கான உணவு கிடைக்கவும், வசதியான கல்வி கிடைக்கவும் இன்று அரசுடன் இணக்க அரசியல் நடத்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும்,வடக்கு மாகாணசபை நிர்வாகத்தினரும் சமூக அக்கறையுடன் எதிர்காலத்திலாவது செயற்பட வேண்டும் என பதிவிட்டுள்ளார்.

Untitled-1 copy

Related posts: