வவுனியா வாழ் முஸ்லிம் மக்களது வாழ்வியல் பிரச்சினைகளுக்கும் விரைவான தீர்வு பெற்றுத்தரப்படும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

வவுனியா மாவட்டத்தில் வாழும் முஸ்லிம் சகோதர மக்களது வாழ்வியல் பிரச்சினைகளுக்கும் பாரபட்சமற்ற வகையில் நிரந்தர தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்க அயராது பாடுபடுவேன் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் வடக்கு அபிவிருத்தி புனர்வாழ்வு புனரமைப்பு மற்றும் இந்துவிவகார அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
வவுனியா மாவட்டத்திற்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டு இன்றையதினம் வருகைதந்திருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வவுனியா பிரதான பள்ளிவாசல் மௌலவி அமீர் கபீஷ் உள்ளிட்ட பள்ளிவாசல் நிர்வாகத்தினருடனும் பொதுமக்களுடனும் சந்திப்பொன்றை மேற்கொண்டிருந்தார்.
இதன்போது குறித்த பகுதி வாழ் முஸ்லிம் சகோதர மக்கள் தாங்களும் கடந்த கால யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து பல அவல வாழ்வுகளை எதிர்கொண்டதாகவும் தற்போது தமது பகுதிகளுக்கு மீளக்குடியமர்த்தப் பட்டுள்ளபோதிலும் தமக்கான எதுவித அடிப்படை தேவைகளும் இன்னும் பெற்றுத் தரப்படவில்லை என்றும் தாம் பாரபட்சம் காட்டி கடந்த காலத்தில் புறக்கணிக்கப்பட்டுள்ளோம் என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் கூறியிருந்தனர்.
மேலும் தாங்கள் தற்போது வடக்கின் அபிவிருத்தி அமைச்சராக பொறுப்பேற்றுள்ளமையால் தமது பகுதி மக்களிடையே ஒரு நம்பிக்கை ஒளி தோன்றியுள்ளதெனவும் தெரிவித்ததுடன் தமது பகுதியில் வாழும் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு பெற்றுத் தருமாறும் கோரிக்கை விடுத்தனர்.
மக்களது கோரிக்கைகளையும் பிரச்சினைகளையும் அவதானத்தில் கொண்ட அமைச்சர் தனக்கு இப்பகுதி மக்களுக்கான சேவைகளைச் செய்ய பக்கபலமாக பிரதி அமைச்சர் காதர் மஸ்தான் இருப்பதுடன் கடந்த காலத்தில் இருந்த பாரபட்சங்களாலும் புறக்கணிப்புக்களாலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவர்களின் எதிர்பார்ப்புகளுக்கும் ஏற்ப திறம்பட சேவை செய்ய தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார்.
Related posts:
|
|