வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் நெல் காயவைக்கப் படுகிறது – டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு!

Tuesday, April 4th, 2017

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பயணிகள் சேவைகள் அனுமதிப் பத்திரம் இன்றிய நிலையில், பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடுகின்ற பேருந்துகள் தொடர்பில் விதிக்கப்படுகின்ற தண்டப் பணத்தின் குறைந்தபட்சமான தொகையான 10 ஆயிரம் ரூபாவினை 2 இலட்சம் ரூபா வரை உயர்த்துவது தொடர்பிலான திருத்தச் சட்டமூலம் குறித்து இங்கு வாதப் பிரதிவாதங்களை முன்வைத்துக் கொண்டிருக்கின்றோம்.

எமது நாட்டின் நிலைபெறு அபிவிருத்தியினை மேற்கொள்வதுடன், மனிதவள அபிவிருத்தி தொடர்பிலும் நாம் பிரதான அவதானத்தைச் செலுத்த வேண்டியுள்ளது. மனிதவள அபிவிருத்தியை மேற்கொள்கின்றபோது, அதனை உறுதிபடுத்திக் கொள்ளும் வகையில் தண்டப் பண தொகையை  உயர்த்திக் கொண்டிருப்பதன் மூலமாக மாத்திரம் அது சாத்தியப்படப் போவதில்லை. ஒழுங்கு விதிகளை மீறி வாகனங்களைச் செலுத்துவோர் தொடர்பில் தண்டப் பணம் அண்மையில் மேலும் அதிகரிக்கப்பட்ட நிலையில், தற்போது எமது நாட்டில் வாகன விபத்துக்கள் குறைந்துள்ளனவா? என்ற கேள்வி எழுகின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இன்று நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் சட்ட திருத்தம் தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், மேலும் கருத்து தெரிவிக்கையில், வெறுமனே தண்டப் பணத்தை மாத்திரம் அதிகரித்துக் கொண்டிருக்காமல், மனித வள அபிவிருத்தி குறித்தும் அதிக அக்கறை செலுத்தப்பட வேண்டும் என வலியுறுத்துவதுடன், விதிக்கப்படுகின்ற தண்டப் பணம் ஒருபுறமிருக்க, உரிய குற்றங்கள் தொடர்பில் முறையான சோதனைகள் எமது நாட்டில் நடத்தப்படுகின்றனவா? என்பதை நாம் உறுதி செய்து கொள்ள வேண்டும் என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். ஏனென்றால், ஒழுங்கு விதிகளை மீறுகின்றவர்கள் குறித்து முறையான சோதனைகள் இடம்பெறுவதில்லை என்ற குற்றச்சாட்டும் எமது மக்களிடையே உள்ளது. அத்துடன், சோதனைகள் நடத்தப்படுகின்ற நிலைகளில்கூட முறைகேடுகள் அதிகளவில் இடம்பெறுவதால், அரசினால் அமுல்படுத்தப்படுத்தப்படுகின்ற தண்டப் பண தொகைகள் அரசுக்கு வந்து சேருகின்றனவா? என்பது குறித்தும் உரிய கவனத்தை செலுத்த வேண்டும்.

உதாரணமாக, தூர பயணங்களை மேற்கொள்ளும் தனியார் பேரூந்துகளை எடுத்துக் கொண்டால், பயணங்களை ஆரம்பிக்கும் முன்பதாக பேரூந்து காப்பாளர்கள் குறிப்பிட்ட தொகை பணத்தை நூறு ரூபா நோட்டுகளாக மாற்றி வைத்துக் கொள்வதாகவும், இடையில் போக்குவரத்து விதிமுறைகள் மீறப்பட்டு பேரூந்து நிறுத்தப்படும் போதெல்லாம் அந்த நூறு ரூபா நோட்டுகள் கைமாற்றப்படுவதாகவும் பல காலமாக ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது.

பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபடுகின்ற சாரதிகளின் சாரதி அனுமதிப் பத்திரங்கள் தொடர்பில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் நடைமுறைகள் பின்பற்றப்படுவதில்லை என்றவொரு குற்றச்சாட்டும் தொடர்ந்து நிலவி வருகின்றது. குறிப்பாக, மேற்படி சேவையில் ஈடுபடுகின்ற சாரதியின் அனுமதிப் பத்திரமானது அச் சேவையில் குறிப்பிட்ட வருடங்கள் ஈடுபட்டு, பழைமைவாய்ந்ததாக இருக்க வேண்டும் என்று கூறப்படுகின்றது. எனினும், அவ்வாறான நிலையினைக் கொண்டிராத சாரதி அனுமதிப் பத்திரங்களைக் கொண்டிருப்போர்கூட பயணிகள் போக்குவரத்துச் சேவையில் ஈடுபட்டு வருவதாகவும், இவர்கள் தொடர்பில் சோதனைகள் எதுவும் ஒழுங்குற நடத்தப்படுவதில்லை என்றும் கூறப்பட்டு வருவதையும் இந்த சபையின் அவதானத்துக்குக் கொண்டு வர விரும்புகின்றேன்.

அதே நேரம், தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் பயணிகள் சேவை சாரதிகளுக்கும், காப்பாளர்களுக்கும் வழங்கப்படுகின்ற அடையாள அட்டைகளைக் கொண்டிருப்பவர்கள்தான் அந்தச் சேவையில் ஈடுபடுகின்றனரா? என்பது தொடர்பிலும் அடிக்கடி சோதனைகளை மேற்கொள்ள வேண்டும். ஏனெனில், நாளொரு சாரதியும், நாளொரு காப்பாளரும் பயணிகள் போக்குவரத்து சேவைகளில் ஈடுபடுகின்ற நிலைமைகளும் அதிகளவில் இருப்பதையே காணக்கூடியதாக இருக்கிறது. இவ்வாறு பயணிகள் போக்கவரத்து சேவை குறித்து அனுபவங்கள் இல்லாமல், வெறுமனே வாகனங்களைச் செலுத்துவதற்கும், கட்டணங்களை அறவிடுவதற்கும் நபர்கள் ஈடுபடுத்தப்படுகின்ற நிலையில், பொது மக்கள் பல்வேறு சிரமங்களுக்கு உட்படுகின்ற சந்தர்ப்பங்கள் ஏராளம் என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

கொழும்பு – யாழ்ப்பாணம் தனியார்த் துறைப் போக்குவரத்திற்கான வழி அனுமதிப்பத்திரக் கட்டணங்களைப் பொறுத்தவரையில், அதி சொகுசு பேரூந்துகளுக்கு வருடத்திற்கு 11 இலட்சம் ரூபாவும், அரை சொகுசு பேரூந்துகளுக்கு வருடத்திற்கு 7 இலட்சம் ரூபாவும் என அறவிடப்படுகின்றது. இந்த அறவீடானது பல வருடங்களாக நீடித்து வருகின்றது. தற்போது வடக்கிற்கான இரயில் சேவையும் இடம்பெற்று வருகின்ற நிலையில், அநேகமான தனியார் பேரூந்துகள் போதிய வருமானங்களை கொண்டிராத நிலையிலேயே சேவைகளில் ஈடுபட்டு வருவதாகத் தெரிய வருகின்றது. எனவே, தற்போதைய நிலையை கவனத்தில் கொண்டு, மேற்படி அறவீடு தொடர்பில் போதிய ஒரு நியாயமானக் கொள்கை பேணப்பட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.

மேலும், யாழ்பாணத்திலிருந்து கொழும்பு தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கான தனியார் பேரூந்துகளுக்கான வழி அனுமதிப் பத்திரங்கள் யாழ் மாவட்ட பேரூந்து உரிமையாளர்களுக்கு வழங்கப்படாமல், ஏனைய மாவட்டங்களிலுள்ள தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கே அவை வழங்கப்பட்டு வருவதாகவும் ஒரு முறைப்பாடு முன்வைக்கப்படுகின்றது.

உதாரணமாக, யாழ்ப்பாணத்திற்கும் அம்பாறைக்குமான தனியார் பேரூந்து பயணிகள் சேவையை எடுத்துக் கொண்டால், அதற்கான வழி அனுமதிப் பத்திரம் அம்பாறை மாவட்ட பேரூந்து உரிமையாளருக்கு மட்டுமே வழங்கப்படுவதாகவும், யாழ்ப்பாண மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கு வழங்கப்படுவதில்லை என்றும் கூறப்படுகின்றது. இதே முறைமையே ஏனைய மாவட்டங்களுக்கான பயணிகள் போக்குவரத்து சேவைகளின் போதும் பின்பற்றப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

எனவே, இந்த நிலைமை குறித்தும் ஆராய்ந்து, ஏனைய மாவட்டங்களுக்கான பயணிகள் போக்குவரத்தின்போதும் யாழ்ப்பாணம் மாவட்ட தனியார் பேரூந்து உரிமையாளர்களுக்கும் வழி அனுமதிப் பத்திரங்களை வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

195 மில்லியன் ரூபா பொது மக்களின் நிதியை செலவு செய்து வவுனியாவில் அமைக்கப்பட்ட புதிய பேரூந்து நிலையமானது, தற்போது உரிய பயன்பாட்டுக்கு எடுக்கப்படாத நிலையில், நெல்லைக் காய வைக்கின்ற தளமாக மாறியிருப்பதைக் காண்கின்றோம். இது வேதனைக்குரிய விடயமாகும். உரிய பயன்பாட்டுக்கு எடுக்கப்படாத நிலையில் மக்கள் அதனை வேறு தேவைகளுக்கு பயன்படுத்துகின்ற நிலையே ஏற்பட்டிருக்கின்றது.

ஒரு பக்கம் பாரிய பொருளாதார நெருக்கடி நிலைக்கு முகங்கொடுத்த வருகின்ற ஒரு காலகட்டத்தில், இவ்வாறு அரச நிதிகளை செலவு செய்து அதன் மூலமாக உரிய பயன்களை எட்ட முடியாத நிலையில் இருக்கின்ற இவ்வாறான அபிவிருத்தி நடவடிக்கைகளால் யாருக்கு என்ன பயன் ஏற்படப் போகின்றது?  எனவே, இந்த பேரூந்து நிலையம் தொடர்பில் விரைவானதொரு ஏற்பாடு மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை இங்கு வலியுறுத்த விரும்புகின்றேன்.

அதே நேரம், யாழ்ப்பாணத்தைப் பொறுத்தவரையில், அங்கு தூர இடங்களுக்கான பயணிகள் போக்குவரத்துச் சேவைகளில் ஈடுபடுகின்ற தனியார் பேரூந்துகளுக்கென பேரூந்து நிலையமொன்று இல்லாத குறை காணப்படுகின்றது. எனவே, இந்த நிலையை அவதானத்தில் கொண்டு அதற்கொரு ஏற்பாடு மேற்கொள்ளப்படுவது அவசியமாகும் என்பதையும் இங்கு சுட்டிக்காட்டுவதுடன், அந்த ஏற்பாடானது வவுனியா புதிய பேரூந்து நிலையத்திற்கு இன்று ஏற்பட்டிருக்கின்ற நிலைமைக்குத் தள்ளப்படாத வகையிலான ஏற்பாடாக அமைய வேண்டும் என்பதையும் வலியுறுத்த விரும்புகின்றேன்.

அத்துடன், யாழ் நகரிலிருந்து யாழ் தீவகப் பகுதிகளுக்கான பயணிகள் போக்குவரத்துச் சேவையில் ஈடுபட்டு வருகின்ற வட பிராந்திய போக்குவரத்துச் சபை பேரூந்துகளில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் தீர்மானிக்கப்பட்டுள்ள கட்டணங்களைவிட அதிகமான கட்டணங்கள் பயணிகளிடமிருந்து பெறப்படுவதாகவும் ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது. எனவே, இது தொடர்பில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு உடனடியாக ஆராய்ந்து உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கின்றேன்.

மேலும், தனியார் பேரூந்துகளில் பயணச் சீட்டு வழங்கப்பட வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக அடிக்கடி ஊடகஙகளின் மூலமாக செய்திகள் வெளிவருகின்றனவே அன்றி, இந்த நடைமுறையானது ஒழுங்குற பின்பற்றப்படுகின்றதா? என்பது குறித்து உரிய சோதனைகள் நடத்தப்படுவதாக தெரிய வரவில்லை. இன்று நகரப் போக்குவரத்துகளில் ஈடுபடுகின்ற பல தனியார் பேரூந்துகள் இந்த நடைமுறையைப் பின்பற்றுவதாக இல்லை என்றே தெரிய வருகின்றது. எனவே, இது குறித்தும் உரிய தரப்பினர் கூடிய அவதானங்ளைச் செலுத்தி செயற்பட வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கின்றேன் எனத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

மக்கள் செலுத்துகின்ற வரித் தொகையானது அரசின் கடன்களையே செலுத்தப் போதாத நிலையில் மக்களின் தேவைகளைப் பூ...
மக்கள் எமக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்தால் அவர்களது நம்பிக்கை ஒருபோதும் வீண்போகாது - டக்ளஸ் எம்....
நவீன மாற்றங்களுக்கு தபால்துறை உள்ளடக்கப்பட வேண்டும் - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!