வவுனியா சண்முகபுரம் கிராமத்தின் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும் – டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Tuesday, November 22nd, 2016

வவுனியா சண்முகபுரம் கிராம மக்களுக்கு நிரந்தர வீட்டுத் திட்டம் மற்றும் அடிப்படை வசதிகள் எற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டுமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி.)யின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா மீள்குடியேற்ற, புனர்வாழ்வு, புனரமைப்பு, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் இந்து மத விவகாரங்கள் அமைச்சர் டி. எம். சுவாமிநாதன் அவர்களிடம் இன்றை தினம் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

வடக்கில் யுத்தம் நிலவிய காலகட்டங்களில் மடு, முல்லைதீவு, காங்கேசன்துறை, இரணை இலுப்பைக்குளம், புங்குடுதீவு போன்ற பகுதிகளிலிருந்து 1990 ஆண்டு பல்வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்த நிலையில், இறுதியாக பூந்தோட்டம் மற்றும் வாரிக்குட்டியூர் முகாம்களில் அகதிகளாக தங்கியிருந்த 83 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் வவுனியா, செட்டிக்குளம் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட, கங்கன்குளம் கிராம சேவையாளர் பிரிவின் கீழுள்ள சண்முகபரம் கிராமத்தில் 2007ம் ஆண்டு மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தற்காலிக வீடுகள் வழங்கப்பட்டு, அடிப்படை வசதிகள் முழுமையாக மேற்கொள்ளப்படாத நிலையிலேயே இம் மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட்டனர் என்றும், இவர்களது வாழ்வாதாரத்தை மேற்கொள்வதற்காக குடும்பத்திற்கு ஒரு ஏக்கர் பயிர்ச் செய்கைக்கான நிலம் தரப்படுமெனக் கூறப்பட்ட நிலையில், உவர்த் தன்மையும், கற்பாறைகளும் கொண்டதான கால் ஏக்கர் நிலம் வீதமே ஒரு குடும்பத்திற்கு வழங்கப்பட்டதாகவும், வடக்கில் ஏனைய பகுதிகளில் வீட்டுத் திட்டங்கள் பல வழங்கப்பட்ட போதிலும், இம் மக்களுக்கு இதுவரையில் எவ்வித வீட்டுத் திட்டங்களும் வழங்கப்படவில்லை என்றும், இங்குள்ள பாதைகள் மிகவும் பாதிப்படைந்துள்ள நிலையில் மழைக் காலங்களில் போக்குவரத்து செய்வதில் மாணவர்கள், நோயாளிகள், கர்ப்பிணிகள் போன்றோர் பாரிய சிரமங்களுக்கு உள்ளாகி வருவதாகவும், சுத்தமான குடி நீர் இன்மை காரணமாக பலரும் சிறு நீரகப் பாதிப்புகளுக்கு உள்ளாகி வருவதாகவும் இம் மக்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே, தற்போது மழைக் காலம் ஆரம்பமாகி இருப்பதால் இக் கிராமத்திற்கான உட்கட்டமைப்பு வசதிகளை உடனடியாக மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்ட வேண்டியதுடன், இவர்களுக்கான நிரந்தர வீடமைப்புத் திட்டங்களும் வழங்கப்பட வேண்டும்.

மேலும், இம் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள காணிகளில் விவசாய செய்கையினை மேற்கொள்ள முடியாதுள்ள நிலையில், இம் மக்களது வாழ்வாதாரம் கருதி மாற்று நடவடிக்கைகள் எடுக்கப்ட வேண்டுமென்றும் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வலியுறத்pயுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Untitled-1 copy

Related posts:


காணாமல் ஆக்கப்பட்டதன் வலிகளை அவர்களின் உறவுகளே அறிவர் -  நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு...
அமைச்சர் டக்ளஸ் முயற்சி: சிலதினங்களில் வவனியாவுக்கு பி.சி.ஆர் இயந்திரத்தை வழங்க சுகாதார அமைச்சர் பணி...
யாழ் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவராக அமைச்சர் டக்ளஸ் நியமனம் - கிளிநொச்சியின் பதில் தலைவராகவும் செய...