வவுணதீவு சம்பவம் குறித்து கைது செய்யப்பட்ட முன்னாள் போராளி விடுதலை செய்யப்பட வேண்டும் – ஊடகவியலாளர் சந்திப்பில் டக்ளஸ் எம்.பி.தெரிவிப்பு!

Friday, May 3rd, 2019

வவுணதீவு சம்பவம் குறித்து முன்னாள் புலிகள் இயக்க போராளி ஒருவர் சிறையில் இருக்கின்றார். ஆனால் வவுணதீவு சம்பவத்திற்கு தாமே பொறுப்பு என்று இன்று பயங்கரவாதச் செயலுடன் தொடர்புபட்டு கைதாகி இருப்பவர்கள் உரிமை கோரியுள்ளனர். அந்தவகையில்  குறித்த சம்பவத்தடன் தொடர்புபடுத்தி கைதுசெய்யப்பட்ட அந்த முன்னாள் புலிகள் இயக்க போராளி உடன் விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதுடன் அவருக்கான இழப்பீடுகளும் வழங்கப்பட வேண்டும்  என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்றையதினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

பாவம் ஒருபக்கம் இருக்க பழி இன்னொரு பக்கம் இருக்கிறது என்பது போல இந்த முன்னாள் போராளியின் நிலை அமைந்துள்ளது. ஆனால் குறித்த சம்பவம் நடைபெற்ற செய்தி வெளியானபோது யார் மீது குற்றம் சாட்டப்பட்டதோ அதை நாம் நம்பவில்லை. காரணம் குறித்த செயலை இன்றைய காலகட்டத்தில் முன்னாள் புலிகள் செய்திருக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கை எமக்கிருந்தது.

ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் கூட முன்னாள் அரச தலைவர்கள் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக கருணா அம்மானை வைத்து செய்வித்தாக தெரிவித்திருந்தனர். அனால் இன்று அது பொய்ப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்தகாலங்களில் நடந்த வன்முறைகள் கூட அரசியல் காரணங்களுக்காக  தெரிந்து கொண்டே இதர தரப்பினர் மீது பழி போடப்பட்டது.

உதாரணமாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி மீதும் பல சம்பவங்கள் சுமத்தப்பட்டன. ஆனால் விசாரணைகளுக்கூடாக அது ஈ.பி.டி.பி செய்திருக்கவில்லை என்பது நிரூபணமாகியுள்ளது.

அந்தவகையில் பாவம் ஒருபக்கம் இருக்க பழி இன்னொரு பக்கம் இருக்கிறது என்பதற்கு வவுணதீவு சம்பவமும் அது குறித்து முன்னாள் புலிகள் இயக்க உறுப்பினரும் ஒருவர் கைது செய்யப்பட்டதும்  சிறந்த எடுத்தக்காட்டாகும்  என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts:

வாக்குறுதி வழங்கியவர்களுக்கு அழுத்தத்தை கொடுத்து போராட்டத்தின் நியாயத்தை எடுத்துரைக்கும் என நம்புகிற...
இடமாற்றம் பெற்றுத் தாருங்கள்: முலைத்தீவில் பணிபுரியும் பொருளாதார உத்தியோகத்தர்கள் அமைச்சர் டக்ளஸ் தே...
வடமராட்சி பிரதேசத்தில் நீரியல் வள உயிரின உற்பத்திகளை ஊக்குவிப்பது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்த...