வன விலங்குகளைப் பாதுகாக்க செயற்றிறன்மிக்க நடவடிக்கை தேவை! -டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Wednesday, October 5th, 2016

அம்பாறை மாவட்டத்தில், பக்மிடியாவ – திம்பிரிகொல்ல வனத்திற்கு உட்பட்ட வட்டமடு பகுதியில் சுமார் 1000 ஏக்கர் வன நிலமானது, இயந்திரங்கள் கொண்டு அழிக்கப்பட்டு, சட்ட விரோதமான முறையில் பாரிய பரிமாண விவசாய செய்கையினை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிய வருகின்ற நிலையில், இதனைத் தடுத்து நிறுத்த உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி.)யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள், நிலையான பொருளாதாரம் மற்றும் வனஜீவராசிகள் அமைச்சர் காமினி ஜயவிக்கிரம பெரேரா அவர்களிடம் இன்றைய(05) தினம் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தியுள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள செயலாளர் நாயகம் –

சாகம குளத்தினதும், பன்னல் ஒய ஆற்றினதும் முக்கிய நீர்மூலமானதும், யானைகள் அடங்கலாக முக்கியமான வனஜீவிகளுக்கு உறைவிடமாகவும் காணப்படுகின்ற இந்தப் பகுதியில் மேய்ச்சல் தரைகளையும், காடுகளையும் அழித்து, வனப் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தை மீறி, மேற்படி செயற்பாடு மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிய வருகிறது. சுமார் 47136 ஹெக்டயர் நிலத்தினைக் கொண்ட இந்த வனப் பகுதியானது வனப் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்திற்கு இணங்க 2010 ஒக்டோம்பர் மாதம் 01ம் திகதியைக் கொண்டதும், 1673/45ம் இலக்கத்தைக் கொண்டதுமான வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் பாதுகாப்பான வனப் பகுதியாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். இது, லாஹூகல – கித்துலான தேசிய வனப் பூங்காவிற்கு எல்லையாக அமைந்துள்ளதுடன், பாரிய தொகையிலான யானைகளுக்கு உறைவிடமாகவும் இருந்து வருகிறது.

இந்த நிலையில், மேற்படி வனப் பகுதியை அழித்து, அதனை வேறு பயன்பாடுகளுக்கு உட்படுத்துவதன் மூலமாக அங்கு வாழ்ந்து வருகின்ற யானைகள் உட்பட்ட வனஜீவிகள் தமக்கான உறைவிடங்கள் இல்லாதுபோகும் நிலையில், அப் பகுதியை அண்டியுள்ள சாகம, ஆலையடிவேம்பு, அலிகம்பே போன்ற கிராமங்களுக்குள் மிக இலகுவாகவே நுழையக்கூடிய வாய்ப்புகள் ஏராளமுண்டு என்பதை தாங்கள் அறிவீர்கள் என நான் நம்புகின்றேன். இப்போதுகூட நமது நாட்டில் மக்களுக்கும் யானைகளுக்கும் இடையிலான மோதல்கள் காடுகளை அண்டியப் பகுதிகளில் ஏற்படுகின்ற மிக முக்கியமானதொரு பிரச்சினையாக உருவெடுத்துள்ளதை நாம் அனைவரும் நன்கு அறிவோம்.

மக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் 1976.09.17ம் திகதி 231ம் இலக்கத்தைக் கொண்ட வர்த்தமானி அறிக்கையின் மூலம் சுமார் 4000 ஏக்கர் நிலம் வட்டமடு மேய்ச்சல் தரையாக ஆலையடிவேம்பு பாலுற்பத்தியாளர்களின் பயன்பாட்டுக்காக அம்பாறை மாவட்ட செயலாளரினால் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதியானது தற்போது பக்மிடியாவ – திம்பிரிகொல்ல பாதுகாப்பு வனப் பகுதிக்குள் உள்ளடக்கப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது. இந்த மேய்ச்சல் நிலமானது 168 பால் உற்பத்தியாளர் குடும்பங்களின் சுமார் 15,000 கால்நடைகளுக்கு பயனளித்து வந்துள்ளதாக அறிய முடிகிறது. இத்தகைய நிலங்களைப் பலவந்தமாகப் பிடித்து, வேறு திட்டங்களுக்காக பயன்படுத்துகின்ற நிலையில், பால் உற்பத்தியை தங்களது வாழ்வாதாரமாகக் கொண்டுள்ள குடும்பங்கள் பாரிய பாதிப்புகளுக்கு முகங்கொடுத்து வருகின்றன.

அதே நேரம் இங்கு காணப்படுகின்ற நீர் மூலத்தைக் கொண்டு பாரிய பரிமாணத்தினாலான விவசாய செய்கையை மேற்கொண்டால் நாளடைவில் அப் பகுதியில் வனஜீவிகளுக்கு மட்டுமல்லாது, மக்களின் விவசாய செய்கைகள் உட்பட குடி நீருக்கே தட்டுப்பாடு நிலவக்கூடிய அபாயங்களும் ஏற்படலாம். இவ்வாறு காடுகள் அழிக்கப்பட்டு, அங்கு வாழும் வனஜீவிகளின் உறைவிடங்கள் இல்லாதொழிக்கப்படும் நிலையில், அப் பகுதியை அண்டி வாழும் மக்களுக்கு அது ஆபத்தாக அமையும்போது, நடவடிக்கை எடுப்பதற்கு முன்பாக இவ்வாறான மக்களுக்கு அழிவு தரக்கூடிய செயற்பாடுகளை இப்போதே தடுத்து நிறுத்த வேண்டும்.

இதே போன்ற காடழிப்புச் சம்பவங்கள் வடக்கில் – குறிப்பாக முல்லைதீவு மாவட்டத்திலும் தற்போது தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிய வருகிறது. எனவே, இதனைத் தடுத்து நிறுத்த இந்த அரசு மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் குறித்து விளக்க வேண்டும். கடந்த 08 மாதங்களில் சுமார் 140 யானைகள் உயிரிழந்துள்ளன என ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், தற்போது நாட்டில் யானைகள் உட்பட பல்வேறு வனஜீவிகள் தொடர்ந்து அழிக்கப்பட்டும், அழிந்தும் வருகின்றன. எனவே, இவற்றைப் பாதுகாக்க மேலும் செயற்றிறன்மிக்கதான நடவடிக்கைகளை மேற்படி அமைச்சு மேற்கொண்டு வருகின்றதா? என செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Srilanka parliament copy

Related posts:


ஒட்டுசுட்டானுக்கும், மருதங்கேணிக்கும் புதிதாக இரண்டு பிரதேச சபைகள் அமைக்கப்பட வேண்டும் - டக்ளஸ் தேவ...
யுத்தம் முடிந்து எட்டு ஆண்டுகள் கடந்தபோதிலும் கடற்றொழி லாளர்களது பிரச்சினைகள் தீராதிருப்பது வேதனை யள...
நிராகரிக்கப்படும் தேயிலையை கழிவுத் தேயிலை ஆக்காதீர்கள் - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. வலியுறுத்து!