வடமாகாண அமைச்சர்களது மோசடிகள் நிரூபிக்கப்பட்டும் நடவடிக்கைகள் எடுக்கப்படாமலிருப்பது ஏன்? நாடாளுமன்றில் டக்ளஸ் எம்பி கேள்வி!

Wednesday, May 9th, 2018

வடக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில், கடந்த காலங்களில் ஊழல், மோசடிகளில் ஈடுபட்டார்கள் என வடக்கு மாகாண முதலமைச்சரால் கூறப்பட்டு, நான்கு அமைச்சர்களுக்கு எதிராகவும் முதலமைச்சரினால் நியமிக்கப்பட்ட விசாரணைக் குழுவின் மூலமாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, நான்கு அமைச்சர்களும் பதவி நீக்கம்; செய்யப்பட்டார்கள். ஆனால், அவர்கள் மேற்கொண்டிருந்த ஊழல், மோசடிகள் எவை என்பது பற்றிய போதிய விபரங்கள் அவர்களைத் தெரிவு செய்துள்ள எமது மக்களுக்கு தெளிவாக அறிவிக்கப்படவில்லை. அத்துடன், அவர்களுக்கு எதிராக எவ்விதமான சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.

இத்தகையதொரு நிலையில், தற்போது புதிதாக நியமிக்கப்பட்டுள்ள வடக்கு மாகாண சபையின் அமைச்சர்களும் ஊழல், மோசடிகளில் ஈடுபட்டுள்ளனர் என அண்மையில் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

ஊழல், மோசடிகளில் ஈடுபடுகின்றவர்களை ஒரு சிலர் காப்பாற்ற முனைவதால், அதன் ஊடாக இழக்கப்படுகின்ற எமது மக்களுக்குரிய நிதியானது, மீளப் பெற வழியற்ற நிலைமையை ஏற்படுத்தி விடுவதுடன், அத்தகைய ஊழல், மோசடிகளில் ஈடுபடுகின்றவர்கள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பித்துக் கொள்வதற்கும், மீண்டும், மீண்டும் அப்பேர்வழிகள் அதே குற்றங்களைப் புரிவதற்கும், இதனை ஒரு வழிகாட்டலாகக் கொண்டு மேலும் பலரும் அதே குற்றச் செயல்களை புரிவதற்கும் இது வழியேற்படுத்திக் கொடுத்துக் கொண்டிருக்கின்றது என்பதை மறந்துவிடக் கூடாது.

அண்மையில் பாரிய இலஞ்சக் குற்றச்சாட்டின் பேரில் இரு அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர். இந்த இருவரையும் பதவிகள் நீக்கி, இவர்கள் தொடர்பிலான விசாரணைகளில் எவ்விதமான அழுத்தங்களும் எவராலும் கொடுக்கப்படக்கூடாது என ஜனாதிபதி அவர்கள் பணிப்புரை வழங்கியிருந்தார். இது வரவேற்கத்தக்கதொரு விடயமாகும். இந்த இருவரில் ஒருவர் அரச மரக் கூட்டுத்தாபனத்தின் தலைவராகப் பதவி வகித்தவர். இவர் கைது செய்யப்பட்டதன் பின்னர் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தலைவரும் ஏற்கனவே நிதி மோசடியில் ஈடுபட்டவர் என்றொரு விடயம் ஊடகங்களில் வெளிவந்திருப்பதை அறிய முடிந்தது. எனவே, இது குறித்தும் உரிய அவதானங்கள் செலுத்தப்பட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நீதித்துறை திருத்தச் சட்டமூலம், காலவிதிப்பு சட்டமூலம், தண்டனைச் சட்டக்கோவை திருத்தச் சட்டமூலம், குற்றவியல் நடவடிக்கை முறைச் சட்டக்கோவை திருத்தச் சட்டமூலம் தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related posts:

புதிய நவீன அடையாள அட்டை மும்மொழிகளும் இருக்கவேண்டும். நாடாளுமன்றத்தில்டக்ளஸ் தேவானந்தாவின் கோரிக்கை...
கொழுப்பு பேருவளை துறைமுகத்தின் சுகாதார நிலைமைகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேரில் ஆராய்வு!
ஐ.ஓ.எம். பிரதிநிதி - அமைச்சர் டக்ளஸ் இடையே விசேட சந்திப்பு - வி.எம்.எஸ். கருவிகளை பொருத்தும் செயற்பா...

மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கைக்கு மதிப்பளிக்கின்றோம்; - செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!
வடக்கின் சூழலுக்கு பாதிப்பினை ஏற்படுத்தும் அனைத்து செயற்பாடுகளும் நிறுத்தப்பட வேண்டும் - நாடாளுமன்றி...
அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை - நெடுந்தீவு கடலில் பலியான அமலமேயன் குடும்பத்தினருக்கு ஒரு மில்லியன் நிதி ...