வடக்கு மாகாண மருத்துவ நிலையங்களிலுள்ள 820 கீழ் நிலை பணியாளர்களை நிரந்தரமாக்குமாறு நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!
Wednesday, September 7th, 2016வடக்கு மகாணத்திலுள்ள மருத்துவ நிலையங்களில் நிரந்தர நியமனமோ, எதுவித கொடுப்பனவுகளோ இன்றிய நிலையில் யுத்தம் நிலவிய காலம் முதல் தொடர்ந்து தொண்டர்களாக பணியாற்றி வருகின்ற 820 கீழ் நிலை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி.)யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள், இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க அவர்களிடம் வலியுறுத்தியுள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள செயலாளர் நாயகம் அவர்கள், யுத்தம் நிலவிய காலம் முதல் வடக்கு மாகாணத்தில் பல்வேறு துறைகள் சார்ந்தும் பலர் தொண்டர் அடிப்படையில் பணியாற்றி வந்துள்ளனர். கடந்த காலங்களில் இவர்களில் பலரை அவர்களது தகைமைகளுக்கேற்ப நாம் நிரந்தர நியமனங்களில் அமர்த்தியுள்ளோம். தகைமைககள் அற்றோரை அத் தகைமைகளை அவர்கள் பூர்த்தி செய்யும் வகையில் விசேட ஏற்பாடாக கால அவகாசம் வழங்கப்பட்டு அவர்களுக்கான நியமனங்கள் வழங்கப்பட்டன.
அரசாங்க சுற்றறிக்கை 25/2014ன் பிரகாரம், கருணை அடிப்படையில் தற்காலிக ஊழியர்களுக்கு நிரந்தர நியமனங்கள் வழங்கப்படலாமென்றும், அதே சுற்றறிக்கையின் 7வது பந்தியில், தற்காலிக ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கும் பொருட்டு, முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தில் ஆளணிக்கும், அதற்கான நிதி ஒதுக்கீட்டுக்குமான அனுமதியைப் பெற முடியுமென்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மேற்படி பணியாளர்களை நிரந்தர நியமனங்களில் அமர்த்துவதற்கும், அவ்வாறு அமர்த்துவதற்கு தகைமைகள் தடையாக இருப்பின், விசேட ஏற்பாடாக, மேற்படி பணியாளர்களது நீண்ட கால தொடர் சேவையினைக் கருத்தில் கொண்டும், தேவையான தகைமைகளை அவர்கள் பூர்த்தி செய்வதற்கு கால அவகாசம் வழங்கப்பட்டு அவர்களை நிரந்தரப் பணிகளில் அமர்த்துவதற்கும் நடவடிக்கை எடுக்கும்படி செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|