வடக்கு மக்களின் தலைவிதியுடன் விளையாடிய மாபெரும் தடை நீங்கியது – டக்ளஸ் தேவானந்தா எம்.பி.தெரிவிப்பு!

Thursday, October 25th, 2018

எமது மக்களின் தலைவிதியுடன் கடந்த ஐந்து வருட காலமாக விளையாடிக் கொண்டிருந்த ஒரு மாபெரும் தடையானது, ‘எமது மக்களின் தலைவிதியுடன் இனி எவரும் விளையாடக் கூடாது, நாங்கள் மட்டுமே விளையாடுவோம்’ எனக் கூறிக் கொண்டு நேற்று விடைபெற்று விட்டது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நடைபெற்ற நிதி, மதுவரி மற்றும் உற்பத்தி வரி சட்டமூலங்கள் தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

போகிற போக்கில் சும்மா போகாமல் எமது மக்களை எச்சரித்துவிட்டே போயிருக்கிறது. ‘ஆபத்து காத்திருக்கிறது! மக்களே விழித்திருங்கள்’ எனக் கூறி எமது மக்களை எச்சரித்துச் சென்றிருக்கின்றது.

‘தமிழர் ஆட்சி மலர்ந்தது!’ எனக் கூறப்பட்டு கொண்டுவரப்பட்ட இந்த வடக்கு மாகாண சபையின் கடந்த 5 வருட ஆட்சிக் காலமானது தமிழ் மக்களுக்கு பாரிய துரோகங்களை இழைத்துவிட்டு ‘முடிந்தது தமிழ் துரோக ஆட்சி’ என முடிவுக்கு வந்துவிட்டது.

இந்த வடக்கு மாகாண சபை ஆட்சிபீடமேறிய காலத்திலிருந்து கடந்த 23ஆம் திகதி அதன் இறுதி அமர்வு இடம்பெற்றது வரையில் ஆண்டிருந்த கட்சியின் உறுப்பினர்களினதும், அதே கட்சியின் நாடாளுமன்றத்தினை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற உறுப்பினர்களினதும் கருத்துப் பரிமாற்றங்களை உற்று நோக்குகின்ற எவருக்கும், தமிழ் மக்களுக்கு ஆபத்து இந்தக் கட்சிக் காரர்களிடமும், ஆரம்பந்தொட்டு இந்தக் கட்சி சார்ந்து வழிவந்த கட்சிகள் மற்றும் குழுக்களிடமுமே காத்திருக்கின்றது என்பது மிக இலகுவாகப் புரியும் என நினைக்கின்றேன்.

இவர்கள், தமிழ் மக்களின் துரோகிகள் யார்? என  இவர்களுக்குள்ளேயே ஆளுக்காள் ஒற்றை விரலை நீட்டி மற்றவரைக் குற்றஞ்சாட்டி, மூன்று விரல்களை தம் பக்கம் மறைமுகமாக மடக்கி மூன்று மடங்கு துரோகிகள் தாங்கள் என்பதை ஒப்புக்கொண்டு வருகின்றார்கள்.

அந்த வகையில் ஒரு வழியில் எமது மக்களின் வாழ்க்கை தொடர்பில் இதுவரையில் இருந்துவந்துள்ள ஒரு பாரிய தடை நீங்கிவிட்டது. தமிழ் மக்களுக்கு தமிழ்த் தரப்பின் ஏனைய சில அரசியலவாதி;களினால் ஏற்படுத்தப்பட்டு வருகின்ற ஏனைய தடைகளையும் காலம் நீக்கிவிடும் என்ற நம்பிக்கை எமக்கிருக்கின்றது. அதனை அடுத்தடுத்த தேர்தல்களில் எமது மக்கள் முடிவு செய்வார்கள் என நாம் நம்புகின்றோம்.

Related posts:


எம்மீது வைக்கும் நம்பிக்கை ஒருபோதும் வீண்போகாது - முல்லை வேணாவில் மக்கள் மத்தியில் டக்ளஸ் எம்.பி. தெ...
சட்டவிரோத செயற்பாடுகள் அனைத்தும் விரைவில் கட்டுப்படுத்தப்படும் – ஊடக சந்திப்பில் அமைச்சர் டக்ளஸ் தே...
புறக்கணிக்கப்பட்ட மோதரை மீனவர்களுக்கு 7 மில்லியன் நிதியுதவி - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வழங்கி வைத்த...