வடக்கு போக்குவரத்து சபைகளில் இடம்பெற்ற பதவி உயர்வு முறைகேடுகள் இன்னமும் உரியவாறு விசாரிக்கப்படவில்லை – டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!

Monday, March 25th, 2019

1997ஆம் ஆண்டு இலங்கைப் போக்குவரத்து சபை மக்கள் மயமாக்கல் திட்டத்தின் கீழ் கம்பனிகளாக்கப்பட்டு, பின்னர் 2005ஆம் ஆண்டு மீண்டும் கம்பனிகள் ஒன்றிணைக்கப்பட்டு, இலங்கை போக்குவரத்து சபையாக மாற்றப்பட்டதன் காரணமாகப் பாதிக்கப்பட்ட திருகோணமலை, கந்தளாய், அம்பாறை, மட்டக்களப்பு, அக்கரைப்பற்று, கல்முனை போன்ற இலங்கை போக்குவரத்து சபை சாலைகளில் பணியாற்றி ஓய்வுபெற்றுள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்களுக்கு இதுவரையில் பங்குகளுக்கான நட்டஈட்டுக் கொடுப்பனவுகள் வழங்கப்படவில்லை என்றொரு கோரிக்கை முன்வைக்கப்பட்டு வருகின்றது. இவ்விடயம் தொடர்பிலும் கௌரவ அமைச்சர் அவர்கள் உடனடி அவதானமெடுத்து, மேற்படி பணியாளர்களுக்கான நட்டஈடுகளைப் பெற்றுக் கொடுப்பதில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இடம்பெற்ற போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு, துறைமுகங்கள், கப்பற்துறை மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சு ஆகிய அமைச்சுகள் தொடர்பிலான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

அத்துடன், வடக்கு இலங்கை போக்குவரத்து சாலைகளில் கடமையாற்றுகின்ற பணியாளர்களுக்கென அண்மையில் வழங்கப்பட்டிருந்த பதவியுயர்வுகளில் ஏற்பட்டிருந்த முறைகேடுகள் மற்றும் நியாயமற்றத்தன்மை தொடர்பில் நான் ஏற்கனவே கௌரவ அமைச்சர் அவர்களது அவதானத்திற்கு இச்சபையில் கொண்டு வந்திருந்தேன். எனினும், அவ்வாறு வழங்கப்பட்டுள்ள பதவியுயர்வுகளில் எதுவித மாற்றங்களும் இன்றி தொடர்வதாகவே தெரிய வருகின்றது. இது தொடர்பில் கௌரவ அமைச்சர் அவர்கள் உடனடி நடவடிக்கையினை எடுக்க வேண்டும். இவ்விடயம் தொடர்பில் ஒரு சுயாதீன விசாரணைக் குழு அமைத்து, நடவடிக்கை எடுக்கப்படுவதும் நல்லது என்றே தெரிவிக்க விரும்புகின்றேன்.

அதேநேரம், ஏ – 9 வீதியில் மிக அதிகளவிலான விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. மிக அதிகமாக தனியார் பேரூந்துகள் விபத்துகளில் சிக்குவதென்பது ஒரு வழக்கமாகி வருகின்றது. இது தொடர்பில் ஒரு பொறிமுறை அவசியமென்பதையே இத்தகைய விபத்துகள் உணர்த்துகின்றன. இரவு வேளைகளில் – அதிகமாக அதிகாலை வேளைகளில் இத்தகைய விபத்துகள் அதிகமாகி வருவதால், அதிக வேகமும், சாரதிகளின் நித்திரைக் களக்கமுமே விபத்துகளுக்குக் காரணம் எனவும் விசாரணைகளிலிருந்து வெளிப்படுத்தப்படுகின்றன. இதற்கு ஒரு தீர்வாக பாதையில் இடைக்கிடையே போக்குவரத்து பொலிஸார் நிறுத்தப்பட்டுள்ள போதிலும், அவர்கள் என்ன விடயத்தில் அக்கறை காட்டுகின்றார்களோ தெரியவில்லை, ஆனால் விபத்துகளுக்கு குறைபாடில்லை. எனவே, இது தொடர்பில் எடுக்;கக்கூடிய நடவடிக்கைகள் என்ன என்பது தொடர்பில் ஆராய்ந்து ஒரு முடிவு எட்டப்படல் அவசியமாகின்றது.  

இந்த நாட்டின் பொதுப் போக்குவரத்துத் துறையின் இன்னொரு முக்கியத் துறையான இரயில் போக்குவரத்துத் துறையைப் பொறுத்தும் இந்த நாட்டில் நிறையவே பிரச்சினைகள் இருப்பதையே காணக் கூடியதாக இரக்கின்றது.

தற்போது இருக்கின்ற இரயில் சேவையினை முதலில் ஒழுங்குபடுத்துகின்ற பணிகள் தேவை. அதாவது, இரயில்களின் பராமரிப்பு தொடர்பில் கேள்விக் குறியானதொரு நிலைமையே தொடர்ந்தும் காணப்படுகின்றது. சுத்தம் என்பது பல்வேறு சந்தர்ப்பங்களில் முற்றிலும் அற்ற நிலையிலேயே பல இரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்படுகின்றன என மக்கள் தொடர்ந்தும் முறையிட்டு வருகின்றனர். உரிய  காலத்திற்குக் காலம் பழுதுபார்க்கப்படாத நிலையிலேயே இரயில் பெட்டிகள், இயந்திரங்கள் என்பன தொடர்ந்து சேவையில் ஈடுபடுத்தப்படுகின்றன என்ற குற்றச்சாட்டும் இருக்கின்றது.

இந்த நாட்டைப் பொறுத்தவரையில் மொத்த பயணிகளில் நூற்றுக்கு 5 முதல் 7 வரையிலான பயணிகளே இரயில் போக்குவரத்தினைப் பயன்படுத்துகின்றனர் எனக் கூறப்படுகின்றது. அந்த வகையில், நாட்டில் அதிகரித்துள்ள போக்குவரத்துத் தேவைகளுக்கேற்ப இரயில் போக்குவரத்து சேவையின் விஸ்தரிப்பு அவசியமாகின்றது.

இந்த இரயில் சேவை விஸ்தரிப்பு தொடர்பில் அதிக அக்கறை கொள்ளாமல், இரயில் கட்டணங்களை மாத்திரம் அதிகரித்து, அதன் மூலமாக வருமானங்களை அதிகரிக்க எதிர்பார்ப்பு கொள்வது என்பது எமது மக்களால் ஜீரணித்துக் கொள்ள இயலாமல் இருப்பதும் இங்கு சுட்டிக் காட்டத்தக்கது.

மேலும், தினமும் காலை 5.30 மணிக்கு காங்கேசன்துறையிலிருந்து புறப்பட்டு, யாழ்ப்பாணத்திலிருந்து காலை 6.30 மணியளவில் புறப்படுகின்ற உத்தர தேவி இரயிலானது கொழும்பு கோட்டை இரயில் நிலையம் வரையிலேயே தனது சேவையினை தொடர்வதாகத் தெரிவிக்கின்ற பயணிகள், மேற்படி சேவையை கொழும்பு, கல்கிஸ்ஸை வரையில் தொடர்ந்தால் தங்களுக்கு பெரும் உதவியாக அமையுமெனத் தெரிவிக்கின்றனர். எனவே, இது தொடர்பில் கௌரவ அமைச்சர் அர்ஜூன ரனதுங்க அவர்கள் தனது அவதானத்தைச் செலுத்தி, மேற்படி உத்தர தேவி இரயில் சேவையினை கொழும்பு, கல்கிஸ்ஸை வரையில் தொடர்வதற்கு எற்பாடு செய்ய வேண்டுமென்ற கோரிக்கையினை இங்கு முன்வைக்க விரும்புகின்றேன்.

Related posts:

புலம்பெயர் தமிழ் மக்களின் உற்பத்தி முயற்சிகளை எம் தாயக தேசமெங்கும் ஊக்குவிப்போம் - டக்ளஸ் தேவானந்தா!
மக்கள் நிம்மதியுடன் வாழும் சூழல் தோற்றுவிக்கப்படும் வரை எமது அரசியல் பயணம் தொடர்ந்து பயணிக்கும் - மன...
தேசிய பாதுகாப்பு தெரு நாடகமானால் முதலீட்டாளர்கள் திரும்பியும் பார்க்கமாட்டார்கள் - டக்ளஸ் எம்.பி. நா...

எமது பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுத்தரக்கூடியவர் டக்ளஸ் தேவானந்தா மட்டுமே : புன்னாலைக்கட்டுவன் மக...
எமது கட்சியின் வெற்றி என்பது நிச்சயம் எமது மக்களின் வெற்றியாக அமையும் - பண்டத்தரிப்பில் டக்ளஸ் தேவான...
மயிலிட்டி மீன்பிடித் துறைமுக காவல் பணியாளர்கள் இருவர் நியமனம் – கடிதங்களை வழங்கிவைத்தார் கடற்றொழில் ...