வடக்கு, கிழக்கில் ஆழ்கடல் தொழிலை பரவலாக மேற்கொள்வதற்கு விஷேட பயிற்சி – அமைச்சர் டக்ளஸ் அறிவிப்பு!
Friday, November 27th, 2020இலங்கையில் கைப்பற்றப்பட்டுள்ள இந்திய இழுவை வலைப் படகுகளினால் எமது கடல் பகுதிகளுக்கும், கடற்றொழிலாளர்களுக்கும் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. கூடிய விரைவில் இத்தகைய பாதிப்புகளை அகற்றுவதற்கும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம்.
அத்துடன் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஆழ்கடல் கடற்றொழிலை பரவலாக மேற்கொள்ளத்தக்க வகையில் பயிற்சிகளை வழங்கி, அதற்குரிய படகுகள், கருவிகள் மற்றும் உபகரணங்களை வழங்குவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளையும் நாம் முன்னெடுக்கவுள்ளோம்.
நவீன தொழில்நுட்பத்துடன் கூடியதாக கடற்றொழிற்துறையை மேம்படுத்த வேண்டியத் தேவை மிக அதிகளவில் உணரப்பட்டுள்ள நிலையில், கொவிட் 19 கொரோனா தொற்று பரவல் தொடர்கின்ற நிலையிலும், சுகாதாரப் பாதுகாப்புடன் அதற்குரிய நடவடிக்கைகளை நாம் ஆரம்பித்துள்ளோம். அதேநேரம், தற்போதுள்ள கடற்றொழிற்துறை சார்ந்த உட்கட்டமைப்பு வசதிகளையும் நாம் மேம்படுத்தி வருகின்றோம்.
குறிப்பாக கடலுணவு வகைகளை அறுவடை செய்வது முதற்கொண்டு, அதனை கரையில் இறக்கி, போக்குவரத்தில் ஈடுபடுத்தி, நுகர்வோருக்கு வழங்குவது வரையில் நவீன தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தவுள்ளோம். இதன் மூலம், தரமான கடலுணவு வகைகளை எமது மக்களுக்கு நியாயமான விலையில் கிடைக்கச் செய்வதும், உற்பத்தியாளர்களுக்கு நியாயமான விலையில் அவற்றை விற்பனை செய்வதற்கான வாய்ப்புகளை விரிவுபடுத்துவதும் எமது நோக்கமாகும். அதேவேளை எமது நாட்டின் பொருளாதாரத் துறைக்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் ஏற்றுமதி தொடர்பில் அதிக அவதானங்களைச் செலுத்தி வருகின்றோம்.
மீன்பிடித் துறைமுகங்கள், நங்கூரமிடும் தலங்கள், இறங்கு துறைகள் போன்றவற்றில் நவீன தொழில்தொடர்பு வசதிகள், குளிரூட்டல் அறை வசதிகள், எரிபொருள் விநியோக வசதிகள், சுகாதார பாதுகாப்பு வசதிகள் உள்ளிட்ட உட்கடமைப்பு வசதிகளை மேம்படுத்துவதுடன், அவற்றின் கடல் வான்களை புனரமைப்பது, ஆழப்படுத்துவது, அனைத்து மீன்பிடித் துறைமுகங்களிலும் வருடா வருடம் தடைகளை ஏற்படுத்துகின்ற மணலை அகற்றுவது, மற்றும் புதிதாக கடற்றொழிலில் இணைகின்ற கடற்றொழிலாளர் சங்க உறுப்பினர்களுக்கு நவீனப் படகுகள் மற்றும் வலைத் தொகுதிகளை வழங்கி, சர்வதேச கடல், ஆழ்கடல் மற்றும் கரையோர கடற் பகுதிகள் சார்ந்த கடற்றொழிலை மேம்படுத்தி, பரவலாக்குவது எமது இலக்காகும்.
அந்த வகையில் கரையை அண்டியதான கடற் பரப்பினில் மீன் வாழ் பகுதிகளை இலகுவில் கண்டறிந்து கொள்வதற்கென தேவையான மென்பொருள் கருவிகளை வழங்குதல், சூழலுக்கு பாதிப்பில்லாத குறைந்த எரிபொருள் சிக்கனம் கொண்டதும், மற்றும் சூரிய சக்தியை பயன்படுத்தத்தக் மேம்படுத்தப்பட்ட படகுகள், இயந்திரங்களை அறிமுகஞ் செய்தல், அவற்றை பரவலாக்குதல், இனங்காணப்பட்ட பகுதிகளில் மீனினங்களை ஈர்ப்பதற்கான மீனின ஈர்ப்பு சாதனங்களைப் (FAD – Fish Agregation Device) பொருத்துதல், மீனினங்களின் மாதிரிகளை ஆய்வுக்கு உட்படுத்துவதற்கென இரசாயணகூடமொன்றினை அமைத்தல் போன்ற செயற்பாடுகளையும் முன்னெடுக்க உள்ளோம்.
Related posts:
|
|