வடக்கு கிழக்கிலுள்ள மாற்றுத்திறனாளிகளது வாழ்வியல் பாரபட்சமின்றி மேம்படுத்தப்பட வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா!

Thursday, July 21st, 2016

நாட்டில் கடந்த காலத்தில் ஏற்பட்ட  யுத்தம் காரணமாக வடக்கு – கிழக்கு மாகாணங்களில் மாற்று வலுவுள்ளவர்களின் எண்ணிக்கை ஏனைய மாவட்டங்களைவிட அதிகரித்துக் காணப்படுகின்றது. இவர்களில் பலர் எந்தவிதமான உதவிகளும் இன்றிய தங்களது வாழ்வாதாரங்களை ஈட்டிக்கொள்ள இயலாது பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்தவகையில் வடக்கு – கிழக்கு மாகாணங்களுக்கென ஒரு விசேட ஏற்பாடாக உதவிபெறும் பயனாளிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சமூக சேவைகள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் எஸ். பி. திசாநாயக்க அவர்களிடம் கோரிக்கை முன்வைத்துள்ளார்.

இன்றையதினம்(22) நாடாளுமன்ற விவாத நேரத்தில் உரையாற்றுகையிலேயே அவர் குறித்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

மேலும் அவர் உரையாற்றுகையில் –

வடக்கு மாகாணத்தில் மாற்று வலுவுடையவர்களாக 16,213 பேர் அடையாளங் காணப்பட்டுள்ளனர். இவர்களில் 4003 பேர் மாத்திரமே அரசாங்கத்தால் வழங்கப்படுகின்ற 3000 ரூபா கொடுப்பனவைப் பெறுகின்றனர். இந்த நிலையில் வடக்கு மாகாணத்தைப் பொறுத்த வரையில் மாற்று வலுவுள்ளவர்களில் 12,210 பேருக்கு மேற்படி கொடுப்பனவு கிடைக்காத நிலைமை காணப்படுகின்றது.

யுத்தம் காரணமாகப்  பாதிக்கப்பட்ட வடக்கு – கிழக்கு மாகாணங்களுக்கென ஒரு விசேட ஏற்பாடாக மேற்படி 3000 ரூபா பெறும் பயனாளிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்க முடியுமா? அல்லது, இவர்களுக்கென வேறு விசேட திட்டங்களை ஏற்படுத்தி, அதன் ஊடாக உதவக்கூடிய சாத்தியப்பாடுகள் உருவாக்கப்படுமா என கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன் வடக்கு மாகாணத்தில் மாற்று வலுவுள்ளவர்களுக்கான மலசல கூடங்களை அமைப்பதற்கென அண்மையில் வழங்கப்பட்ட  நிதி போதுமானதாக இல்லை என்றும், பலர் இத் திட்டத்தில் உள்வாங்கப்படவில்லை என்றும் கூறப்படுகின்றது. இவ்வாறு மாற்று வலுவுள்ளவர்களுக்கு வழங்கப்படும் உதவித் திட்டங்களின்போது,  அந்தந்த செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு ஏற்ற வகையிலான நிதி உதவிகளை வழங்குவதற்கும், பலரை அத் திட்டங்களுக்குள் உள்வாங்கக்கூடிய வகையிலும் அத்திட்டங்களை வகுப்பதற்கான சாத்தியப்பாடுகள் தொடர்பில் தெளிவுபடுத்த முடியுமா? எனவும் மேற்படி தனது கேள்விகளுக்கான பதில்களையும், எடுக்கப்படக்கூடிய நடவடிக்கைகள் தொடர்பான விளக்கங்களையும் அமைச்சர் எஸ். பி.திசாநாயக்க வழங்குவார் என எதிர்பார்ப்பதாகவும் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.


ஓர் இனத்தின் உரிமைகள் பற்றிப் பேசும்போது ஏனைய இனங்களைப் புண்படுத்தும் வகையிலான கருத்துகள் தவிர்க்கப்...
அழிவுக்கு வழி காட்டியவர்கள் ஊடக சுதந்திரம் பேசுவதா?
லஞ்சம், ஊழல் ஆணைக்குழுவின் பணியை செயற்திறன்மிக்கதாக்க வேண்டும் - டக்ளஸ் தேவானந்தா
இன விகிதாசாரத்திற்கு ஏற்ப அரச தொழில்வாய்ப்புகள் வழங்கப்பட்டிருந்தால் எமது இளைஞர், யுவதிகளுக்கு வேலைய...
வாக்குறுதிகளுக்கு செயலுருவம் கொடுத்தவர்கள் நாம்  - கட்டைக்காட்டில் டக்ளஸ் தேவானந்தா!