வடக்கில் மட்டும் மும்மொழி அமுலாக்கம் என்பது  தமிழ் மக்களிடையே சந்தேகத்தையே ஏற்படுத்தும் – வடக்கு ஆளுனருக்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கடிதம்!

Wednesday, January 16th, 2019

இலங்கை நாடானது மதச்சார்பற்ற நாடாகவும், தமிழும், சிங்களமும், சமமாக அரச கரும மொழிகளாக அமுல்படுத்தப்பட வேண்டும் என்றும் ஆங்கிலம் இணைப்பு மொழியாக இருக்கலாம் என்றும் நாம் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றோம்.

நீங்கள் வடக்கின் ஆளுனராக பதவி ஏற்றுக்கொண்ட நாளில் வடக்கில் தமிழும், சிங்களமும் சகல திணைக்களங்களிலும் சமாந்தரமாக அரச கரும மொழிகளாக பிரயோகிக்கப்பட வேண்டும் என்பதற்காக பாடுபடப்போவதாக கூறியிருந்தீர்கள். அதை நாமும் வரவேற்கின்றோம் என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தள்ளார்.

இன்றைதினம் வடக்கு மாகாண ஆளுனர் சுரேன் ராகவன் அவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்திலேயே மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார். மேலும் அந்தக் கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது,

யுத்தப்பாதிப்புகளுக்கு முகம் கொடுத்து, கடந்த பத்து ஆண்டுகளாக மெல்ல தலை நிமிர்த்திவரும் வடக்கு மாகாணத்தின் மீள் எழுச்சிக்கு தங்களின் சேவையும் பங்களிப்புச் செலுத்தும் என்று நம்புகின்றோம்.

அந்தவகையில் தாங்கள் வடக்கு மாகாணத்தின் கௌரவ ஆளுனராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களால் நியமிக்கப்பட்டதற்கு எமது மகிழ்ச்சியையும், வரவேற்பையும், வாழ்த்துக்களையும் தெரிவத்துக்கொள்கின்றோம்.

பல தசாப்தங்களாக இலங்கை அரசுகளால் மேற்கொள்ளப்பட்டுவந்த பாரபட்சங்களாலும், இன ரீதியான அணுகுமுறைகளாலுமே இலங்கையில் அழிவு யுத்தம் ஒன்று ஏற்படக்காரணமாக அமைந்தது. அதுவே இலங்கை அரசுகளின் செயற்பாடுகள் மீது தமிழ் மக்கள் நம்பிக்கையை இழக்கும் நிலையை ஏற்படுத்தியது. இந்நிலையில், தங்களின் இருமொழிக்கொள்கை அமுலாக்கம் என்ற உயரிய சிந்தனையின் நேர்மையான நோக்கமானது வடமாகாணத்தில் மட்டும் அமுல்படுத்தப்படுமானால் அது தமிழ் மக்களிடையே சிங்கள மொழியை திணிப்பதான ஒரு சந்தேகத்தை தோற்றுவித்துவிடக்கூடாது என்பதே எமது அக்கறையாகும்.

ஆகையால் வடக்கில் மட்டுமல்லாமல் ஏனைய மாகாணங்களிலும் மும்மொழிக் கொள்கையை சம காலத்தில் அமுலாக்கம் செய்வதற்கு தங்களின் நல்லெண்ணத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று தமிழ் மக்களின் சார்பாக தங்களிடம் ஒரு கோரிக்கையை முன்வைக்கின்றோம்.

எமது மக்களின் கோரிக்கையின் நியாயத்தைப் புரிந்துகொள்வீர்கள் என்ற நம்பிக்கையுடன், வடக்கு மாகாணத்தின் மீள் எழுச்சிக்காகவும், அபிவிருத்திக்காகவும், எமது இளைஞர், யுவதிகளின் வேலைவாய்ப்புக் கோரிக்கையை தீர்க்கவும் நீங்கள் முன்னெடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும், தொடர்ந்தும் மக்களோடு வாழ்ந்துவருபவர்கள் என்றவகையில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியாகிய நாம் பூரணமான ஒத்துழைப்பை தங்களுக்கு வழங்குவோம் என்பதையும் தெரிவித்துக்கொள்கின்றோம் என்றும் அந்தக் கடிதத்தில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts:

இரயில் பயணிகள் மீதான கல்லெறித் தாக்குதல்களைத் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு -  டக்ளஸ் தேவா...
எமது மண்ணில் டக்ளஸ் தேவானந்தா காலடி வைத்த நாள் நெடுந்தீவுக்கு மட்டுமல்ல தீவகத்திற்கே ஒளிபிறந்த நாள்!
‘இழப்பீட்டு அலுவலகம் வெகுவிரைவில்’ என விளம்பரங்களில் காட்டப்பட்டு வருகின்றது – நாடாளுமன்றில் டக்ளஸ் ...

எம்மீது சுமத்தப்பட்டுவந்த பழிகளுக்கு பதில்களை காலத்திடம் ஒப்படைத்தோம். காலம் எம்மை ஏமாற்றிவிடவில்லை ...
கல்வியை நம்பிக்கையுடன் முன்னெடுத்துச் செல்லுங்கள் : உங்கள் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக என்றும் நாம்...
சட்ட விரோத செயற்பாடுகளால் சுமார் ஐம்பது வகையான மீன் இனங்கள் அழிவடைகின்றன - மட்டக்களப்பு நாவலடி கடற்ற...