வடக்கில் மக்கள் உடற் காயத்திற்கும் உளக்காயத்திற்கும் உள்ளாகியிருக்கின்றார்கள் – நாடாளுமன்றத்தில் டக்ளஸ் எம்.பி!

வடமாகாணத்தில் குறிப்பாக யாழ்ப்பாண நகரத்தில் மாத்திரமே ஒசுசல விற்பனை நிலையம் இருப்பதாக அறிகின்றேன். கடந்த 30 ஆண்டுகளாக மக்கள் உடற்காயத்திற்கும் உளக்காயத்திற்கும் மருந்து தேடியும், பரிகாரம் தேடியும் போராடிக்கொண்டு இருக்கின்றார்கள். எனவே, வடமாகாணத்தில் உள்ள எல்லா பிரதான வைத்தியசாலை வளாகங்களிலும் ஒசுசல விற்பனை நிலையத்தின் கிளைகளைத் திறந்து அந்த மக்களின் உடற் காயங்களுக்கு நியாயமான வழியிலும், இலகுவான வழியிலும் மருந்துகள் கிடைப்பதற்கு வழிவகை செய்து உதவுமாறு அமைச்சர் அவர்களைக் கேட்டுக் கொள்கின்றேன். அத்தகைய முயற்சிக்கு நாங்கள் சகல ஆதரவையும் வழங்கத் தயாராக உள்ளோம் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
2015ஆம் ஆண்டின் 05ஆம் இலக்க தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபை சட்டத்தின் கீழ் 02 ஒழுங்கு விதிகள் தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் –
2017.06.14ஆம் திகதிய இல. 2023/ 30 உடைய அதிவிஷேட வர்த்தமானி அறிவித்தலின் படி இவ் ஒழுங்கு விதிகள் மருந்துகளைப் பதிவு செய்தலும் அவற்றிற்கு உரிமம் அளித்து கட்டணங்கள் அறவிடுவது தொடர்பானதாகும். இது தொடர்பாகப் பின்பற்றவேண்டிய நடைமுறைகள் இவ் ஒழுங்கு விதிகளின் கீழ் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
அதாவது, செயன்முறைப்படுத்துவதற்கான கட்டணம், மருத்துவப் பரீட்சாத்தங்களுக்கான செயன்முறைக் கட்டணங்கள், சான்றிதழ்களுக்கான கட்டணங்கள், உரிமத்துக்கான கட்டணங்கள், ஏனைய அங்கீகாரங்களுக்கான கட்;டணங்கள், மருந்துகளின் பகுப்பாய்வுகளுக்கான கட்டணங்கள் மேலும் இது தொடர்பான கட்டணங்கள் அட்டவணைப்படுத்தி விபரிக்கப்பட்டுள்ளன.
நான் இங்கு குறிப்பிட விரும்புவது என்னவென்றால் இவ்வாறான சிக்கலான செயற்பாடுகளை நடை முறைப்படுத்தும் போது கால தாமதமின்றி தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகார சபை நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ் ஒழுங்கு விதிகளின் கீழ் அனுமதிகளைப் பெறுவதற்காக ஏராளமான நிறுவனங்கள் கியூவில் (வரிசையில்) காத்து நிற்பதாகக் கேள்விப்படுகின்றேன். இத் தேக்க நிலைக்கு உடனடியாக நிவாரணம் காணப்பட வேண்டும். இது தொடர்பாக கௌரவ அமைச்சர் அவர்கள் தனது கரிசனையைச் செலுத்தித் தீர்வு தருவார் என்று நம்புகின்றேன்.
Related posts:
|
|