வடக்கில் புதிய மீன்பிடித் துறைமுகங்களை அமைக்கும் நகர்வுகள் ஆரம்பம்!

Friday, June 3rd, 2022

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில்,

பருத்திதுறை, குருநகர், பேசாலை மற்றும் பலப்பிட்டிய ஆகிய மீன்பிடித் துறைமுகங்களை மானிய மற்றும் இலகு கடன் அடிப்படையில் அமைப்பதற்கான நடவடிக்கைகளில் இந்தியா ஆர்வம் செலுத்தி வருகின்றது.

இதுதொடர்பாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்திற்கும் இலங்கை மீன்பிடி துறைமுகக் கூட்டுத்தாபனத்திற்கும் இடையில் கலந்துரையாடல்களும் இடம்பெற்று வருகின்றன.

இலங்கை மீன் பிடிக் கூட்டுத்தாபனத்தின் செயற்பாடுகள் மற்றும் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடும் நோக்கில், குறித்த கூட்டுத்தானத்தின் நிறைவேற்று அதிகாரிகளை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சந்தித்துக் கலந்துரையாடினார்.

இதன்போது, கடற்றொழில் அமைச்சருக்கு மேற்படி விடயம் தெளிவுபடுத்தப்பட்டதுடன், ஏனைய விடயங்களும் ஆராயப்பட்டன.

குறிப்பாக, எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக, மீன் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளதுடன், உள்ளூர் சந்தைகளிலும் விலை உயர்ந்து காணப்படுவதாக சுட்டிக்காட்டிய கடற்றொழில் அமைச்சர், இந்த நிலையை தொடருவதற்கு அனுமதிக்க முடியாது என்று தெரிவித்ததுடன் தேவையான எரிபொருளை பெற்றுக்கொள்வது தொடர்பாகவும் விரிவாக ஆராய்ந்தார்.

அத்துடன், வெல்லமன்கர பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள துறைமுகப் பகுதியில் சூரிய கலம்களை பொருத்தி மேலதிக வருமானத்தை ஈட்டுவதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் ஆலோசனை வழங்கப்பட்டிருந்த நிலையில், அதன் முன்னேற்றங்கள் தொடர்பாகவும் கடற்றொழில் அமைச்சர் கேட்டறிந்திருந்ததுடன், அடையாளப்படுத்தப்பட்ட ஏனைய பிரச்சினைகளை படிபடியாக தீர்ப்பதற்கான ஆலோசனைகளையும் அதிகாரிகளுக்கு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. – 03.06.2022

Related posts: