வடக்கில் பாரிய அபிவிருத்தி – ஆசிய அபிவிருத்தி வங்கி அதிகாரிகளிடம் அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்து!

வடக்கு மாகாணத்தில் நிலைபேறான கடற்றொழில் அபிவிருத்தியை ஏற்படுத்தும் நோக்கிலான கலந்துரையாடல் ஆசிய அபிவிருத்தி வங்கி அதிகாரிகளுக்கும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் இடையில் இடம்பெற்றுள்ளது.
காணொளி ஊடாக இன்று (10.05.2021) இடம்பெற்ற கலந்துரையாடலில், கடந்த ஆட்சியாளர்களின் தவறான அணுகுமுறை காரணமாக கைவிடப்பட்ட பாரிய அபிவிருத்தி திட்டம் தொடர்பாக ஆசிய அபிவிருத்தி வங்கி மீளாய்வு செய்ய வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் இதன்போது கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
பருத்தித்துறை, பேசாலை, குருநகர் ஆகிய துறைமுகங்கள் மற்றும் இறங்குதுறைகள், நங்கூரமிடும் தளங்கள் உட்பட பல்வேறு வேலைத் திட்டங்கள் உள்ளடக்கப்பட்ட பாரிய அபிவிருத்தி திட்டத்திற்கான நிதியுதவியை வழங்குவதற்கு கடந்த ஆட்சிக் காலத்தில் ஆசிய அபிவிருத்தி வங்கி முன்வந்திருந்தது.
எனினும், அப்போதைய ஆட்சியாளர்களின் தவறான அணுகுமுறை காரணமாக ஆசிய அபிவிருத்தி வங்கியினால் குறித்த திட்டத்தினை கைவிடுவதற்கு தீர்மானித்திருந்தது.
இந்நிலையில், கைவிடப்பட்ட அபிவிருத்தி திடடத்தினை மீளச் செயற்படுத்த வேண்டியதன் அவசியம் தொடர்பாக இன்றைய கலந்துரையாடலில் கடற்றொழில் அமைச்சினால் தெளிவுபடுத்தப்பட்டது.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முன்வைத்த கருத்துக்களை ஏற்றுக்கொண்ட அசிய அபிவிருத்தி வங்கியின் நிறைவேற்று அதிகாரிகள், குறித்த விடயம் தொடர்பாக ஆராய்வதாக உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
|
|