வடக்கில் கைத்தொழில் துறையை மேம்படுத்த வேண்டும் – டக்ளஸ் எம்.பி. வலியுறுத்து!

எமது பகுதிகளைப் பொறுத்தவரையில், சிறு கைத்தொழில் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்ற குறிப்பிட்ட ஒரு துறையினர் தவிர்த்து, கைத்தொழிற்துறை என்பது மிகவும் பின்தங்கிய நிலையிலேயே காணப்படுகின்றது. இது குறித்து நானும் பல தடவைகள் இங்கே பல்வேறு கோரிக்கைகைளை முன்வைத்திருக்கின்றேன் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் கைத்தொழில், வாணிப அலுவல்கள், நீண்டகால இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம் மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு, வெகுசன ஊடகத்துறை பற்றிய அமைச்சரவை அந்தஸ்த்தற்ற அமைச்சு ஆகிய இரு அமைச்சுகள் தொடர்பிலான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில் –
ஏற்கனவே வடக்கு மாகாணத்தில் காணப்பட்ட கைத்தொழிற்துறைகளை மீளக் கட்டியெழுப்புவதற்கான முயற்சிகள் இன்னும் எட்டியபாடில்லை. அதேநேரம் இந்த வருட வரவு – செலவுத் திட்டத்திலும் புதிதாக கைத்தொழிற் பேட்டைகள் அமைப்பது பற்றி பிரஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
கடந்த வரவு செலவுத் திட்டத்தில், அச்சுவேலி கைத்தொழிற்பேட்டையில் புதிதாக தொழில் முயற்சிகளை ஆரம்பிக்கின்ற நிறுவனங்களின் மாதாந்த மின்சாரக் கட்டணத்தில் 50 சதவீதத்தை அரசு பொறுப்பேற்பதாகவும், பொது வசதிகளை மேற்கொள்வதாகவும் கூறப்பட்டு, 100 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், மேற்படி கைத்தொழிற்பேட்டைக்கான பிரதான பாதையானது இன்னமும் பழுதடைந்த நிலையிலேயே காணப்படுகின்றது. வவுனியா பூந்தோட்ட கைத்தொழிற் பேட்டையின் நிலைமையும் இன்னமும் முன்னேற்றம் கண்டதாக இல்லை.
அதேநேரம், புல்மோட்டை கணிய மணல் படிவத்தினையும் ஜப்பானிய நிறுவனமொன்றுக்கு ஒப்படைக்கவுள்ளதாகவும் தற்போது தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. சர்வதேச சந்தையிலே மிகவும் தரம் குறைந்த இல்மனைட்கூட ஒரு மெற்றிக் டொன் குறைந்த பட்சமாக அமெரிக்க டொலர் 400க்கும் 425க்கும் இடைப்பட்ட விலையில் விற்கப்படுகின்றதாகவும், தரத்தில் கூடிய இலங்கை இல்மனைட் ஒரு மெற்றிக் டொன் அமெரிக்க டொலர் 500க்கும் 1000க்கும் இடைப்பட்ட விலையில் விற்பனையாகின்றது எனவும் கூறப்படுகின்ற நிலையில், மேற்கூறப்பட்ட ஜப்பானிய நிறுவனத்திற்கு ஒரு மெற்றிக் டொன் 145 அமெரிக்க டொலர் வீதமாக வழங்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
எனவே, இது குறித்த உண்மை நிலையை கௌரவ அமைச்சர் அவர்கள் தனது உரையில் தெளிவபடுத்துவார் என நினைக்கின்றேன் என தெரிவித்தார்.
Related posts:
|
|