வடக்கில் உள்ள அஞ்சலகங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் விரைவாக தீர்க்கப்பட வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. வலியுறுத்து!

யாழ் மாவட்டத்தில் சுன்னாகம் வட்டுக்கோட்டை சங்கானை கைதடி அச்சுவேலி காங்கேசன்துறை பண்டதரிப்பு – மன்னார் மாவட்டத்திலே முருங்கன் சிலாவத்துறை வங்காலை பேசாலை – முல்லைத்தீவு மாவட்டத்திலே முல்லைத்தீவு முள்ளியவலை – வவுனியா மாவட்டத்திலே நேரியகுளம் போன்ற பகுதிகளில் செயற்பட்டு வருகின்ற தபாலகங்களுக்கும் இயக்கச்சி உப தபாலகத்திற்கும் புதிய கட்டிடங்களின் தேவை இருக்கின்றது. அத்துடன் மைலிட்டி தையிட்டி முகமாலை உப தபாலகங்களை மீளத் திறக்க வேண்டியத் தேவையும் உள்ளது.
யாழ்பாணம் மன்னார் வவுனியா தபாலகங்களுக்கு 30 கிலோ வோட்ஸ் சக்தி கொண்ட மூன்று மின் பிறப்பாக்கிகள் தேவையாக உள்ளன.
கிளிநொச்சி மாவட்ட தபால் திணைக்களத்திற்கு 50 தந்திக் கதிரைகள் 10 தொடர் இராக்கைகள் 15 மேசைகள் 02 நிழற் பிரதி எடுத்தல் இயந்திரங்கள் கிளிநொச்சி பரந்தன் பூநகரி பளை தபாலகங்களுக்கு தொலைநகல் கருவிகள் கிளிநொச்சி தபாலகத்திற்கு குழாய்க் கிணறு போன்ற தேவைகள் இருக்கின்றன.
சிறு பணியாளர்கள் அல்லது பதிவு செய்யப்பட்ட பதிவாளர்களை – அனுபவ அடிப்படையில் நிரந்தர பணிக்கு உள்வாங்கப்படுபவர்களை நிரந்தர நியமனமாக்கல் தொடர்பில் உள்ள தவறுகளை திருத்த வேண்டியுள்ளது. அதாவது 6/2006 சம்பள திட்ட மட்டத்தின்படி பதிவு செய்யப்பட்டுள்ள பதிவாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிய வருகின்றது. இதனால் நீண்டகாலமாக அவர்களை நிரந்தரமாக்குவதில் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன.
யாழ்ப்பாணத்தில் துரித தபால் சேவைக்கு வாகனம் ஒன்று தேவைப்படுகின்றது. தாளையடி உப தபாலகம் தபாலகமாக தரமுயர்த்தப்பட வேண்டியுள்ளது.
யாழ்ப்பாணம் பிரதான தபாலகத்தின் கூரை நீண்டகாலமாக அதாவது 2004 ஆம் ஆண்டிலிருந்து புனரமைக்கப்படாமல் இருப்பதால் மழை காலத்தில் ஒழுகும் நிலையில் உள்ளது. இதனைத் திருத்தியமைக்க வேண்டிய தேவை மிகவும் அவசியமாகும்.
அதே நேரம் உலக தபால் தினம் கொண்டாட ஆரம்பித்து 43வது நினைவு தினத்தை முன்னிட்டு எமது நாட்டிலுள்ள தபாலகங்களைத் தரப்படுத்தல் செய்த போது அதில் முதலிடத்தை மாகாண மட்டத்திலும் தேசிய மட்டத்திலும் சாவகச்சேரி தபாலகமே பெற்றுக் கொண்டுள்ளது. அந்த வகையில் சாவகச்சேரி தபாலகத்தின் அனைத்து பணியாளர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன் — என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்றைதினம் நடைபெற்ற வரவு செலவு திட்ட குழநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்
Related posts:
|
|