வடக்கில் உப தபாலகங்களுக்கு காணி இருந்தும் கட்டிடங்களை அமைத்துக் கொள்ளமுடியாமல் உள்ளது ஏன் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி கேள்வி!
Wednesday, September 5th, 2018வடக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில், குறிப்பாக, யாழ் மாட்டத்தில் பல தபாலகங்கள், உப தபாலகங்களுக்கு காணிகள் இருக்கின்ற நிலையில், கட்டிடங்களை அமைத்துக் கொள்வதற்கான நிதி ஏற்பாடுகள் இன்மை காணப்படுவதாகத் தெரிய வருகின்றது.
காங்கேசன்துறை, பருத்தித்துறை, அச்சுவேலி, சங்கானை, பண்டத்தரிப்பு, வட்டுக் கோட்டை, சுன்னாகம், வவுனியா மாட்டத்தில் செட்டிக்குளம், மன்னார் மாவட்டத்தில் எருக்கலம்பிட்டி, சிலாவத்துறை மற்றும் முள்ளியவளை போன்ற இடங்களில் இத்தகைய பிரச்சினைகளைக் காணக்கூடியதாக இருப்பதால், கௌரவ அமைச்சர் அவர்கள் இவ்விடயம் தொடர்பில் உரிய அவதானங்களைச் செலுத்தி, கட்டிடங்களை அமைப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள முன்வர வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் நடைபெற்ற அஞ்சல் அலுவலக கட்டளைச் சட்டத்தின் கீழான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில் –
கொழும்பு ஜனாதிபதி மாளிகை அருகிலுள்ள தபால் திணைக்களத்திற்கு உரிய பழைமையான கட்டிடமானது கடந்த கால யுத்த சூழ்நிலை காரணமாக தேசிய பாதுகாப்புப் பிரிவினால் சுவீகரிக்கப்பட்ட நிலையில், இதுவரையில் அக் கட்டிடம் தபால் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதா? எனக் கேட்க விரும்புகின்றேன்.
மேற்படி பழைய கட்டிடம் தபால் திணைக்களத்திற்கு கிடைக்காத நிலையில், 2000ஆம் ஆண்டு முதல் மாதாந்தம் சுமார் 3 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா வாடகையிலேயே கொழும்பு, பிரிஸ்டல் வீதியில் மேற்படித் திணைக்களம் தனது பணிகளை ஆற்றி வருவதாகத் தெரிய வருகின்றது.
இந்த நிலையில், மேற்படி ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் அமைந்துள்ள, தபால் திணைக்களத்திற்கு உரிய பழைய கட்டிடத்தையும் ஹோட்டல் துறைக்கு விற்பதற்கு எண்ணமிருப்பதாகக் கூறப்படுவதில் உண்மை உண்டா? எனக் கேட்க விரும்புகின்றேன்.
தபால் திணைக்களத்தின் இத்தகைய செலவுகளை கட்டுப்படுத்தும் வகையில், இருக்கின்ற வளங்களை சரியாகப் பயன்படுத்தியும், மேலும் நவீன கேள்விகளுக்கு ஏற்ப தபால் துறையை மாற்றியமைத்தும் செயற்பட்டால், இத்துறையானது நட்டமேற்பட வாய்ப்பில்லை என்றே கருதுகின்றேன்.
Related posts:
|
|