வடக்கில் அதிகரித்துவரும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை வேண்டும் – டக்ளஸ் எம்.பி. வலியுறுத்து!

Wednesday, March 27th, 2019

வடக்கு மாகாணத்தைப் பொறுத்தமட்டில், கடந்த ஆண்டு சிறுவர்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் மிகவும் அதிகரித்துள்ளதாகவே தெரிய வருகின்றது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நடைபெற்ற சுகாதாரம், போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சு, மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் உலர் வலய அபிவிருத்தி அமைச்சு ஆகிய அமைச்சுகள் தொடர்பிலான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் –

வடக்கில் அதிகமாக முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களிலேயே இத்தகைய சம்பவங்கள் அதிகரித்துக் காணப்படுகின்ற நிலைமை தென்படுகின்றது.

கடந்த இரண்டு ஆண்டுகளிலுமாகப் பார்க்கின்றபோது 22 சிறுவர் கடத்தல் சம்பவங்கள் பதிவாகியிருப்பதாகக் கூறப்படுகின்ற நிலையில் சிறுவர்கள் தற்கொலைக்கு முயற்சிக்கின்ற பரிதாபகரமான நிலைமைகளும் வடக்கு மாகாணத்திலே பதிவாகி வருகின்றது.

அந்த வகையில், யாழ் மாவட்டத்தில் 2 பேர், மன்னார் மாவட்டத்தில் 4 பேர், கிளிநொச்சி மாவட்டத்தில் 5 பேர், என 11 சிறுவர்கள் கடந்த ஆண்டில் கடத்தப்பட்டுள்ளனர் எனக் கூறப்படுகின்றது.

அதேநேரம், முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒருவரும், மன்னார் மாவட்டத்தில் 7 பேரும், வவுனியா மாவட்டத்தில் ஒருவரும், கிளிநொச்சி மாவட்டத்தில் 17 பேருமான சிறுவர்கள் தற்கொலைக்கு முயற்சித்துள்ளனர்.

2017ஆம் ஆண்டில் வவுனியா மாவட்டத்தில் 2 சிறுவர்களும், கிளிநொச்சி மாவட்டத்தில் 2 சிறுவர்களுமாக 4 சிறுவர்கள் தற்கொலை செய்து உயிரிழந்துள்ளனர் என்றும் பதிவாகியிருப்பதாகத் தெரிய வருகின்றது.

மேலும் பாலியல் ரீதியிலான துஸ்பிரயோகங்களுக்கு உட்பட்டவர்கள், உள ரீதியாகப் பாதிக்கப்பட்டவர்கள், உறவினர்களால் புறக்கணிக்கப்பட்டவர்கள் என பாரியளவிலான சிறுவர்கள் வடக்கு மாகாணத்திலே பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

எனவே, சிறுவர்களுக்கு எதிரான சம்பவங்கள் தொடர்பிலான விழிப்பூட்டல் நடவடிக்கைகள் தற்போதைக்கு விட மேலும் அதிகமான அளவிலும், பரந்தளவிலும் மேற்கொள்ளப்பட வேண்டிய தேவை இருப்பதுடன், சிறுவர்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பிலான சட்ட ஏற்பாடுகளை வடக்கு மாகாணத்திலே கடுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய அவசியமும் காணப்படுகின்றது என்பதை நான் இங்கு வலியுறத்த விரும்புகின்றேன்.

Related posts:

வடக்கில் புகையிலை உற்பத்தி விடுபடுகிறது - மத்தியில் புகை யிலை உற்பத்தி எடுபடுகிறதா? - விவசாய அமைச்சர...
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு ஆசி வேண்டி கொழும்பு ஶ்ரீ கதிரேசன் ஆலய சிறப்பு பூசை வழிபாடுகள்!
உடற்கல்வி ஆசிரியர்கள் தமது ஆசிரியர் பயிற்சிகளை யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ள முடியும் – அமைச்சர் டக்ளஸ் ...

வன்னியில் வறுமையைப் போக்க கிட்னியை விற்கும் கைம்பெண்கள் : அவலத்தை போக்க உடனடி நடவடிக்கை -அமைச்சர் டக...
ஒருமித்த நாடு என்பது சமஷ்டி அல்ல : ஒற்றை ஆட்சியே - பருத்தித்துறையில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்த...
தேச விடியல் நேசர் அமரர் கார்த்திகேசு வேலும்மயிலும் அவர்களுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அஞ்சலி மரிய...