வடக்கிற்கும் கிழக்கிற்கும் வறுமையே முகவரி – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!

Thursday, March 14th, 2019

இன்று இந்த நாட்டில் வறுமை அதிகம் கொண்ட மாகாணமாக வடக்கு மாகாணமும், அதற்கடுத்த நிலையில் கிழக்கு மாகாணமும் காணப்படுகின்றது. வடக்கு மாகாணத்தில் உற்பத்தித்துறைகளில் முன்னேற்றம் இல்லை. கைத்தொழிற்துறை வீழ்ச்சி நிலையினையே காட்டுகின்றது. வேலையின்மை பிரச்சினையானது அதிகரித்துள்ளது. வடக்கு மாகாணத்தில் மத்திய மற்றும் மாகாண ரீதியலான அரச நிறுவனங்களில் காணப்படுகின்ற வெற்றிடங்களும் பிற மாவட்ட ஆளணிகளால் நிரப்பப்படுகின்றன.

பல்வேறு வகையிலான நில ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இவ்வாறு பல்வேறு பிரச்சினைகளை சுமந்தவர்களாக எமது மக்கள் தங்களது பிரச்சினைகளை யாரிடம் போய்க் கூறி ஆறுதல் பெறுவது எனத் தெரியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கின்றனர்.

தங்களது குறைகளை கடவுளிடம் போய்க் கூறலாம் என எமது மக்கள்  கோவில்களுக்கு சென்றாலும், கோவில்களையும் தொல்பொருள் என்ற ரீதியல் ஆக்கிரமித்துக் கொள்கின்ற நிலையே இன்று நிகழ்ந்து கொண்டிருக்கின்றது.

வீட்டு வசதிகள் இன்மை காரணமாக இடம்பெயர்ந்த மக்கள் இன்னமும் வெய்யிலுக்கு வாடியும், மழைக்கு நனைந்தும் நாளாந்தம் அவதியுற்று வருகின்றனர். இன்னமும் மீளக்குடியயேற வேண்டிய நிலையில் இருக்கின்ற மக்களின் அவலங்களும், ஏற்கனவே மீளக்குடியேற்றப்பட்ட மக்களுக்கான அடிப்படை வசதிகள்கூட இன்னமும் செய்து கொடுக்கப்படாத நிலையில், அம் மக்கள் அனுபவித்து வருகின்ற இன்னல்களும் இன்னமும் தீர்ந்ததாக இல்லை.

வவுனியா மாவட்டத்தில் வவுனியா வடக்கு, காஞ்சுரமோட்டையில் கடந்த சுமார் 07 மாதங்களுக்கு முன்னர் குடியேற்றப்பட்ட 46 குடும்பங்கள் இதுவரையில் எவ்விதமான அடிப்படை வசதிகளும் இன்றி வாழந்து வருகின்றன. இதில் 17 குடும்பங்கள் இந்தியாவிலிருந்து நாடு திரும்பிய குடும்பங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அம்பாறை மாவட்டத்தில் பொத்துவில் பகுதி தமிழ் கிராமங்களில் சுமார் 08 ஆயிரம் வரையிலான தமிழ்க் குடும்பங்கள் மீளக்குடியேறி வாழும் நிலையில் அவர்களுக்கு எவ்விதமான அடிப்படை வசதிகளும் இல்லை என்றே கூறப்படுகின்றது. மேலும் இப்பகுதியில் வனவளத் திணைக்களத்தின் கெடுபிடிகள் காரணமாக 278 தமிழ்க் குடும்பங்கள் நிர்க்கதியான நிலையில் உள்ளதாகவும் தெரிய வருகின்றது.

கிளிநொச்சி மாவட்டத்தில், வட்டக்கச்சி பகுதியில் புதுக்காடு கிராமத்திலே மக்கள் தகரக் கொட்டகைகளிலும், கோழிக் கூடுகளிலும் வாழும் நிலையில் இருக்கின்றனர்.

முல்லைத்தீவு, துணுக்காய் பகுதியில் நிரந்திர வீடு தருவதாகக் கூறப்பட்டு, அத்திவாரம் வெட்டுமாறு அரச அதிகாரிகள் கூறியதால் அத்திவாரங்களை வெட்டிவிட்டு, மக்கள் ஒரு மாதம் கடந்த நிலையிலும், வீடமைப்பிற்கான நிதி இன்றி காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இவ்வாறு இன்னும் பல மீள்குடியேற்ற பகுதிகளில் இந்த நிலைமையே காணப்படுகின்றது. அந்த வகையில், மீள்குடியேற்ற நடவடிக்கைகளில் அவதானங்களைச் செலுத்துகின்றபோது, மீளக்குடியேற்றிய பகுதிகளின் அடிப்படை வசதிகள் தொடர்பிலும் மிகுந்த அவதானங்கள் செலுத்தப்பட வேண்டியது அவசியமாகும் என்பதையே இங்கு வலியுறுத்த விரும்புகின்றேன் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நடைபெற்ற 2019ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் தேசிய கொள்கைகள், பொருளாதார அலுவல்கள், மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு மாகாண அபிவிருத்தி மற்றும் தொழிற் பயிற்சி, திறன்கள் அபிவிருத்தி, இளைஞர் அலுவல்கள் அமைச்சு தொடர்பிலான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

Related posts: