வடக்கின் விவசாய பண்ணைகளில் முன்னாள் போராளிகளுக்கு தொழில்வாய்பு வழங்கப்பட வேண்டும் – டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

விவசாயப் பண்ணைகள் தொடர்பில் எனது அவதானத்தைச் செலுத்துகின்றபோது, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பொருளாதாரம் என்பது மிகவும் நீண்ட காலமாகவே பாரம்பரிய விவசாயத்தையே மூலமாகக் கொண்டிருக்கின்ற நிலையிலும், மேற்படி விவசாயத் துறையானது தொழிற்துறை நோக்கிய விரிவாக்கப் போக்கில் போதுமான அபிவிருத்தி காணப்படாத நிலையிலேயே தேங்கியிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கின்றது. அந்த வகையில், விவசாய உற்பத்திகள் சார்ந்த மூலப் பொருட்கள் அதிகளவிலான பொருளாதார மேம்பாட்டினை ஈட்டக்கூடிய விவசாய மூலாதார கைத்தொழில் நோக்கியதான வழிமுறைக்கு உட்படுத்தப்பட வேண்டியுள்ளதை இங்கு அவதானதிற்குக் கொண்டு வர விரும்புகின்றேன் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்
மேலும், எமது விவசாய முயற்சிகள் பண்ணை விவசாய முறைமைகளாக மாற்றப்படுகின்ற சூழலில், மிக அதிகளவிலான பயன்பாடுகளை அத்துறை சார்ந்த மக்கள் பெறக்கூடியதான வாய்ப்புகள் ஏராளம் என்பதையும் அவதானத்தில் கொண்டு, அத்தகைய முயற்சிகளின்பால் செல்ல வேண்டியிருப்பதையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
அதே நேரம், எமது மக்களின் சொந்த குடியிருப்புக் காணிகள் மற்றும் பொருளாதார வளமிக்க காணிகளைப் போன்றே எமது மக்களின் விவசாய நிலம் சார்ந்த காணிகளும் இன்னும் முழுமையாக விடுவிக்கப்படாத நிலையில் காணப்படுகின்றன. அவற்றை விடுவிப்பது தொடர்பிலும் அரசு உடனடி அவதானங்களைச் செலுத்த வேண்டும் என்பதை மீண்டும் வலியுறுத்தி,
கிளிநொச்சி மற்றும் முல்லைதீவு மாவட்டங்களிலே சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் கீழ் சுமார் 11 ஆயிரம் ஏக்கர் விவசாயப் பண்ணைக் காணிகள் இருப்பதாகத் தெரிய வருகின்றது. இந்தக் காணிகளிலே 11 ஆயிரம் பேர் பணியாற்றி வருவதாகவும், இவர்களுக்கு தலா 35 ஆயிரம் ரூபா வீதம் மாதக் கொடுப்பனவுகள் வழங்கப்படுவதாகவும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் அண்மையில் தெரிவித்திருந்ததாக ஊடகங்களில் செய்திகள் வெளிவந்திருந்தன.
இந்த செய்தி உண்மையாயின், சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தைச் சேர்ந்த 11 ஆயிரம் பேர் பணிபுரிவதற்கு வடக்கிலுள்ள பண்ணைகள் மாத்திரம்தான் இந்த நாட்டில் உள்ளனவா என்ற கேள்வி எழுகின்றது. வடக்கிலே புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் எவ்விதமான வருமானங்களுமின்றி, மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் வாழ்ந்து வருகின்றனர். அது மட்டுமல்லாது, வடக்கிலே வேலைவாய்ப்புகளற்ற பலர் மிகவும் பரிதாபகரமான நிலையில் உயிர்வாழ வேண்டிய நிர்ப்பந்தங்களுக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். எமது நாட்டிலே வறுமை அதிகம் கூடிய மாவட்டமாக முல்லைதீவு மாவட்டமே காணப்படுகின்றது. இவ்வாறன நிலைமைகளை கருத்தில் கொண்டு பாரக்கின்றபோது, மேற்படி விவசாயப் பண்ணைகள் மூலமான தொழில்வாய்ப்புகளைப் பெறக்கூடிய அதிக தகுதி கொண்டவர்களாக அப்பகுதியில் வேலைவாய்ப்பற்றவர்களே காணப்படுகின்றனர்.
அதே நேரம், முன்னாள் போராளிகளே மேற்படி பண்ணைகளில் பணியாற்றி வருகின்றனர் என்றொரு கதையும் கூறப்படுகின்றது. இதை ஏற்றுக் கொள்ள முடியாது. புனர்வாழ்வளிக்கப்பட்ட பல ஆயிரக்கணக்கான முன்னாள் போராளிகள் வாழ்வாதாரங்களை ஈட்டிக் கொள்வதில் பெரும் பாதிப்புகளுக்கு உட்பட்டிருப்பதை நாம் காணக்கூடியதாக இருக்கும் நிலையில், முன்னாள் போராளிகள் 11 ஆயிரம் பேருக்கு மேற்படி பண்ணைகளில் தொழில்வாய்ப்பு வழங்கப்படுகின்றது என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. எனவே, வடக்கின் வேலைவாய்ப்பின்மை பிரச்சினையைத் தீர்க்கும் வகையிலும், தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்ற தேசிய நல்லிணக்க முயற்சிகளுக்கு மேலும் வலு சேர்க்கும் வகையிலும் இதற்கொரு உகந்த ஏற்பாட்டினை இந்த அரசு மேற்கொள்ள வேண்டும்.
அத்துடன், அண்மையில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்த கௌரவ பிரதமர் அவர்கள், நாட்டின் பொருளாதார அபிவிருத்தியில் வடக்கு மாகாணத்தின் பங்களிப்பினை வலியுறுத்தியுள்ளதுடன், அங்கு முதலீடுகளை மேற்கொள்வோருக்கு 200 வீத வரிச் சலுகை வழங்கப்படும் என்றும் தெரிவித்திருப்பது வரவேற்கத்தக்கதொரு விடயமாகும். அதே நேரம், கௌரவ பிரதமர் அவர்கள் ஏற்படுத்திக் கொடுக்கும் இந்த அரிய வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்வதற்கு புலம் பெயர் எமது உறவுகளும் முன்வர வேண்டும் என்ற அழைப்பினை நான் இங்கு விடுக்கின்றேன்.
எமது பகுதிகளில் இத்தகைய பொருளாதார அபிவிருத்தித் திட்டங்கள் ஏற்படுத்தப்பட்டு, அவற்றின் மூலமான வேலைவாய்ப்புகள் மிக அதிகளவில் உருவாக்கப்பட வேண்டிய ஒரு கட்டாயத் தேவை எம்முன் உள்ளது. இவ்வாறான செயற்பாடுகளின் ஊடாகவும் எமது பகுதிகளில் இடம்பெற்று வருகின்ற பல்வேறு சமூக மற்றும் கலாசார ரீதியிலான சீர்கேடுகளை போதியளவில் அகற்ற முடியும் என்பதையும் நேற்றையதினம் நாடாளுமன்றத்தில் 2015ஆம் ஆண்டின் 16ஆம் இலக்க ஒதுக்கீட்டுச் சட்டத்தின் கீழ் நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது
Related posts:
|
|