வடக்கின் பொருளாதார மேம்பாட்டிற்கு கைத்தொழில் மற்றும் வாணிபத்துறை அமைச்சின் பங்களிப்பு மிக அவசியம் – டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு!

Friday, December 2nd, 2016

வடக்கு மாகாணத்தில் எமது பொருளாதாரத் துறையை மீளக் கட்டியெழுப்ப வேண்டியிருக்கிறது. இந்த முயற்சியில் கைத்தொழில் மற்றும் வாணிபத்துறை அமைச்சின் தேவையானது அத்தியவசியமாகிறது என்பதை இங்கு சுட்டிக் காட்ட விரும்புகின்றேன் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்றில் வலியுறுத்தியுள்ளார்.

இன்றையதினம் 2017ம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தில் கலந்தகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் அவர் குறிப்பிடுகையில் –

அதாவது,  ஏற்படுத்தப்பட வேண்டிய பொருளாதார ஈட்டு நடவடிக்கைகள் உள்ளூர் வளங்களையும் பயன்படுத்தியதான, உள்ளூர் விற்பனைச் சந்தையை மாத்திரம் நம்பியிராத தொழில் முயற்சிகளே தேவைப்படுகின்றன என்பதை அவதானத்திற்குக் கொண்டு வர விரும்புகின்றேன்.

அந்த வகையில் கௌரவ அமைச்சர் ரிசாட் பதூர்தீன் அவர்கள் சில திட்டங்களை ஏற்கனவே முன்வைத்திருப்பதை நான் வரவேற்கிறேன். ஒன்று – ஏற்கனவே இருந்த, இருக்கின்ற கைத் தொழிற்சாலைகளை மீளப் புனரமைப்புச் செய்து அவற்றைச் செயற்படுத்துவது.

அந்த வகையில் பார்க்கும்போது, காங்கேசன்துறை சீமெந்துத் தொழிற்சாலை. இதை மீள செயற்படுத்துவது தொடர்பில் சூழல் ரீதியிலான சில விடயங்கள் முன்வைக்கப்படுகின்றன. இலங்கையில் ஏனைய சில பகுதிகளில் மக்கள் குடியிருப்புகளுக்கு மத்தியில்  சீமெந்து பொதி செய்யப்படும் ஒரு பாரிய தொழிற்சாலை இயங்கி வருவதை இங்கு குறிப்பிட விரும்புகின்றேன். அந்த வகையில், அதைப் போன்றதொரு முயற்சியைக் காங்கேசன்துறை பகுதியிலும் மேற்கொள்ள முடியும் என நான் நினைக்கின்றேன்.

அதே நேரம், காங்கேசன்துறைப் பகுதியில் ஏற்கனவே சீமெந்துத் தொழிற்சாலை இயங்கிவந்த நிலையில், மூலப் பொருள் காரணமாகத் தோண்டப்பட்ட நிலங்கள் மூடப்படக்கூடிய தேவைகளும் காணப்படுகின்றன.

தற்போது ஆனையிறவு உப்பளம் செயற்பட்டு வருகின்ற நிலையில், அதனை மேலும் மேம்படுத்தவும், பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை மீள செயற்படுத்தவும், அதே போன்று, ஒட்டுசுட்டான் ஓட்டுத் தொழிற்சாலை, கிளிநொச்சி ஸ்கந்தபுரம் சீனித் தொழிற்சாலை போன்ற தொழிற்சாலைகள் மீண்டும் செயற்படுத்தப்படும் நிலையில், எமது பகுதி போதியளவு பொருளாதார ரீதியில் வளர்ச்சியினைப் பெற இயலும் என்பதுடன், பல தொழில்வாய்ப்புகளையும் உருவாக்க முடியுமென நம்புகின்றேன் என மேலம் தெரிவித்துள்ளார்.

02

Related posts:

யுத்தத்தால் பாதிப்படைந்த மக்களுக்கும்  புனர்வாழ்வு பெற்றவர்களுக்கும் விசேட நிதித்திட்டம் வேண்டும் - ...
மக்கள் எமக்கு அளித்த அரசியல் பலத்தைக் கொண்டு தொடர்ந்தும் மக்கள் நலன்சார்ந்த பணிகளை முன்னெடுப்போம் – ...
தொடரும் சீரற்ற காலநிலை - கடற்றொழிலாளர்கள் பாதிக்கப்படாத வகையில் விழிப்புணர்வுகளை தொடர்ச்சியாக முன்னெ...