வடக்கின் பாரிய நிதி மோசடிகளுக்குப் பிள்ளையார் சுழி போட்டது “சப்றா” நிறுவனமே – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!

Friday, June 8th, 2018

‘சப்றா யுனிக்கோ பினான்ஸ் லிமிட்டெட்” என்ற தனியார் நிதி நிறுவனமே வடபகுதியில் அன்று எமது மக்களின் பாரியளவிலான நிதியை மோசடி செய்திருந்ததுடன் இன்றைய நிதி நிறுவனங்களின் மோசடி நிலைமைக்கும்” பிள்ளையார் சுழி போட்டது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்றில் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாடாளுமன்றில் நேற்றையதினம் நடைபெற்ற நாட்டிலுள்ள நிதி நிறுவனங்கள் தொடர்பாக நிலவுகின்ற பிரச்சினைகள் பற்றிய சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில் –

நிதி நிறுவனங்களின் பெயரால் எமது மக்களை பாதிப்புகளுக்கு உட்படுத்தி, அம் மக்களைத் தற்கொலைக்குத் தள்ளுகின்ற நிலைமையை எமது பகுதியில் 80களின் முற்பகுதியில் காணக்கூடியதாக இருந்தது. ‘சப்றா யுனிக்கோ பினான்ஸ் லிமிட்டெட்’ என்ற தனியார் நிதி நிறுவனமே அன்று எமது மக்களின் பாரியளவிலான நிதியை மோசடி செய்திருந்தது. அந்த வகையில் எமது நாட்டு மக்களை மோசடி செய்கின்ற வழிமுறையை நிதி நிறுவனங்களுக்கு எடுத்துக் காட்டிய முன்னோடியாகவே இந்த சப்றா நிதி நிறுவனம் எமது வரலாற்றில் பதியப்பட்டிருப்பதை நான் இங்கு வேதனையுடன் எடுத்துக்கூற விரும்புகின்றேன்.

54,018 ரூபா முதலீடு செய்தால் முதிர்ச்சியில் 1 இலட்சம் ரூபா கிடைக்குமெனக் கூறியும், மேலும் பல்வேறு கவர்ச்சிகரமான விளம்பரங்களை மேற்கொண்டும், 207ஆம் இலக்கம், மின்சார நிலைய வீதி, யாழ்ப்பாணம், 61ஆம் இலக்கம், நியூ புல்லர்ஸ் வீதி, கொழும்பு 04 எனும் முகவரிகளைக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டிருந்த இந்த சப்றா நிதி நிறுவனம், எமது மக்கள் கஸ்டப்பட்டு உழைத்த பணத்தையும், தங்களது பெண் பிள்ளைகளின் திருமணத்திற்கென சிறுகச் சிறுக பெற்றோர்கள் சேமித்திருந்த பணத்தையும், ஓய்வூதியர்கள் தங்களது எதிர்காலம் கருதி சேமித்திருந்த பணத்தையும் அன்றே ஏப்பமிட்டு, இத்தகைய மோசடிகளுக்கு வடக்கில் பிள்ளையார் சுழி போட்டிருந்தது.

இந்த நிதி நிறுவனமானது, கொழும்பை தலைமையகமாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டிருந்த நிலையில், இதனது முகவர் நிலையமானது யாழ்ப்பாணத்தில் ‘சப்றா உமா எக்ஸ்போர்ட் லிமிட்டெட்’ என்றே ஆரம்பிக்கப்பட்டிருந்த போதிலும் மேற்படி நிதி நிறுவனம் குறித்த விளம்பரங்கள் ‘சப்றா யுனிக்கோ பினான்ஸ் லிமிட்டெட்’ என்றே மேற்கொள்ளப்பட்டிருந்தது.

மேற்படி நிதி நிறுவனத்தால் யாழில் எமது மக்களிடமிருந்து கோடிக்கணக்கான பணம் சேகரிக்கப்பட்டு, பின்னர் அந்த பணம் இந்த நிதி நிறுவனத்தின் மூலமாக ஆரம்பிக்கப்பட்டு, இன்றும் யாழில் செயற்பட்டுக் கொண்டிருக்கின்ற ஓர் ஊடக நிறுவனத்திற்கு மாற்றப்பட்டு, அபகரிப்பு செய்யப்பட்டது என்றே தெரிய வருகின்றது.

அக்காலகட்டத்தில் எமது மக்களை ஆசை காட்டி சுருட்டப்பட்ட கிட்டத்தட்ட சுமார் 60 கோடி ரூபாவுடன் 1993 ஆம் ஆண்டில் இந்த நிதி நிறுவனம் இழுத்து மூடப்பட்டபோது, யாழ்ப்பாணத்தில் அரச நிர்வாகம் செயலில் இருக்கவில்லை. இந் நிறுவனம் மூடப்பட்டு, அதன்  நிர்வாக இயக்குநர் இந்தியாவுக்கும் தப்பியோடி விட்டார்.

மேற்படி மோசடிக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளுக்கான சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தும், குற்றவாளிகள் இதுவரையில் தண்டனைக்கு உட்படுத்தப்படாத நிலையில், இதனை இன்றும் தமக்கு சாதமாகப் பயன்படுத்திக் கொள்கின்ற சில நிதி நிறுவனங்கள் இன்றும் எமது மக்களை ஏமாற்றுகின்ற நிலைமைகளே தொடர்கின்றன.

இந்த சப்றா நிறுவனம் அன்று எமது மக்களிடையே மேற்கொண்டிருந்த நிதி மோசடி காரணமாக பலர் தற்கொலை செய்து கொண்டனர். இவர்களில் கோண்டாவில் கிழக்கு பகுதியைச் சேர்ந்த துரைரட்ணம் என்பவரது தற்கொலையானது அக்காலத்தில் மிகுந்த பரபரப்பை எற்படுத்தியிருந்தது. மேலும் பலர் மனநோயாளிகளாக ஆக்கப்பட்டிருந்தனர்.

எனவே, மோசடி நிதி நிறுவனங்கள் தொடர்பில் அவதானத்தைச் செலுத்துகின்றபோது, இந்த ‘சப்றா யுனிக்கோ பினான்ஸ் லிமிட்டெட; நிதி நிறுவனம் தொடர்பிலும் ஆராய்ந்து, உரிய சட்ட நடவடிக்கையினை எடுக்கும்படியும் கேட்டுக் கொள்வதுடன், தற்போது எமது பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிதி நிறுவனங்களின் மோசடிகளை தடுத்து நிறுத்துவதற்கு, மேற்படி சப்றா நிதி நிறுவனத்தின் உரிமையாளர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதானது இன்றியமையாதது என்பதையும் இங்கு வலியுறுத்துவதுடன் நிதி நிறுவனம் தொடர்பில் தனியானதொரு விசாரணைக் குழு அமைத்து, விசாரணைகளை மேற்கொண்டால் சப்றா நிதி நிறுவனத்திற்கும், மேற்படி ஊடக நிறுவனத்திற்கும் உள்ள தொடர்புகள், பங்குகள் போன்ற விடயங்களை வெளிக் கொண்டு வர முடியும் என்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

Related posts: