வடக்கின் சுகாதாரத்துறை முன்னேற்றம் குன்றியநிலையில் காணப்படுகின்றது – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி.சுட்டிக்காட்டு!

Wednesday, March 27th, 2019

கடந்த 5 வருட கால வடக்கு மாகாண சபையின் ஆளுமை, அக்கறை மற்றும் முயற்சியின்மை காரணமாக வடக்கு மாகாண சபையினால் புறக்கணிக்கப்பட்டும், மத்திய அரசின் உதவிகளைக்கூட உதாசீனம் செய்யப்பட்டும் வடக்கின் சுகாதாரத்துறை என்பது தற்போது ஏனைய துறைகளைப் போன்றே முன்னேற்றம் குன்றிய நிலையில் காணப்படுகின்றது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நடைபெற்ற சுகாதாரம், போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சு, மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் உலர் வலய அபிவிருத்தி அமைச்சு ஆகிய அமைச்சுகள் தொடர்பிலான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் –

தேசிய மட்டத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கின்ற நிலையில், வடக்கு மாகாணத்தில் தாய்;, சேய் மரண வீதமும், குடிப்பேற்று மரண வீதமும் அதிகரித்த நிலையில் காணப்படுவதாக அண்மைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேநேரம், ஆரம்பத்தில் சிறுநீரக நோயாளர்கள் அதிகமாக அனுராதபுரம், பொலன்நறுவை, தெகியத்தகண்டிய போன்ற மாவட்டங்களில் அடையாளங் காணப்பட்டுள்ளதாகக் கூறுகின்ற நிலையிலும், இன்று இந்த நாட்டில் சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாக அரச தரப்பில் தெரிவிக்கப்படுகின்ற நிலையிலும் வடக்கு மாகாணத்திலே முல்லைத்தீவு, வவுனியா, செட்டிக்குளம் போன்ற பகுதிகளிலே  சிறுநீரக நோயாளர்களது எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலைமைகளே காணப்படுகின்றன. குறிப்பாக, முல்லைத்தீவு மாவட்டத்தை எடுத்துக் கொண்டால், கடந்த சில வருடங்களில் இந்நோயின் தாக்கம் தொடர்பில் தெளிவு பெறலாம் என எண்ணுகின்றேன்.

முல்லைத்தீவு மாவட்டத்திலே மல்லாவி பகுதியில் 2015ஆம் அண்டு 143 பேரும், 2016ஆம் ஆண்டு 197 பேரும், 2017ஆம் ஆண்டு 224 பேரும், 2018ஆம் ஆண்டில் 362 பேருமாக சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிய வருகின்றது.

அதேநேரம், வெலிஓயா பகுதியை எடுத்துக் கொண்டால், 2015ஆம் ஆண்டு 251 பேரும், 2016ஆம் ஆண்டு 353 பேரும், 2017ஆம் அண்டு 425 பேரும், 2018ஆம் அண்டு 411 பேரும் சிறுநீரக நோயின் காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிய வருகின்றது.

இந்தப் பகுதிகளில் சிறுநீரக நோயாளர்களது எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றபோதும், இதுவரையில் மக்கள் மத்தியில் அந்நோய் தொடர்பிலான விழிப்புணர்வு ஏற்பாடுகள் போதியளவில் முன்னெடுக்கப்படாமை காரணமாக மக்கள் மத்தியில் அந்நோய் தொடர்பில் இன்னமும் விழிப்புணர்கள் ஏற்பட்டதாக இல்லை என்றும் கூறப்படுகின்றது.

இந்தப் பகுதியின் சிறுநீரக நோய்த் தாக்கத்தின் அவசியம் கருதி நோயாளர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக கடந்த 2015ஆம் அண்டு ஜனாதிபதி அவர்களது பணிப்புரைக்கமைவாக மல்லாவிப் பகுதியிலும், வெலிஓயா பகுதியிலும் இரண்டு சிறுசீரக வைத்தியசாலைகள் அமைக்கப்பட பணிகள் ஆரம்பிக்கப்பட்டதாகவும், இதில் வெலிஓயா வைத்தியசாலை தற்போது நோயாளர்களுக்கான பயன்பாட்டில் இருப்பதாகவும், மல்லாவி வைத்தியசாலைக்கான கட்டடப் பணிகள் இன்னமும் இழுத்தடிக்கப்பட்டு வருவதாகவும் தெரிய வருகின்றது.

அதேநேரம் முல்லைத்தீவு மாவட்டத்தில் துணுக்காய் மற்றும் மாந்தைக் கிழக்கு போன்ற பகுதிகளிலும் தற்போது நூற்றுக்கும் அதிகமான சிறுநீரக நோயாளர்கள் இனங்காணப்பட்டு வருகின்றனர் என்றும், இப்பகுதிகளின் சிறுநீரக நோயாளர்கள் மிகுந்த சிரமங்களுக்கு மத்தியில் வவுனியா மற்றும் வெளிமாவட்ட வைத்தியசாலைகளுக்குச் சென்று சிகிச்சைப் பெற்று வருகின்றனர் என்றும் கூறப்படுகின்றது.

அதேநேரம், வவுனியா மாவட்டத்திலும் இந்நோயின் தாக்கம் வர, வர அதிகரித்தே காணப்படுகின்றன.

அத்துடன், வடக்கு மாகாணத்தில் தற்போது எலிக்காய்ச்சல் நோய் பரவுகின்ற அபாயமும் அதிகரித்துள்ளதாகவே தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வருடத்தில் இதுகாலவரையில் வவுனியா மாவட்டத்தில் 26 பேர் இந் நோய்த் தாக்கத்திற்கு ஆளாகியுள்ளனர் என்றும் தெரிய வருகின்றது.

அதேநேரம், வடக்கு, கிழக்கு மாகாணங்களைப் பொறுத்த வரையில், வெண்புரை (கன்றறக்ட்) நோயாளிகளின் எண்ணிக்கையும் ஆயிரக் கணக்கில் உள்ளதாகவும் தெரிய வருகின்றது.

வடக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில், வவுனியா, மன்னார், முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி போன்ற மாவட்டங்களில் இதுவரையில் கண் சத்திர சிகிச்சை நிபுணர்கள் இல்லாத குறைபாடு காரணமாக மேற்படி நோயாளர்கள் வருடக் கணக்கில் காத்திருப்பதாகவும், இவர்களில் இரண்டு கண்களும் பாதிக்கப்பட்டோர் தொகையானது நூற்றுக்கு 30 வீதம் என்றும் கூறப்படுகின்றது.

அதேபோன்று மட்டக்களப்பு மாவட்டத்திலே படுவான்கரை பிரதேசத்திலும் மேற்படி நோயாளர்கள் ஆயிரக் கணக்கானோர் இருப்பதாகவும் தெரிய வருகின்றது.

தற்போது கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் கண் சத்திர சிகிச்சை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிய வருகின்றது. அதே போன்று ஏனைய மாவட்டங்களிலும் இதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டால், பெரும்பாலாக இருக்கின்ற இந்நோயாளர்களால் பயன்பெறக் கூடிய நிலை ஏற்படும் என எதிர்பார்க்க முடியும் என நம்புகின்றேன்.

Related posts:

விளப்பமில்லா ஆட்சியை மக்களால் விளங்க முடியவில்லை? - செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!
அரசியல் கைதிகள் விடுதலையில் எவரும் அரசியல் இலாபம் தேட வேண்டாம் - நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா எம்ப...
நாட்டின் முக்கியத்துவம் மிக்க பகுதிகள் பிற நாடுகளின் தேவைகளுக்காக விற்கப்படுமானால் நாட்டின் எதிர்கா...