வடக்கின் கடல் வளங்களின் சுரண்டல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் -சபையில் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Friday, June 23rd, 2017
வடக்கின் கடல் வளத்தையும், பெருந்தொகையான கடற்றொழிலாளர்களினது வாழ்வாதாரங்களையும் அழித்து வருகின்ற தடைசெய்யப்பட்ட அனைத்து கடற்றொழில் முறைமைகளையும் முற்றாக நிறுத்துவதற்கும், அதற்கு மாற்றாக வேறு தொழில் முறைமைகளை ஊக்குவிப்பதற்கும், அதற்கான உதவிகளை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இன்றைய தினம் (23) நாடாளுமன்றத்தில் கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை அமைச்சர் மகிந்த அமரவீர அவர்களிடம் வலியுறுத்தியுள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்துள்ள அவர், வடக்கு மாகாணத்தின் பாரம்பரிய நீர்ப்பரப்புகளாக விளங்குகின்ற மன்னார் தென் குடா கடல், பாக்கு நீரிணை போன்ற சிறிய கடற்பரப்புகளைக் கொண்டதான கடற்பரப்பு பாரிய வளச் சுரண்டல்களுக்கு உட்பட்டு வருவதாக அறிய முடிகின்றது. இந்திய கடற்றொழிலாளர்களின் எல்லைத் தாண்டியதும், தடை செய்யப்பட்ட உபகரணங்களைக் கொண்டதுமான தொழிற் செய்கைகள் ஒருபுறமும், சில உள்ளூர் கடற்றொழிலாளர்களின் அழிவுதரக்கூடிய தொழில் செய்கைகள் ஒரு புறமும் என அப்பகுதி கடல் வளம் நாளுக்கு நாள் சுரண்டப்படுவது தற்போது அதிகரித்து வருவதாகவும், இப்பகுதியில் 1 கிலோ கிராம் இறால் உற்பத்திக்காக 18 கிலோ கிராம் சிறிய ரக மீன்கள் அழிக்கப்படுவதாகவும், இதன்படி ஒரு வருடத்தில் சுமார் 6.5 கோடி கிலோ கிராம் மீன்கள் அழிக்கப்படுவதாகவும், இதன் பெறுமதி சுமார் 6,510 மில்லியன் எனவும் தெரியவந்துள்ளதாகக் கூறப்படுகின்றது.
இதன் பிரகாரம் பார்க்கின்றபோது, வடபகுதியில் சில கடற்றொழிலாளர்களது இழுவை மடி மூலமான தொழில்கள் தற்போது அதிகரித்துள்ளதாகவும், இதனைத் தடை செய்யும் சட்டமூலம் நாடாளுமன்றத்திற்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு, பின்னர் சில தமிழ் அரசியலவாதிகளின்; தலையீடுகள் காரணமாக அது தடைப்பட்டுள்ளதாகவும், இழுவை மடிகள் மட்டுமல்லாது, தடைசெய்யப்பட்ட அழிவு தரக்கூடிய கடற்றொழில் முறைமைகளான டைனமைற் மற்றும் கண்டல் மரக் குற்றிகளையும், ஆபத்தான பொருட்களையும் கடலில் பரவலாக அமிழ்த்தியும், மன் மூடைகள் மற்றும் கூரான இரும்புக் கம்பிகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட ஆயிரக் கணக்கான பொறிகளை கடலில் அமைத்தும், தொழில் செய்து வருவதாகவும் தெரிய வருகிறது.
மன்னார் தென் கடலில் ஆபத்து விளைவிக்கக்கூடிய அகலச் சிறகு வலை எனப்படுகின்ற – அடியில் இரும்புக் கம்பிகள் பொருத்திய சுமார் 300க்கு மேற்பட்ட பொறிகள் பரவலாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும், கடற் தொழிலில் இரும்புக் கம்பிகளைப் பயன்படுத்துவது சட்டவிரோதமானது என 1966ம் ஆண்டு பிரகடனப்படுத்தப்பட்டிருப்பினும், இப்பகுதியிலுள்ள சில கடற்றொழிலாளர்கள் பல வருடங்களாக ஒரு மீற்றர் நீளமான இரும்புக் கம்பிகளை வலைகளுடன் இணைத்துப் பயன்படுத்தி வருவதாகவும், இதனால் தாழ்வுபாடு, வங்காலை, நறுவிலிக்குளம், அரிப்பு, அச்சங்குளம் போன்ற பகுதிகளைச் சேர்ந்த பெருமளவிலான சிற்றளவு படுப்பு வலை மற்றும், கரை வலை கடற்றொழிலாளர்கள் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், இதன் காரணமாக கடற்றொழிலாளர்களுக்கிடையில் முரண்பாடுகளும், அடிதடி மோதல்களும்  அதிகரித்து வருவதாகவும் தெரிய வருகிறது.
மேலும், கொழும்பில் கடற்றொழில் அமைச்சின் மூலமாக விடுக்கப்படுகின்ற தொழில்சார் விதிமுறைகள் மற்றும் தடைச் சட்டங்கள் என்பன வடக்கில் அதிகமாக அமுல்படுத்தப்படாத நிலையிலேயே காணப்படுவதாகவும் கூறப்படுகின்றது.
இந்நிலையில், இழுவை மடிகள் பயன்படுத்தி மேற்கொள்ளப்படுகின்ற கடற்றொழிலைத் தடை செய்வதற்கான சட்டமூலத்தினை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதில் ஏதேனும் தடைகள் உள்ளனவா? என்று கேள்வி எழுப்பியுள்ள டக்ளஸ் தேவானந்தா அவர்கள், உள்ளன எனில், அது குறித்து விளக்கம் தருமாறும், இல்லையேல், வடக்குக் கடலில் பாரிய அழிவினை உண்டுபண்ணி வருகின்ற இத்தொழில் முறைமையைத் தடை செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறும், மத்திய கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சு விடுக்கின்ற தொழில் ஒழுங்கு விதிகள் மற்றும் சட்டங்களை வடக்கிலும் முறையாக செயற்படுத்த வலுவுள்ள நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும், எல்லை தாண்டியதும், தடைசெய்யப்பட்ட உபகரணங்களைக் கொண்டதுமான இந்திய கடற்றொழிலாளர்களது தொழில் அத்துமீறல்கள் குறித்து மெற்கொள்ளப்பட்டு வருகின்ற இருதரப்பு பேச்சுவார்த்தைகளின் தற்போதைய நிலைப்பாடு பற்றி தெளிவுபடுத்துமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.
அதே நேரம், வடபகுதியில் சுமார் 200 வரையிலான கடற்றொழிலாளர்களுக்கு அட்டை பிடிப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும்;, இவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள கடல்தூரத்தைவிட குறைந்தளவு தூரத்தில் இவர்கள் மின் வெளிச்சம் பயன்படுத்தி தொழிலில் ஈடுபடுவதாலும், அப்பகுதிகளை கலக்குவதால், மீனினங்கள் கலைந்து செல்வதாலும், கரைப் பகுதிகளை பயண வழிகளாகக் கொள்வதால், சிறு தொழிலாளர்களது வலைகளை ஊடறுத்துச் செல்வதாலும் சிறு தொழிலாளர்கள் தொழில் ரீதியிலான பாதிப்புகளுக்கு உட்பட்டு வருவதாகவும், மேற்படி அட்டை பிடிப்போருக்கு யாழ்ப்பாணக் கடல் பகுதிகளில் இரவில் தொழில் செய்ய அனுமதியில்லாத நிலை இருந்தும், அவர்கள் இரவு வேளைகளிலும் தொழிலில் ஈடுபடுவதாகவும், இவர்களது தொழில் செயற்பாடுகளால் மீனினங்களுக்கான உணவு வளங்கள் அழிக்கப்பட்டு வருவதாகவும் கடற்றொழிலாளர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர் எனத் தெரிவித்துள்ள அவர், இவ்விடயம் குறித்து உடனடி அவதானங்களைச் செலுத்தி, மேற்படி தடை செய்யப்பட்ட தொழில் முறைமைகளை நிறுத்துவதற்கும், வழங்கப்பட்டுள்ள அனுமதிக்கேற்ப அவர்கள் தொழில் செய்வதை உறுதிப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.

Related posts:

நிலையற்ற அரசியல் தலைமையே வடக்கின் சமூக சீர்கேடுகளுக்குக் காரணம் - நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா தெர...
வாழைச்சேனை மீன்பிடிப் படகுகளின் உரிமையாளர் சங்கப் பிரதிதிதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் கலந்து...
நெடுந்தீவின் பிரதான கட்டமைப்புடன் இணைக்கப்பட்டது புதிய மின் பிறப்பாக்கி - மின்சார பிரச்சினைக்கு தீர...

குடும்பத்தைப்போல் சமூகத்தையும் கரிசனையுடன் வழிநடத்தக்கூடியவர்கள் பெண்களே - மகளிர்தின செய்தியில் செயல...
அமைச்சரவை அனுமதியுடன் சுகாதார தொண்டர்களுக்கு நிரந்தர நியமனம் –- டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை!
கடற்றொழில் சங்கங்களின் செயற்பாடுகள் வினைத் திறனாக இருக்க வேண்டும் - யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்...