வடக்கின் இயற்கை வளம் சட்டவிரோதமாக சூறையாடப்படுகின்றது – டக்ளஸ் தேவானந்தா

வடக்கிலே, பல்வேறு பகுதிகளில் இயற்கை வளங்கள் சட்டவிரோதமான முறையில் சூறையாடப்பட்டு, பல மில்லியன் ரூபா நிதி ஈட்டல்கள் தொடர்கின்றன. குறிப்பாக, யாழ்ப்பாணம், மருதங்கேணி குடாரப்பு வடக்கு பிரதேசத்திலே மணல் கொள்ளைகளில்,
சில அரசியல்வாதிகளின் பின்னணியில் அரச அதிகாரிகளே ஈடுபட்டு, இலஞ்சம், ஊழல் மற்றும் மோசடிகளுக்கான வழிகளை திறந்துவிட்டிருக்கின்றனர். எனவேதான், இவ்வாறான சந்தேகத்திடமான செயற்பாடுகள் தொடர்பில் நேரடி ஆய்வுகளை மேற்கொண்டு, அவற்றை விசாரிக்கின்ற அதிகாரங்கள் மேற்படி ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை இங்கு முன்வைக்க விரும்புகின்றேன்.
அந்த வகையில், தற்போது எமது நாட்டில் நடைமுறையிலுள்ள ஊழல் இலஞ்ச ஒழிப்பு சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.இலஞ்சம் மற்றும் ஊழல் அற்ற சமூகத்தை உருவாக்குவது தொடர்பிலான ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஒப்பந்தத்தில் 2004ஆம் ஆண்டு மார்ச் மாதம் இலங்கை கைச்சாத்திட்டுள்ளது.
அதாவது, இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட இரண்டாவது நாடாக எமது நாடு இருக்கின்ற நிலையில் அந்த ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த அரசு முன்வர வேண்டும். இலஞ்சம், ஊழல் மற்றும் அதனால் ஏற்படுகின்ற பொருளாதார சிதைவுகளாலும் குறிப்பாக வறிய மக்களே மிக அதிகமாகப் பாதிக்கப்படுகின்றனர்.
வறிய மக்களை ஒடுக்குவதற்கான ஒரு வழிமுறையாக இலஞ்சம் இருந்து வருகின்றது.
தொழில் வாய்ப்புகளைப் பெறவோ அன்றி தங்களுக்கான வாழ்வாதாரங்களைப் பெற்றுக் கொள்வதற்கோ, தமது பிள்ளைகளுக்கான கல்வி வசதிகளைப் பெறவோ இலஞ்சம் முதன்மைப் படுத்தப்படுமானால்,
வறியவர்களால் இலஞ்சம் கொடுக்க முடியாத நிலையில் அம் மக்களே பாரியளவில் பாதிக்கப்படுவதுடன், அம் மக்களுக்கான வாய்ப்புகள் திசை மாறிப் போய்விடுகின்றன.இந்த நிலையை வைத்துப் பார்க்கின்றபோது, கடந்த கால யுத்தம் காரணமாக அனைத்தையும் இழந்து நிற்கின்ற எமது மக்களின் நிலை எந்தளவுக்கு பரிதாபகரமானது என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
வறுமை என்பது எமது மக்கள் மீது யுத்தம் காரணமாகவும், இயற்கைப் பேரழிவுகள் காரணமாகவும் உட்புகுத்தப்பட்டு, யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியிலே வறுமை நிலையிலிருந்து மீளக்கூடிய வாய்ப்புகள் எமது மக்களில் பலருக்கு இருந்தும், அவை தடுக்கப்பட்டும், புறக்கணிக்கப்பட்டும், அத்துமீறியச் செயற்பாடுகள் காரணமாகப் பறிக்கப்பட்டும் வருகின்றமை காரணமாக வறுமையானது, எமது மக்கள் மீது பலவந்தமாகத் திணிக்கப்பட்டுள்ள நிலையும் இல்லாமல் இல்லை.
இவ்வாறான நிலையில் வாழ்ந்து வருகின்ற எமது மக்களிடையே இலஞ்சம் மற்றும் ஊழல்கள் தலைவிரித்திருக்கும் நிலையில், எமது மக்கள் தங்களது வாழ்க்கையில் தலைநிமிர முடியாத நிலையே தொடர்ந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
Related posts:
|
|