லஞ்சம், ஊழல் ஆணைக்குழுவின் பணியை செயற்திறன்மிக்கதாக்க வேண்டும் – டக்ளஸ் தேவானந்தா

Thursday, July 6th, 2017

இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய விசாரணை ஆணைக்குழு தொடர்பில் அவதானங்களைச் செலுத்துகின்றபோது, பிரதானமாகக் கூறப்படுகின்ற ஒரு விடயம் ஆளணிப் பற்றாக்குறை என்பது. தொடர்ந்தும் இந்தப் பிரச்சினை முன்வைக்கப்பட்டு வருகின்றது. எனினும், இதற்கு இதுவரையில் தீர்வுகள் எட்டப்படாமல் இருப்பது ஏன்? என்ற கேள்வி எழுகிறது.

குறிப்பாக மேற்படி ஆணைக்குழுவுக்கு, கணக்காய்வு மற்றும் வங்கி நடைமுறைகள் தொடர்பிலான பட்டதாரிகள் 100 பேருக்கான வெற்றிடங்கள் நிலவுவதாகத் தெரிய வருகின்றது.

மேலும், கொள்வனவுகள், பணத்தை வெளிநாட்டு வங்கிக் கணக்குகளில் வைப்பீடு செய்தல் போன்ற விடயங்ளை விசாரிப்பதற்கான அனுபவம் வாய்ந்த அதிகாரிகளுக்கான தேவை இருப்பதாகவும் தெரிய வருகின்றது.

எனவே, இத்தகைய வெற்றிடங்களை நிரப்புவதற்கு மேலும் தாமதிக்காது, உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என மீண்டும் வலியுறுத்த விரும்புகின்றேன்.அதே நேரம், கடந்த 2012ஆம் ஆண்டிலிருந்து 2016ஆம் ஆண்டு வரையிலான காலப் பகுதிக்குள் 392 வழக்குகள் மேற்படி ஆணைக்குழுவால் நீதவான் நீதிமன்றங்களிலும்,

மேல் நீதி மன்றங்களிலும் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், 106 பேர் குற்றவாளிகளாக அடையாளங் காணப்பட்டுள்ளனர் என்றும் தெரிய வருகின்றது.எனினும், கடந்த காலங்களில் பலராலும் கூறப்பட்ட நிலையில் ஊடகங்களில் வெளிவந்திருந்த தகவல்களை வைத்துப் பார்க்கின்றபோது,இந்த எண்ணிக்கையானது பல மடங்காக அதிகரித்திருக்க வேண்டும் என்ற கருத்தே மக்கள் மத்தியில் நிலவுகின்றது.

அதே போன்றே, மேற்படி ஆணைக்குழுவுக்கு கிடைத்ததாகக் கூறப்பட்ட முறைப்பாடுகளின் எண்ணிக்கைகளும் ஏராளம் என்றே ஊடகங்கள் தெரிவித்திருந்தன.இந்த நிலையை அவதானிக்கின்றபோது, பொய்யான முறைப்பாடுகளை முன்வைத்திருக்கக்கூடிய சந்தர்ப்பங்களும் அநேகம் என்பது புலனாகின்றது.

தற்போது எமது நாட்டில் நடைமுறையிலுள்ள சட்டத்தின் பிரகாரம், உண்மைக்கு மாறான முறைப்பாட்டினை ஒருவர் செய்கின்றார் எனில், அவருக்கு 10 வருட கால தண்டனை விதிக்கப்பட முடியும்.எனவே, அத்தகைய தண்டனைகள் வழங்கப்படக்கூடிய நிலைமைகள் ஏற்பட்டுள்ளனவா என்ற கேள்வியும் எமது மக்கள் மத்தியில் எழாமல் இல்லை.

ஏனெனில், உண்மைக்கு மாறான குற்றச்சாட்டுகள் பலவும் கடந்த காலத்தில் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் இதே ஊடகங்கள் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.எனவே, அத்தகைய செயற்பாடுகள் குறித்தும் ஆராய்ந்து நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமெனக் கேட்டுக் கொண்டு, போதிய ஆளணிகள் இணைக்கப்பட்டு,

நான் இங்கே சுட்டிக்காட்டியதற்கிணங்க மேற்படி ஆணைக்குழுவுக்கு மேலதிக அதிகாரங்களும் வழங்கப்பட்டு,இந்த ஆணைக்குழுவின் பணியை மேலும் செயற்திறன் மிக்கதாக முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு மீண்டும் வலியுறுத்த விரும்புகின்றேன்.

Related posts:

ஆபத்தில் தவித்தவர்களை விரைந்து மீட்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு மீண்டவர்கள் நன்றி தெரிவிப...
சித்திரை புத்தாண்டின் வரவில் தேசமெங்கும் புது மகிழ்வு பூக்கட்டும் – வாழ்த்துச் செய்தியில் அமைச்சர் ட...
தண்டவாளத்தில் தலை வைப்போம் என்றவர்கள் துண்டு போடுகின்றனர் - அமைச்சர் டக்ளஸ் சுட்டிக்காட்டு!

வீட்டு நன்னீர் மீன்வளர்ப்பு திட்டத்தை ஊக்கவிக்க சமுர்த்தி வங்கிகளூடாக விஷேட சுயதொழில் கடன் திட்டம் –...
செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் யாழ்.மாவட்ட தலைமை அலுவலகத்தில் விசேட கலந்துரையாடல்.
கருணை மைந்தன் இயேசு பிரான் அவதரித்த நாளில் தேசமெங்கும் நித்திய ஒளி உண்டாகட்டும் – வாழ்த்துச் செய்திய...