ரோஹிங்யா அகதிகள் மீதான அத்துமீறல் தொடர்பில் அரசின் நடவடிக்கை வரவேற்கத்தக்கது!

Tuesday, October 3rd, 2017
கொழும்பு, கல்கிஸ்ஸை பகுதியில் தங்க வைக்கப்பட்டிருந்த ரோஹிங்யா முஸ்லிம் அகதிகளை இலக்கு வைத்து, அண்மையில் மேற்கொள்ளப்பட்டிருந்த மனிதாபிமானமற்ற அத்துமீறல் செயற்பாட்டில் ஈடுபட்டிருந்த தரப்பினர்மீது அரசு சட்ட நடவடிக்கை எடுத்து வருவது வரவேற்கத்தக்கது எனத் தெரிவித்துள்ள டக்ளஸ் தேவானந்தா அவர்கள், அதே போன்று மீண்டும் முஸ்லிம் மக்களது வழிபாட்டுத் தலங்கள் மீது தாக்குதல்களை மேற்கொள்கின்ற செயற்பாடுகளும் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் நிலையில், அது தொடர்பிலும் உடனடி சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என அரசை வலியுறுத்தியுள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவி;த்துள்ள அவர், அகதிகளாக திசைமாறி வந்திருந்த ரோஹிங்யா முஸ்லிம் மக்கள் வடக்கில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, பின்னர் ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான மனிதாபிமான முகவரகத்தின் பாதுகாப்பில் கல்கிஸ்ஸை பகுதியில் தங்க வைக்கப்பட்டிருந்த நிலையில், சில சமூக விரோத விஷமிகளின் அத்துமீறல்களுக்கு அம் மக்கள் உட்பட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். இது, மனிதாபிமானமற்றவர்களது காட்டு மிராண்டித் தனமான செயற்பாடாகும். அதே நேரம், இச் சம்பவமானது இலங்கை தொடர்பில் வெறுப்பானதொரு தோற்றப்பாட்டை சர்வதேசத்திற்கு மீண்டும் வலியுறுத்தியதாகவே அமைந்துவிட்டது. மேற்படி செயற்பாட்டை நாம் வன்மையாகக் கண்டிப்பதுடன், இத்தகைய விடயங்கள் தொடர்பில், அசம்பாவிதங்கள் ஏற்படாத வகையில், அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும் என்பதையே நாம் வலியுறுத்த வேண்டியுள்ளது.
எனினும், சம்பவம் நிகழ்ந்த பின்னர் இந்த அரசு அது தொடர்பில் உடனடி சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பது வரவேற்கத்தக்கது. தற்போது எடுக்கப்பட்டிருக்கும் சட்ட நடவடிக்கையானது, இத்தகைய வன்முறையாளர்களுக்கு ஒரு சிறந்த பாடமாக அமைய வேண்டும். இனிவரும் காலங்களில் இத்தகைய செயற்பாடுகளை எமது நாட்டிலிருந்து துடைத்தெறியக் கூடியதாக மேற்படி சட்ட ஏற்பாடுகள் அமைய வேண்டும். அதற்கமைவாக மக்களிடையே விழிப்புணர்வுகளை ஏற்படுத்தக்கூடிய நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படல் வேண்டும்.
அதே நேரம், கடந்த சில நாட்களில் மினுவன்கொடை, மீப்பே போன்ற பகுதிகளில் முஸ்லிம் மக்களது வழிபாட்டுத் தலங்கள் மீதான தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன. வழக்கமாக இத்தகைய தாக்குதல் சம்பவங்கள் முஸ்லிம் மக்களது நோன்பு காலங்களையும், திருநாட்கள் வருகின்ற காலங்களையும் இலக்கு வைத்தே இனவாதிகளால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமையை கடந்த காலங்களில் காணக்கூடியதாக இருந்தது. இந்த நிலையில் இத்தகைய தாக்குதல்கள் தற்போது மீளவும் ஆரம்பிக்கப்பட்டிருப்பதானது பல்வேறு சந்தேகங்களைத் தோற்றுவிப்பதாகவே அமைந்துள்ளன.
எனவே, இது தொடர்பில் இந்த அரசு உடனடி சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு, குற்றவாளிகளை தண்டனைகளுக்கு உட்படுத்த வேண்டும் என்பதுடன், இத்தகைய சம்பவங்கள் மேலும் தொடராதிருக்க உரிய, உறுதியான ஏற்பாடுகளை மேற்கொள்ளவும் வேண்டும் என டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

கடற்றொழில் மற்றும் நீரக வள அமைச்சின் தைப் பொங்கல் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில்: மோதரை விஷ்னு ...
ஊரடங்கு நடைமுறையால் வெளி மாவட்டங்களில் அகப்பட்டோர் சொந்த ஊர் திரும்ப அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடி...
உழைப்பவர் உரிமைகள் வென்றிட,.. தமிழர் தேசம் தலை நிமிர்வு பெற்றிட,. தொடர்ந்தும் உறுதியுடன் உழைப்போம்!....

சைவத்திற்கும் தமிழுக்கும் வாழ்நாள் முழுவதும் பெரும் தொண்டாற்றிய பெருமகனார் சிற்சபேசக் குருக்கள் அனுத...
தமிழ் மக்களது கலை காலாசார பண்பாட்டு விழுமியங்களை பாதுகாத்து முன்னேற்றம் காணச் செய்ய எந்தச் சவால்களைய...
கிளிநொச்சி ஜேர்மன் தொழில் பயிற்சி நிறுவனத்திற்கு வினைத்திறன் கொண்ட நிர்வாகக் கட்டமைப்புபை விரைவாக ஏற...