யுத்த அழிவை தடுத்து நிறுத்த கூட்டமைப்பின் தலைமை விரும்பியிருக்கவில்லை – சபையில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு.

Friday, December 8th, 2017

தேர்தலில் போட்டியிட இணைவோம் வாருங்கள் என்றா நான் அழைப்பு விடுத்தேன்? இல்லையே! எமது மக்களை அழிவுகளிலிருந்து பாதுகாப்போம், எமது மக்களது பிரச்சினைகளைத் தீர்ப்போம் வாருங்கள் என்றுதானே அழைப்பு விடுத்தேன்! அவர்கள் வரவில்லை – என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்றில் சுட்டிக்காட்டியுள்ளார்.

மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள், மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சு, சிறைச்சாலை மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு மீள்குடியேற்றம் மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சு, தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சு, தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சு தொடர்பிலான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு, உரையாற்றுகையிலேயே இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் –

ஆயுதப் போராட்டக் காலத்திலேயே அனைத்து இன மக்களையும் இணைத்து செயற்பட்டிருந்த நான், தேசிய நீரோட்டத்திற்கு வந்ததன் பின்னரும் அனைத்து இன மக்களுடனும் இணைந்த வகையிலேயே செயற்பட்டு வருகின்றேன். நான் மனிதர்களை நேசிக்கின்றேன். மனிதர்களை நேசிக்குமாறே அனைவரிடமும் கேட்டுக் கொள்கின்றேன்.

அவன் தமிழன், இவன் முஸ்லிம், இவன் சிங்களம் எனப் பார்க்காதீர்கள். மனிதர்கள் என்று பாருங்கள். மனிதாபிமானத்துடன் பாருங்கள். அப்போதுதான் எமது மக்கள் எந்தளவிற்குப் பாதிக்கப்பட்டு வருகிறார்கள் என்பது தெளிவாகவே புரியும்.

இதையேதான் ஏனைய தமிழ் தரப்பு அரசியல்வாதிகளிடம் கூறுகின்றேன். வாருங்கள், இப்போதாவது வந்து உங்களுக்கு வாக்களித்த மக்களை சற்றேனும் மனிதாபிமானத்துடன் பாருங்கள். உங்களுக்கு வாக்களித்த பாவத்திற்காக அந்த மக்கள்  துன்ப, துயரங்களையே தொடர்ந்தும் அனுபவிக்க விட்டு விடாதீர்கள். சுயலாப அரசியலை கைவிட்டு, கொஞ்ச காலத்தையேனும் அந்த மக்களுக்காக செலவு செய்யுங்கள். இப்போதாவது அதற்கென முன்வாருங்கள் என்றே அழைப்பு விடுக்கின்றேன். இதற்கு முன்பும் அழைப்பு விடுத்திருந்தேன்,

கிழக்கிலே யுத்தம் மும்முரமாக இடம்பெற்று, அரசின் கை மேலோங்கியிருந்தபோது, இணைந்துபோய், அரசத் தலைவருடன் கலந்துரையாடி எமது மக்களை பேரழிவுகளிலிருந்து காப்பாற்றுவோம் வாருங்கள் என அழைப்பு விடுத்திருந்தேன், வரவில்லை!

பின்பும், எமது மக்களின் அரசியல் தீர்வு உட்பட பல்வேறு பிரச்சினைகள் குறித்து அரசுடன் இணைந்து கலந்துரையாடி, ஒரு முடிவுக்கு வருவோம் வாருங்கள் என அழைப்பு விடுத்திருந்தேன், வரவில்லை.

தேர்தல் வருகின்றது என்றதும், அதில் போட்டியிட்டு, அரசியல் பதவிகளைப் பிடிப்பதற்கு என்னென்ன வகையில், யார், யாருடன் கூட்டு சேரலாம் என அடிபட்டு ஓடித் திரிகின்ற இவர்கள், அதில் ஒரு துளியளவு கூட எமது மக்களின் நலன்கள் கருதிய இணைவு முயற்சியில் எடுத்திருக்கவில்லை.

எமது மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்காமல், எமது மக்களின் பிரச்சினைகளை வைத்தே வாழ்ந்தோம் என்ற அவப் பெயருடன் போய்ச் சேர்ந்துவிடாதீர்கள் என்றே நான் இவர்களைக் கேட்டுக் கொள்ள விரும்புகின்றேன்.

அந்த வகையில், தைப் பொங்கலுக்கு தைப் பொங்கல் – தீபாவளிக்குத் தீபாவளி எமது மக்களின் பிரச்சினைகள் தீருமென ஒவ்வொரு வருடமும் சொல்லிக் கொண்டிருக்க நாம் தயாராக இல்லை என்பதையும் தெரிவித்து, அடுத்த வரவு – செலவுத் திட்டத்திற்கு முன்பாவது நான் இங்கே சுட்டிக்காட்டியுள்ள பிரச்சினைகள் தீரக்கப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டு, எமது மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படுகின்ற சூழலை அடிப்படையாகக் கொண்டு தேசிய நல்லிணக்கத்தை வலுப்படுத்தி, முன்னெடுப்போம் – என்றார்.

Related posts:

அடையாள அட்டை வழங்கும் வேலைத் திட்டத்தை இலகுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் - டக்ளஸ் தேவானந்தா அவையி...
வடக்கில் தொழில் துறைகளை உருவாக்குவது தொடர்பில் இந்திய துணைத் தூதுவர் குழு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவ...
யாழ் குடாநாட்டின் முக்கிய பொதுச் சந்தைகளின் வியாபாரிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் அமைச்சர...