யுத்தம் முடிந்து எட்டு ஆண்டுகள் கடந்தபோதிலும் கடற்றொழி லாளர்களது பிரச்சினைகள் தீராதிருப்பது வேதனை யளிக்கிறது – மன்னாரில் டக்ளஸ் எம்.பி!

Monday, January 22nd, 2018

யுத்தம் முடிந்து எட்டு ஆண்டுகள் நிறைவுற்றுள்ள போதிலும் மன்னார் மாவட்ட கடற்றொழிலாளர்கள் அனுமதி பெற்றே கடற்றொழிலுக்குச் செல்லவேண்டிய அவலம் இன்னும் தொடர்வதானது எனக்கு மிகுந்த வேதனையை தருகின்றது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம்  டக்ளஸ் தேவானந்தா கவலை வெளியிட்டுள்ளார்.

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலை முன்னிட்டு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மன்னார் தாழ்வப்பாடு பகுதியில் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

வடக்கு மாகாணத்தில் வேறு எந்த மாவட்டத்திலும் கடற்றொழிலுக்கான அனுமதி பெறவேண்டிய அவசியம் இல்லை. ஆனால் மன்னார் மாவட்டத்தில் கடற்றொழிலுக்கான அனுமதி பெறப்படவேண்டிய துர்ப்பாக்கியமான நிலையில் எமது கடற்றொழிலாளர்கள் நாளாந்த தொழிலை முன்னெடுத்து வருகின்றனர். இந்த விடயத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் பாராமுகமாக இருந்துவருகின்றமையானது மிகுந்த வேதனையைத் தருகின்றது.

நாட்டில் நல்லாட்சியைக் கொண்டுவந்தவர்கள் தாமே என்றும் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுகள் பெற்றுத்தரப்படும் என்றும் மக்களிடம் வாக்குகளை கேட்டு வெற்றியைத் தமதாக்கிக் கொண்ட கூட்டமைப்பினர் எமது கடற்றொழிலாளர்களின் அன்றாட வாழ்வாதாரம் கூட பாதிக்கப்பட்டுள்ள நிலையிலும் அதற்காக குரல் கொடுக்கவில்லை.

கடற்றொழிலை வாழ்வாதாரமாக கொண்டுவாழும் மன்னார் மாவட்ட கடற்றொழிலாளர்கள் தமது அன்றாட வாழ்வுக்கே அவலப்படும் நிலையில் வாழ்ந்துவருகின்றனர். இந்நிலை கண்டு நாம் மிகுந்த வேதனையையும் கவலையும் அடைகின்றோம்.

2013 ஆம் ஆண்டு வடக்கு மாகாண சபைத் தேர்தலில் வெற்றியை தமதாக்கிக் கொண்ட கூட்டமைப்பினர் தமிழராட்சி மலர்ந்தது என்று வெற்றிப் பிரபாகத்துடன் கூறியிருந்தார்கள். ஆனால் அவர்கள் கூறிய அந்த தமிழராட்சி நிலை இப்போது என்ன நிலையாகிப் போயிருக்கின்றது என்பதை மக்கள் ஒவ்வொருவரும் நன்கறிந்துள்ளனர்.

எனவே நாம் எமது மக்கள் அவலப்படும் போதிலும் துன்பப்படும் போதிலும் அவர்களுடன் நின்று அவர்களது உரிமைகளுக்காகவும் குரல் கொடுத்தும் தீர்வுகளை பெற்றும் வருகின்றோம்.

அந்தவகையில் இந்த மன்னார் மாவட்ட கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பாஸ் நடைமுறைக்கு தீர்வுகாணவேண்டுமாயின் அந்தப்பொறுப்பை மக்கள் உணர்ந்துகொண்டு எமக்கு வாக்களித்து எம்மை வெற்றிபெறச் செய்வார்களாயின் கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பாஸ் நடைமுறை மட்டுமன்றி சுருக்குவலை உள்ளிட்ட ஏனைய பிரச்சிரனைகளுக்கும் உரிய தீர்வுகள்  பெற்றுத்தரப்படும் என்றும் சுட்டிக்காட்டினார்.

Related posts:

ஆணைக்குழுக்களின் உருவாக்கம் என்பது நாட்டின் முன்னேற்றம் கருதியதானதாக அமைய வேண்டும் - டக்ளஸ் தேவானந்த...
பனைசார் உற்பத்தி பொருட்களை நவீனமயப்படுத்த முழுமையான நடவடிக்கை எடுக்கப்படும் – பனை அபிவிருத்தி சபையின...
சீனாவின் உதவியுடன் 20 மில்லியன் ரூபாய் பெறுமதியான வாழ்வாதார உதவி - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் ப...