யுத்தம் நிலவிய காலத்தில் வடக்கு கடல் பரப்பில் இருந்துவந்த கட்டுப்பாடுகளே இந்திய ரோலர் தொழிலாளர்களுக்கு சாதகமான சூழ்நிலையை உருவாக்கியது- அமைச்சர் டக்ளஸ் சுட்டிக்காட்டு!

Monday, February 8th, 2021

நாட்டில் நிலவிய யுத்தம் காரணமாக, இலங்கை கடற்றொழிலாளர்களினால் வடக்கு கடல் பரப்பில் மீன்பிடியில் ஈடுபடுவதற்கு கட்டுப்பாடுகள் இருந்தமையினாலும் கடற்படையின் முழுக் கவனமும் யுத்தத்தில் குவிந்திருந்தமையினாலும் இலங்கை கடற்பரப்பின் எல்லைப் பிரதேசங்களில் இந்திய ரோலர்கள் மீன்பிடியில் ஈடுபடுவது தொடர்பாக அப்போது யாரும் பெரிதாக அக்கறை கொண்டிருக்கவில்லை என்று சுட்டிக்காட்டியுள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இதனை இந்திய ரோலர் தொழிலில் ஈடுபடுபவர்கள் தமக்கு சாதகமாகப் பயன்படுத்தினார்களே தவிர, இரண்டு நாடுகளுக்கும் இடையிலான நல்லெண்ண இணக்கப்பாடு என்று எதுவும் இருக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இலங்கை – இந்தியா இடையே உள்ள நல்லெண்ண புரிந்துணர்வின் அடிப்படையில் பாரம்பரியமாக தொழிலில் ஈடுபட்டுவருகின்ற கடற் பிரதேசத்திலேயே தொழிலில் ஈடுபட்டுவருவதாகவும், எவ்வாறான தவறான நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை எனவும் இந்தியக் கடற்றொழிலாளர்களினால் கூறப்படுவது தொடர்பில் ஊடகவியலாளர் எழுப்பியிருந்த கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில் –

இந்தியத் தரப்பினரால் அவ்வாறு கூறப்படுகின்ற போதிலும், ரோலர் இழுவை வலைப் படகுகளைப் பொறுத்தவரையில் கடந்த 30 வருடங்களுக்கு குறைவான காலப் பகுதியிலேயே தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழ் நாட்டில் ரோலர் தொழில் முறை அறிமுகப்படுத்தப்பட்டு பெருமளவு வளர்ச்சியடைந்தது. அதற்கு முன்னர் தமிழகக் கடற்றொழிலாளர்கள் பாரம்பரிய மீன் பிடிமுறைகளைப் பயன்படுத்தியே தொழிலில் ஈடுபட்டு வந்தனர்.

ரோலர் தொழில் முறையை தமிழ் நாட்டில் அறிமுகப்படுத்திய அரசியல் பின்புலம் கொண்டவர்கள் என்று சொல்லப்படுகின்ற சில முதலீட்டாளர்கள், தங்களுடைய தொழிலை செழிப்படையச் செய்வதற்காக பாராம்பரிய தொழில் முறையைப் பயன்படுத்தி வந்த அப்பாவிக் கடற்றொழிலாளர்களுக்கு, அவர்களின் நாளாந்த வருமானத்தை விட அதிகமான சம்பளத்தினை வழங்கி, தங்களுடைய ரோலர் படகுகளை நம்பிவாழுகின்ற தொழிலாளர்களாக மாற்றிக் கொண்டுள்ளனர். அதனால் தற்போது பாரம்மபரிய தொழில் முறையை தமிழக கடற்றொழிலாளர்கள் கைவிட்டுள்ளனர்.

இந்நிலையில், ரோலர் பயன்பாடு காரணமாக இந்தியக் கடல் பிரதேசத்தில் மீன் வளம் குறைவடைந்த நிலையில், இலங்கை கடல் எல்லைநோக்கி இந்தியக் ரோலர் படகுகளின் கவனம் திரும்ப ஆரம்பித்தது.

அதேநேரம் இலங்கை கடற்படையினால் நாரிழை (பைபர்)) உருவாக்கப்பட்ட ரோந்துப் படகுகள் பயன்படுத்தப்பட்டு வருகின்ற நிலையில், பாரிய மரத்தினாலும் இரும்புச் சட்டத்தினாலும் உருவாக்கப்பட்ட இந்திய மீன்பிடிப் படகுகளினால் இலங்கை கடற்படையினரின் படகுகளுக்கு சேதத்தினை ஏற்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்படுகின்றது.

கொறோனா பரவலை காரணமாக தெரிவித்த போதிலும் கடற்படை இந்தியக் கடற்றொழிலாளர்களை நெருங்கிச் செல்லாதமைக்கு இதுதான் காணரம் என்று கருதுகின்றேன்.  அத்துடன், கடற்படையினரால் இந்தியக் கடற்றொழிலாளர்களுக்கு எதிராக தற்பாதுகாப்புக்கு கூட துப்பாக்கிகளை பயன்படுத்த முடியாது என்ற கண்டிப்பான உத்தரவு காணப்படுகின்றது.

இந்நிலையில், கூட்டம் கூட்டமாகவருகின்ற கடற்றொழிலாளர்களை கடற் படையின் ரோந்துப் படகுகள் நெருங்குகின்ற போது கடற்றொழிலாளர்களின் ரோலர் படகுகளின் மத்தியில் சிக்கிக் கொள்ளநேரிடும். இதுதான் உண்மை.

அதேபோல அண்மையில் இந்திய மீனவர்கள் நால்வர் உயிரிழந்தமை தொடர்பாக மேற்கொள்ளப்படுகின்ற விசாரணைகளில் இணைந்து கொள்வதற்கு அல்லது அது தொடர்பான பொறிமுறைக்கு இந்தியா விரும்புமாக இருந்தால் அது தொடர்பாக பரிசீலிப்பதில் எமக்கு ஆட்சேபனை இருக்காது.

வெளிப்படையான விசாரணைகளின் மூலம் குறித்த விவகாரம் தீர்த்துவைக்கப்படுவதனைத தான் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபகச ஆகியோர் விரும்புவார்கள். அதேபோல வடக்கு கிழக்கு பிரதேசத்தில் கடற்றொழில் செயற்பாடுகளையும் கடற்றொழிலாளர்களின் வாழ்கை தரத்தினையும் மேம்படுத்தல், வடக்கிற்கும் தெற்கிற்குமான உறவுப் பாலத்தினை வலுப்படுத்தல் மற்றும் இந்தியாவுடனான–குறிப்பாக தமிழ் நாட்டுடனான உறவினை வலுப்படுத்தல் போன்றவையாகும். எனவே, தற்போது ஏற்பட்டுள்ள விவகாரத்தினை சுமூகமாக தீர்த்துவைப்பதே எல்லோருடைய எதிர்பார்ப்பாகவும் இருக்கின்றது என்றும் தெரிவித்திருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா என்னைக் கடற்றொழில் அமைச்சராக நியமித்தமைக்கான முக்கிய காரணங்களாக இந்த மூன்று விடயங்களுமே உள்ளன என்றும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

காணத் தவறாதீர்கள்…. இன்று இரவு 10  மணிக்கு SUN NEWS தொலைக்காட்சியின் நேருக்கு நேர் நிகழ்ச்சியில் டக்...
யாழ். மாவட்ட இளைஞர் சமேளனத்திற்கான நிர்வாகக் குழு அங்குரார்ப்பண நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா...
வடக்கில் கல்விச் சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொள்ள அமைச்சர்களான டக்ளஸ் த...

அரசியல் சுயலாபத்திற்காக நாம் ஒருபோதும் மக்களை தவறாக வழிநடத்தியது கிடையாது  - வவுனியாவில் டக்ளஸ் தேவா...
நுண்கடன் விடயத்தில் பொருத்தமான வழிமுறை வேண்டும் - செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை!
நடமாடும் சேவையின்போது பணம் செலுத்தாது தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பித மக்களுக்கு அதை இலவசமாக வழங்...