யுத்தப் பாதிப்புக்குள்ளான ஊடகவியலாளர்களுக்கான வீடமைப்புத் திட்டத்திற்கு என்ன நடந்தது? – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கேள்வி!

வடக்கில் கடந்த கால யுத்தம் காரணமாகப் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்களில் மூவருக்கான வீடமைப்புத் திட்டமொன்று கடந்த வருடம் ஆரம்பிக்கப்பட்டு, அடிக்கல்லும் நடப்பட்ட நிலையில் இதுவரையில் அவ் வீடுகள் பூர்த்தியாக்கப்படாத நிலையிலேயே காணப்படுகின்றன. எனவே, “மேற்படி வீட்டுத் திட்டம் சாத்தியமானதா?” என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி.)யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலகவிடம் இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள செயலாளர் நாயகம் அவர்கள், ஊடக அமைச்சின் ஏற்பாட்டில் மேற்படி வீட்டுத் திட்டமானது ஒவ்வொரு வீடுகளும் 10 இலட்சம் ரூபா செலவில் மேற்கொள்ளப்படுமென்றே தெரிவிக்கப்பட்டது. இதற்கான செலவினை ஏற்க அப்போது தென்பகுதியைச் சார்ந்த மூன்று ஊடக நிறுவனங்கள் முன்வந்திருந்தன. ஊடக அமைச்சர் உட்பட தென் பகுதி ஊடகவியலாளர்கள் குழுவொன்று கடந்த வருட ஆரம்பத்தில் வடக்குக்கான விஜயமொன்றை மேற்கொண்டு யாழ்ப்பாணத்திற்குச் சென்றிருந்தபோதே இந்த வீடுகளுக்கான அடிக்கல் நடப்பட்டது.
எனினும், அடிக்கல் நடப்பட்டு ஒரு வருடத்திற்கும் மேலாகிய நிலையிலும் மேற்படி வீடுகளுக்கான அடுத்த கட்டப் பணிகள் இன்னும் மேற்கொள்ளப்படாத நிலையே காணப்படுகின்றது. மேற்படி வீட்டுத் திட்டத்துள் இணைத்துக் கொள்ளப்பட்டதன் காரணமாக இந்த மூன்று ஊடகவியலாளர்களது குடும்பங்களுக்கு ஏனைய அரச மற்றும் அரச சார்பற்ற வீட்டுத் திட்டங்கள் மறுக்கப்பட்டு வருகின்றன.
எனவே, மேற்படி வீட்டுத் திட்டத்தைப் பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். அல்லது, இந்த வீட்டுத் திட்டத்தைக் கைவிட்டதாக அறிவித்து, மூன்று ஊடகவியலாளர்களையும் இத் திட்டத்திலிருந்து விடுவிக்க வேண்டும் என செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|