யுத்தத்தில் நிலத்தை பறிகொடுத்த தமிழர்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை – டக்ளஸ் தேவானந்தா

Thursday, January 12th, 2017

அம்பாந்தோட்டையில் ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகளை றுகுணு பொருளாதார மையம் என்ற பெயரில் சீன நிறுவனங்களுக்கு  ஒதுக்குவதில் தென் இலங்கை அரசியல்வாதிகள் தமக்கிடையே முட்டிமோதிக் கொண்டு இருக்கின்றார்கள்.

மண் மீதான பற்றுதல் காரணமாக வார்த்தைகளாலும், கற்களாலும், பொல்லுகளாலும் தாக்கிக் கொள்கின்றார்கள். ஆனால் இவர்களால் தமிழ் மக்களின் உணர்வுகளையும், கோரிக்கைகளையும் புரிந்து கொள்ளமுடியவில்லையா? என்பதைத்தான் நம்பமுடியவில்லை என்று செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்தார்.

அம்பாந்தோட்டையில் நிலங்களை அபகரிக்க வேண்டாம் என்று நடைபெற்ற ஆர்ப்பட்டங்களில் தென் இலங்கை அரசியல் தலைமைகளின் அக்கறைகள் தொடர்பாக கருத்துத் தெரிவிக்கும்போதே செயலாளர் நாயகம் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கும்போது,குடியிருப்பு நிலங்களை அபகரிக்க வேண்டாம் என்றும்,வளமான நிலங்களை வெளி நாடுகளுக்கு தாரை வார்க்க வேண்டாம் என்றும், விவசாய நிலங்களை சூரையாட வேண்டாம் என்றும்,பௌத்த மதத்தின் தொன்மையை பாதிக்கும் வகையில் காணிகளை ஆக்கிரமிக்க வேண்டாம் என்றும்,அரசியல்வாதிகளும், பொது அமைப்புக்களும் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்கின்றார்கள்.

வடக்கு, கிழக்கில் யுத்த காலத்தில் தேசிய பாதுகாப்;புக் காரணங்களுக்காகதமிழ் மக்களின் குடியிருப்பு நிலங்களையும், விவசாய நிலங்களையும், மத வழிபாட்டுத் தளங்கள் அமைந்த பகுதிகளையும், உயர் பாதுகாப்பு வலயமாக படையினர் மாற்றியிருக்கலாம். படையினர் வடக்கு கிழக்கில் இருக்கவே கூடாது என்று தமிழ் மக்கள் கூறவில்லை. அந்தந்த மாவட்டங்களின் மக்கள் தொகைக்கும், இனவிகிதாசாரத்திற்கும் ஏற்பவே படைகள் இருக்கவேண்டும் என்றே கூறுகின்றனர். அதுபோல் படைகள் மக்களின்குடியிருப்புக்குள் மக்களின் காணிகளையும், வளமான நிலங்களையும் கையகப்படுத்தி அந்தப் பிரதேசத்தை,தமது முகாமாக மாற்றிக் கொள்ளாமல், பொருத்தமான தரிசு நிலங்களை அடையாளம் கண்டு, தமக்கு ஏற்றவாறான வளமான நிலமாக அதை மாற்றி, தமது முகாம்களை அமைத்துக் கொண்டு, பொது மக்களின் இயல்பு வாழ்வுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றே விரும்பகின்றனர்.

இப்போது யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு,ஏழு ஆண்டுகள் கடந்துவிட்டபோதும்,பாதுகாப்புக் காரணங்களுக்காக படையினரால் கையகப்படுத்தப்பட்ட தமிழ் மக்களின் குடியிருப்பு நிலங்களும், விவசாய நிலங்களும் உரியவர்களிடம் கையளிக்கப்படாமல் இருக்கின்றன.குறிப்பாக வலிகாமம் வடக்கில் பூர்வீகமாக வாழ்ந்த மக்கள் இடம்பெயர்க்கப்பட்டு 26 வருடமாக அகதி முகாம்களிலும், நண்பர், உறவினர் விடுகளிலும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் தமது சொந்த நிலத்தில் வாழ வேண்டும் என்றும். தமது நிலம் மீண்டும் தமக்கு வழங்கப்பட வேண்டும் என்றும் தொடர்ச்சியாக கோரிக்கைகளை முன்வைத்துப் போராடி வருகின்றார்கள்.

தெற்கில்  மண்ணுக்காக குரல் கொடுப்பவர்கள்,யுத்தத்தில் தமிழ் மக்களின் குடியிருப்பு நிலமும், விவாசாயக் காணிகளும், வரலாற்று ரீதியான வழிபாட்டுத் தளங்களும் பல ஆண்டுகளாக உயர் பாதுகாப்பு வலயம் என்ற போர்வையில் அபகரிக்கப்பட்டிருப்பதையிட்டு எப்போதும் சிந்தித்ததில்லை. அந்த மக்களின் கோரிக்கைகளுக்கும், மண் மீதான உணர்வுகளுக்கும் தென் இலங்கை அரசியல் தலைமைகள் நியாயமான பதிலளிப்பைச் செய்ய முன்வரவில்லை.தமிழ் மக்களின் பிரச்சினைகளையும், கோரிக்கைகளையும் இனவாதத்துடனும்,அரசியல் சுய லாபங்களுடனும் அணுகாமல், நியாயமாகவும்,மனிதாபிமானத்துடனும் அணுகி தீர்க்கும்போதே, தேசிய நல்லிணக்கம் என்பது அர்த்தமுள்ளதாக அமையும்.

அவ்வப்போது சில பகுதிகளை உரியவர்களிடம் மீளக்கையளிப்பதாகக் கூறியபோதும்,அந்த வாக்குறுதிகள் கூட முறையாக செயற்படுத்தப்படவில்லை என்று தமிழ் மக்கள் அங்கலாய்க்கின்றனர். இந்த நிலையிலேயே,தமிழ் மக்களின் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம் இன்னும் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டியிருப்பதை மீண்டும் வலியுறுத்த விரும்புகின்றேன் என்றும் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மேலும் தெரிவித்துள்ளார்.

477582

Related posts: