யுத்தத்தில் உயிர் நீத்தவர்களுக்கு மரியாதை செலுத்த பொதுத் தினமும், பொதுத் தூபியும் அவசியம் – நாடாளுமன்றில் மீண்டும் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

கடந்த கால யுத்தம் காரணமாக உயிரிழந்த எமது மக்களை நினைவுகூரத்தக்க வகையிலும், மரியாதை செலுத்தக்கூடிய வகையிலும் ஒரு பொது நினைவு தினத்தை பிரகடனப்படுத்துமாறும், உயிரிழந்த உறவுகளுக்கு சமய ரீதியிலான அனுஷ்டானங்களை மேற்கொள்வதற்கு ஏதுவதாக ஒரு பொது நினைவுத்தூபியை அமைக்க நடவடிக்கை எடுக்குமாறும் மீண்டும் இந்த சபையில் வலியுறுத்துகின்றேன் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
கடந்த 21 ஆம் திகதி 2017 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.
அவர் இதுதொடர்பாக மேலும் உரையாற்றுகையில் –
யாழ்ப்பாண கோட்டையின் புனரமைப்புப் பணிகள் தொடர்பில் நான் ஏற்கெனவே கௌரவ பிரதமர் அவர்களின் அவதானத்துக்குக் கொண்டுவந்தபோது, கௌரவ அமைச்சர் சாகல ரத்நாயக்க அவர்களின் தலைமையில் காலிக் கோட்டை புனரமைப்பு தெடர்பில் ஓர் அறக்கட்டளை அமைக்கப்பட்டுள்ளதாகவும், அதனுடன் இணைந்து யாழ் கோட்டைப் புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள முடியுமென்றும் பிரதமர் அவர்கள் தெரிவித்தார். அதனையும் இந்த சந்தர்ப்பத்தில் இங்கு நினைவுபடுத்த விரும்புகின்றேன்.
அத்துடன் கடந்த கால யுத்தம் காரணமாக உயிரிழந்த எமது மக்களை நினைவுகூரத்தக்க வகையிலும், மரியாதை செலுத்தக்கூடிய வகையிலும் ஒரு பொது நினைவு தினத்தை பிரகடனப்படுத்துமாறும், உயிரிழந்த உறவுகளுக்கு சமய ரீதியிலான அனுஷ்டானங்களை மேற்கொள்வதற்கு ஏதுவதாக ஒரு பொது நினைவுத்தூபியை அமைக்க நடவடிக்கை எடுக்குமாறும் மீண்டும் மீண்டும் இந்த சபையில் கிடைக்கின்ற சந்தர்ப்பங்களில் வலியுறுத்தி வந்திருக்கிறேன்
இவ்வாறான ஏற்பாடுகளை நாம் மேற்கொள்கின்றபொழுது பல்வேறு சர்ச்சைகள் அநாவசியமாக மக்கள் மத்தியில் தோற்றுவிக்கப்பட்டு அவை இனவாத ரீதியாக முன்னெடுக்கப்படுவதை தவிர்த்துக்கொள்ளவும் முடியுமென்று நான் கருதுகின்றேன். குறிப்பாக ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாதம் ஆரம்பமானவுடனேயே ஒரு விடயம் எமது நாட்டில் பாரியதொரு பிரச்சினையாக உருவாக்கப்படுகிறது. அதாவது, மாவீரர்கள் தின கொண்டாட்டத்திற்கு புலிகள் தயாரென்ற ஒரு பிரச்சாரம் தென்பகுதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற அதேநேரம், உயிரிழந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தக்கூட எமக்கு உரிமையில்லையென்ற நிலைப்பாடும் எமது மக்களிடத்திலே ஏற்படுத்தப்படுகிறது.
இந்த நிலைப்பாடானது இந்த அரசாங்கம் தொடர்பிலான எமது நம்பிக்கையைச் சிதைத்து வருவதாகத் தென்படுகின்றது. இது தேசிய நல்லிணக்கம் பற்றிய சிந்தனைகளை புறந்தள்ளும் வகையிலே – இந்த மக்கள் மத்தியில் ஏற்படுகின்றது. எனவே, நான் ஏற்கெனவே வலியுறுத்தியுள்ளமைக்கு அமைவாக யுத்தத்தால் உயிரிழந்த அனைத்து மக்களையும் நினைவுகூரத்தக்க வகையில், ஒரு பொதுவான நினைவுத் தினத்தையும் மத அனுஸ்டானங்களை மேற்கொள்வதற்கு ஒரு பொது நினைவுத் தூபியையும் அமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என அவர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
Related posts:
|
|