யாழ்.வசந்தபுரம் பகுதி மக்களது பிரச்சினைகள் தொடர்பில் ஆராய டக்ளஸ் தேவானந்தா திடீர் விஜயம்!

யாழ்ப்பாணம் கொழும்புத்துறை வசந்தபுரத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அம்மக்களின் அடிப்படைப் பிரச்சினை உள்ளிட்ட ஏனைய விடயங்கள் தொடர்பாகக் கேட்டறிந்து கொண்டார்.
வசந்தபுரத்தில் நேற்றையதினம் (16) இடம்பெற்ற குறித்த சந்திப்பின் போது குடிநீர்ப் பிரச்சினை வீதிப் புனரமைப்பு சனசமூக நிலையப் புனரமைப்பு மைதானப் புனரமைப்பு கழிவு வாய்க்கால் புனரமைப்பு உள்ளிட்ட அடிப்படை விடயங்களில் தாம் எதிர்கொண்டுவரும் இடர்பாடுகள் தொடர்பாக மக்கள் டக்ளஸ் தேவானந்தாவிடம் எடுத்துக் கூறியிருந்தனர்.
தற்போது அப்பகுதியில் 84 குடும்பங்கள் வசித்துவரும் நிலையில் அங்குள்ள மக்கள் குடிநீரைப் பெற்றுக் கொள்வதில் பல்வேறு இடர்பாடுகளை எதிர்கொண்டு வருகின்றனர். 1995ஆம் ஆண்டிற்கு முன்னர் அப்பகுதியில் குழாய் வழியூடான நீர் வசதித் திட்டம் இருந்த போதிலும் நாட்டில் ஏற்பட்ட யுத்த சூழல் காரணமாக அத்திட்டம் முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் சுட்டிக்காட்டினர்.
அத்துடன் மழை காலங்களில் சீரான வடிகான் வசதிகள் இல்லாமையால் குடியிருப்புப் பகுதிகளில் வெள்ள நீர் தேங்கி நிற்பதாகவும் இதன் காரணமாக தொற்றுநோய்த் தாக்கத்திற்கு இலக்காகி இடர்பாடுகளை எதிர்கொள்வதாகவும் இதற்குச் சரியான வடிகான்கள் அமைக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் மக்கள் சுட்டிக்காட்டியிருந்தனர்.
மக்களின் குறித்த பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்ட டக்ளஸ் தேவானந்தா மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணும் பொருட்டு தேவைப்பாடுகளைத் தெளிவுபடுத்தி தமக்கு கோரிக்கைக் கடிதமொன்றை கையளிக்குமாறும் கேட்டுக் கொண்டார்.
இதன்போது கட்சியின் யாழ்ப்பாணப் பகுதி நிர்வாகச் செயலாளர் துரைராஜா இளங்கோ (றீகன்) உடனிருந்தார்.
Related posts:
|
|