யாழ் மாநகரசபையால் அதிகரிக்கப்பட்ட குடிநீர்க் கட்டண அதிகரிப்பை குறைக்க நடவடிக்கை மேற்கொண்டு தாருங்கள் – டக்ளஸ் எம்.பி.யிடம் குருநகர் தொடர்மாடி பகுதி மக்கள் கோரிக்கை!

Wednesday, February 13th, 2019

யாழ் மாநகர சபையால் குடிநீருக்கான கட்டணம் அதிகரிக்கப்பட்டமை எமக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கட்டண அதிகரிப்பை நீக்கி மீண்டும் பழைய கட்டணத்திற்கே எமக்கான குடிநீரை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்து தரவேண்டும் என குருநகர் தொடர்மாடி பகுதி மக்கள் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குருநகர் தொடர்மாடி பகுதி மக்களது பிரச்சினைகள் மற்றும் தேவைப்பாடுகள் தொடர்பில் ஆராய்ந்தறிவதற்காக செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா இன்றையதினம் அப்பகுதிக்கு நேரில் சென்றிருந்தார்.  இதன்போதே அப்பகுதி மக்கள் இவ்வாறு கோரிக்கை விடுத்தனர்.

மேலும் அவர்கள் தெரிவிக்கையில் –

யாழ் மாநகரின் தற்போதைய ஆட்சியாளர்கள் மக்களின் நலன்களை கருத்தில் கொள்ளாது மக்களை மேலும் வறுமை நிலைக்கு கொண்டுசெல்லும் செயற்பாடுகளையே முன்னிறுத்தி வருகின்றனர்.

கடந்த காலங்களில் நீங்கள் அமைச்சராக இருந்தபோது இலவசமாக பல உதவித் திட்டங்களை பெற்றுத்தந்தது மட்டுமல்லாது எமக்கு தொழில் வாய்ப்பையும் உருவாக்கி தந்திருந்தீர்கள். அத்துடன் இந்த தொடர்மாடி குடியிருப்பை மீளவும் அமைத்து எமக்கு வழங்கியிருந்தீர்கள்.

அதுமட்டுமல்லாது இந்த யாழ் மாநகர சபை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோது எமது மக்கள் குடிநீருக்காகவோ அன்றி கழிவுகளை அகற்றுவதிலோ எந்தவொரு பிரச்சினைகளையும் நாம் எதிர்கொண்டது கிடையாது. ஆனால் தற்போது அவ்வாறான ஒரு நிலை இல்லாதுள்ளது.

கடந்த காலத்தில் வரையறுக்கப்பட்ட வழங்கலுக்காக 65 ரூபாவாக இருந்த குடிநீருக்கான கட்டணம் 135 ரூபாவாக அதிகரித்தமையானது வறுமை நிலையில் இருக்கும் எமது இயல்பு வாழ்வை பெரிதும் பாதித்துள்ளது.

அந்தவகையில் குறித்த பிரச்சினைக்கான தீர்வை பெற்றுத்தர தாங்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

மக்களது குடிநீர் பிரச்சினை தொடர்பில் அவதானம் செலுத்திய செயலாளர் நாயகம்  டக்ளஸ் தேவானந்தா அவர்கள் துறைசார் தரப்பினரின் கவனத்துக்கு இவ்விடயத்தை கொண்டு செல்வதாகவும், இது தொடர்பில் மக்கள் மாநகரிடம் நீதி கேட்டு போராடுவதன் மூலமே நியாயமான தீர்வை எட்ட முடியும் என்றும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: