யாழ். போதனா வைத்தியசாலை விவகாரங்கள் அமைச்சரவையில் பிரஸ்தாபிக்கப்படும் – அமைச்சர் டக்ளஸ் உறுதி!

Sunday, January 23rd, 2022

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் யாழ் கிளையின் முக்கியஸ்தர்கள்,  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து யாழ் போதனா வைத்தியசாலையின் பல்வேறு தேவைகள் குறித்து கலந்துரையாடினர்.

வைத்தியசாலைக்குத் தேவையான மருத்துவர், தாதியர், சுகாதார பணியாளர் ஆளணி குறைபாடு தொடர்பாக சுட்டிக்காட்டிய அவர்கள், இதுவிடயத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சுகாதார அமைச்சரின் கவனத்துக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்ற கோரிக்கையை விடுத்தனர்.

மேலும், யாழ் போதனா வைத்தியசாலைக்கு ஈடான தர நிலையிலுள்ள நாட்டின் ஏனைய பல வைத்தியசாலைகளுடன் ஒப்பிடும்போது யாழ் போதனா வைத்தியசாலைக்கான மருத்துவ ஆளணிகள் குறைவாக இருப்பதாக சுட்டிக்காட்டிய அவர்கள், இதனை அதிகரித்தாலே வைத்தியசாலை நோயாளிகளுக்கு உரிய சேவையை முழுமையாக வழங்க முடியும் என்றும் சுட்டிக்காட்டினர்.

போதிய மருத்துவ, தாதிய மற்றும் சுகாதார உதவிப் பணியாளர் பற்றாக்குறை காரணமாக பல சத்திர சிகிச்சை பிரிவுகள், விடுதிகள் முழு அளவில் நோயாளர்களுக்கான சேவையை வழங்க முடியாதிருப்பதாகவும், குறிப்பாக பல சத்திர சிகிச்சைகளை உரிய முறையில் நடாத்த முடியாதிருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இவற்றுக்கு மேலதிகமாக, வைத்தியசாலைக்குள் நிலவும் நிர்வாக ரீதியான சில உள்ளக பிரச்சினைகள் காரணமாக சிறந்த மருத்துவ சேவைகளை வழங்கக்கூடிய மருத்துவ வல்லுநர்கள் சிலர் யாழ் போதனா வைத்தியசாலைக்குப் பணிக்கு வர முடியாத நிலை காணப்படுவதாகவும் இதன்போது அமைச்சரின் கவனத்துக்குக் கொண்டு வந்தனர்.

இவற்றைச் செவிமடுத்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வைத்தியசாலையின் இந்தத் தேவைகள் தொடர்பான விபரங்களை எழுத்து மூலம் தமக்கு அறியத்தந்தால்,  அமைச்சரவைக் கூட்டத்தின்போது சுகாதார அமைச்சரின் கவனத்துக்கு அவற்றை எடுத்துச்சென்று தீர்வுகாண முடியும் என்று குறிப்பிட்டதுடன்,  அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் யாழ் கிளை பிரதிநிதிகள் சுகாதார அமைச்சரை நேரில் சந்தித்து  வைத்தியசாலையின் தேவைகள் குறித்துக் கலந்துரையாட ஏற்பாடு செய்து தருவதாகவும் உறுதியளித்தார் மேற்படி சந்திப்பு அமைச்சரின்  கிளிநொச்சி மாவட்ட மேலதிக இணைப்பாளர் றுஷாங்கனின் ஏற்பாட்டில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது

Related posts:

காணிப் பிணக்குகளைத் தீர்ப்பதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் - நாடாளுமன்றில் டக்ளஸ் தேவ...
அரச அலுவலகங்களில் தகுதியான மொழி பெயர்ப்பாளர்கள் நியமிக்கப்பட வேண்டும் - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி....
இரு மொழிக் கொள்கை தொடர்பில் பொது நிர்வாக அமைச்சுடன் இணைந்து ஒரு பொறிமுறையை உருவாக்க வேண்டும் - நாடாள...